கடலுக்குள் மேயும் பசு!

கடலுக்குள் மேயும் பசு!

வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் கடல் பசுவைச் சேர்த்துள்ளது இந்தியா. இவை அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்கள் என்று அறிவித்துள்ளது ஐநா சபையின் உலக இயற்கை வளப் பாதுகாப்பு அமைப்பு.  நம்மைக் கவர்ந்த கதைகளில், கற்பனைக் கதாபாத்திரங்களுக்கெனத் தனியிடம் உண்டு. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், வேற்றுக்கிரக மனிதர்கள் (ஏலியன்ஸ்) வரிசையில் கடல்கன்னியையும் சேர்க்கலாம். தலை முதல் இடை வரையில் பெண்ணைப் போலவும், கால் பகுதி மீனின் வாலைப் போலவும் இருப்பதே கடல்கன்னி என்றும், அது மனிதர்களுடன் பழகக்கூடியது என்றும் பல்வேறு நாட்டு மீனவர்கள் கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இவையெல்லாம் தவறான நம்பிக்கைகள்தான். "உண்மையில், கடல்கன்னி என்றொரு உயிரினம் இல்லவேயில்லை.கடல்பசுவைத்தான் மீனவர்கள் கடல்கன்னி என்று தவறாகக் கருதியிருக்கக்கூடும்" என்கிறார்கள் அறிவியலாளர்கள். கடலில் வாழ்கின்ற டால்ஃபின் போன்ற பாலூட்டிகளில் ஒன்றான கடல்பசுவைத் தமிழக மீனவர்கள் 'ஆவுளியா'என்று அழைக்கிறார்கள். இதன் கண்கள், மூக்குத் துவாரம் போன்றவை பசுவின் முக அமைப்பைப் போன்று இருப்பதாலும், கடலுக்கு அடியில் உள்ள புற்களை மேய்வதாலும் இவை கடல்பசு என்று அழைக்கப்படுகிறது. இதன் வாய் பன்றி வாயைப் போல இருப்பதால், கடல் பன்றி என்று அழைப்போரும் உண்டு. இதன் உடல் கொஞ்சம் டால்ஃபினைப் போன்று இருந்தாலும், டால்ஃபினுக்கு இருப்பது போன்ற முதுகுத்துடுப்பு இதற்கு இல்லை. டால்ஃபினைப் போல் தண்ணீருக்கு வெளியே துள்ளிக் குதிக்கும் திறனும் இவற்றுக்குக் கிடையாது. கடலில் வாழும் பாலூட்டிகளில் இவை சுத்த சைவம். கடல் புற்கள் உள்ளிட்ட தாவரங்களைத் தவிர, வேறு எதையும் இவை தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. நன்கு வளர்ந்த ஆவுளியா மூன்று மீட்டர் நீளமும், 400 கிலோ எடையும் கொண்டிருக்கும். ஆழம் குறைந்த கடலில் வசிப்பதால், மீனவர் வலையில் சிக்குவதாலும், தோல், எண்ணெய்க்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதாலும் இவை வேகமாக அழிந்துவருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக, வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது இந்தியா. இவை அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்கள் என்று அறிவித்துள்ளது ஐநா சபையின் உலக இயற்கை வளப் பாதுகாப்பு அமைப்பு. தமிழகத்தின் மாநில விலங்காக வரையாடு இருப்பதைப் போல, அந்தமான் - நிகோபார் தீவுகளின் விலங்காகக் கடல்பசு திகழ்கிறது! 

Comments