உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* ரஷியாவில் மாஸ்கோ நகரில் பிளாஸ்டிக் சரக்கு கிடங்கு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 8 வீரர்கள் அதில் சிக்கி, கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.

* தாய்லாந்து நாட்டில் யாலா மாகாணத்தில் நேற்று பிரிவினைவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் உள்ள ஒரு முனையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் ஒரு வாகனத்தை ஓட்டி வந்து நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த முனையத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் அந்த வாகனம் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு படையினரின் சோதனையில் அந்த வாகனத்தில் பயப்படும்படியாக ஏதும் இல்லை என கண்டறிந்தனர். அதன்பின்னரே அங்கு நிம்மதி நிலவியது.

* சிரியாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் அதிபர் ஆதரவு படையினர் புதிய தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

* அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணம், சார்லட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் (வயது 43) என்பவர் போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், அங்கு அந்த இனத்தவர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடந்தது. போலீஸ் நிலையத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் கண்டன பேரணி நடத்தினர். அதே நேரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதுமில்லை.

Comments