அலெக்ஸாண்டர் ஹம்போல்ட் ஜெர்மன் புவியியலாளர்

அலெக்ஸாண்டர் ஹம்போல்ட் ஜெர்மன் புவியியலாளர்

ஜெர்மனி புவியியலாளரும் எழுத்தாளருமான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செழிப்பான குடும்பத்தில் (1769) பிறந்தார். அரசு அதிகாரியான தந்தையை 9 வயதில் இழந்தார். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். தாவரங்கள், பூச்சிகள், சிப்பிகளைச் சேகரித்து அவற்றின் பெயர்களை எழுதி பட்டியிலிடுவது இவரது பொழுதுபோக்கு.

l

பட்டப்படிப்பு முடித்ததும், சுரங்க மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். இயற்கை பற்றிய ஆராய்ச் சியில் ஆர்வம் அதிகரித்ததால், பிரபல உயிரியலாளர்களுடன் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்பெயினில் 5 ஆண்டுகளுக்குமேல் தங்கி ஆய்வு செய்தார்.

l

பல்வேறு நாடுகளிலும் பயங்கரமான காடுகள், ஆறுகள், மலைகளில் பயணம் செய்தார். பயண அனுபவங்கள் குறித்து இவர் எழுதிய 30 நூல்கள் உலகப் புகழ் பெற்றன. இவரது நூல்கள், பல இளம் விஞ்ஞானிகள் உருவாகக் காரணமாக அமைந்தன. பரிணாமக் கொள்கையின் தந்தையான டார்வினுக்கும் இவரது நூல்கள்தான் தூண்டுகோலாக இருந்தன.

l

இவரது 'ஐசோதெர்ம்' வரைபடம், அடுத்தடுத்து பல்வேறு இயற்கை அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட அறிஞர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. அதில் இவர் வழங்கியுள்ள தகவல்களில் நிலப்பரப்பி யல், புவியியல், தாவரவியல், தொல்லியல், விலங்கியல், கடலியல், இயற்கை அறிவியலின் பல்வேறு களங்களும் அடங்கியுள்ளன.

l

நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறை, மலேரியா நோய்க்கு மருந்தான குயினைன் தயாரிக்கப் பயன்படும் சின்கோனா மரப்பட்டை குறித்த தகவல்கள், பல்வேறு இடங்களின் நீர் ஆதாரங்கள், மழைப் பொழிவு நிலவரங்கள் என அந்தந்த பகுதி மக்களிடம் இருந்து பல அரிய விஷயங்களைக் கற்றார்.

l

பயணத்தின்போது பல சோதனைக் கருவிகளை பெட்டிப் பெட்டியாக எடுத்துச் செல்வார். தான் செல்லும் இடங்களில் ஆக்சிஜன், வானத்தின் நீலநிற அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம், உயரம், வெப்பநிலை, நில அமைப்பு, காந்தப்புலத்தின் வலிமை, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கை என அனைத்து விவரங்களையும் கவனமாக குறிப்பெடுப்பார்.

l

மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல், மொழி, பொருளாதாரம் குறித்தும் ஆராய்ந்தார். அறியப்படாத பல இடங்கள், ஏராளமான உயிரினங்கள் குறித்து இவரது குறிப்புகள் மூலம்தான் உலகுக்குத் தெரிய வந்தன.

l

நில அமைப்பு, இயற்கைச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் வாழ்வது குறித்து விளக்கியதால் இத்துறையின் முன்னோடி என போற்றப்பட்டார். 'இயற்கை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் ஆகியவை பரஸ்பரம் தொடர்புடையவை. இவை ஒருங்கிணைப்புடன் இயங்கினால்தான் இயற்கை சமநிலையில் இருக்கும்' என்பதைக் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 'தி யுனிட்டி ஆஃப் நேச்சர்' என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.

l

இயற்கை அறிவியலில் ஏறக்குறைய அனைத்து பிரிவுகளிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்கியவர். உலகின் பல இடங்கள், தாவரங்கள், விலங்கினங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தைக் கண்டறிந்தவர் இவர்தான் என்றும் கருதப்படுகிறது.

l

5 தொகுதிகளாக வந்த இவரது 'காஸ்மோஸ்' என்ற நூல் ஆங்கி லம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் புகழ் பெற்றது. உயிரிப் புவியியல் துறையின் முன்னோடியான அலெக் ஸாண்டர் வான் ஹம்போல்ட் 90-வது வயதில் (1859) மறைந்தார். 

Comments