சீரடி சாய் பாபா பக்தர்களிடம் குரு தட்சணை பெற்றதன் நோக்கம்

சீரடி சாய் பாபா பக்தர்களிடம் குரு தட்சணை பெற்றதன் நோக்கம்

இன்று கொடுப்பவர் நாளை பெறுகிறார். இன்று விதைத்தவர் நாளை அமோகமாக அறுவடை செய்கிறார். செல்வம் என்பது தர்ம காரியங்களுக்கு ஒரு சாதனம். நீங்கள் எப்போதாவது கொடுக்காததை இப்போது பெறுவதில்லை. எனவே பெறுவதற்கு சிறந்த வழி கொடுப்பதுதான். அதை பாபா தம் தினசரி வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார். பாபா சீரடிக்கு வந்த புதிதில் யாரிடமும், எதுவுமே கேட்கவில்லை. சாப்பாடு கூட அவர் கேட்டு வாங்கி சாப்பிட்டதில்லை. துவாரகமயி மசூதியில் வசிக்கத் தொடங்கிய பிறகு பாபா தனது பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக வழங்கினார். அந்த சமயங்களில் பக்தர்களில் யாராவது ஓரிருவர் பாபா முன்பு செப்புக் காசுகளை வைத்து விட்டு செல்வார்கள். முதலில் சாய்பாபா அதை கண்டுகொள்ளவில்லை. பிறகு அவர் அந்த நாணயங்களை கையாளத் தொடங்கினார். பாபா தான் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளும் செப்புக் காசுகளை உதி நெருப்புக் குண்டத்துக்கு தேவையான விறகுகள் வாங்குவார். ஒரு நாள் கூட அவர் தமக்காக பணத்தை சேர்த்து வைத்ததே இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இருந்ததில்லை.சாய்பாபாவின் புகழ் மராட்டியம் மாநிலத்தையும் கடந்து மற்ற பிரதேசங்களுக்கும் பரவியபோது அவரை பார்த்து ஆசி பெற தினம், தினம் நூற்றுக்கணக்கானோர் வந்தனர். இந்த நிலையில்தான் பாபாவிடம் "எங்கே எனக்குரிய தட்சணை. கொடுத்து விட்டுப் போ" என்று கேட்கும் பழக்கம் தோன்றியது. பணக்காரர், ஏழை, இந்து-, முஸ்லிம், தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் பார்க்காமல் அவர் "குருதட்சணை" கேட்டார். பாபா பின்பற்றிய இந்த வழக்கம் முதலில் சில காலத்துக்கு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.உலக சுகங்களைப் புறக்கணித்த சாதுவான, கண்கண்ட தெய்வமான, அவதாரப் புருஷரான சாய்பாபா ஏன் இப்படி பணம், பணம் என்று தட்சணை கேட்டு வாங்குகிறார் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டனர். ஆனால் பக்தர்கள் மனதில் அலையடித்த இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விரைவில் விடை கிடைத்தது.

தட்சணையை பாபா பெற்றதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள்:

* மக்களிடம் பணம் மீது இருக்கும் மோகம் குறைய வேண்டும்.

* பணத்தை தர்மம் செய்வதன் அவசியத்தை உணர வேண்டும்.

* பிறருக்கு பணம் கொடுக்கும் போது பணிவுடனும், தாராள மனதுடனும் இரக்கத்துடனும் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.

* பணம்தான் பிரதானம் என்று நினைக்காமல் மனம் தூய்மை அடைய வேண்டும்.

* நீ பெறுவதை விட அதிகமான அளவில் கொடு. அப்படியானால் நீ கொடுப்பதை விட அதிக அளவில் மீண்டும் பெறுவாய் என்பதை உணரவும்.

இப்படி பல்வேறு விஷயங்களை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பாபா தனது பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக தட்சணை பெற்றார். ஆன்ம மேம்பாடு அடைய விரும்புபவர்களிடம் காமம், கோபம், பேராசை இருக்கக் கூடாது. இம் மூன்றையும் தம் பக்தர்களிடம் இருந்து அகற்றவே பாபா தட்சணை பெற்றார்.அவர் யாரிடம் எல்லாம் மனம் உவந்து தட்சணை பெற்றாரோ.... அதற்கு ஏற்ப அற்புதங்கள் நடந்தது. அரசு ஊழியரிடம் அவர் ரூ.5 தட்சணை வாங்கினால் அவருக்கு ரூ.10 சம்பள உயர்வு கிடைத்தது. வசதி படைத்தவர்கள் ரூ.50 தட்சணை கொடுத்தால், தொழிலில் ரூ-.100 லாபம் பெற்றனர். சிலரிடம் அவர், "ஆறு ரூபாய் தட்சணை கொடு" என்று வலியுறுத்தி கேட்பார்.அதற்கு காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகிய 6 வேண்டாத குணங்களை விட்டு விடு என்று பாபா சொல்வதாக அர்த்தமாகும். சில ஏழைகளிடம் பாபா தட்சணையை வற்புறுத்தி கேட்டுப் பெற்றதுண்டு. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஏற்பட்டிருந்த கிரக தோஷங்கள் நீங்கியது பிறகுதான் தெரிய வந்தது. தட்சணை பெறும் விஷயத்தில் இப்படி பலவிதமாக நடந்து கொண்ட பாபா, அந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கும், பொது சேவைக்கும் பயன்படுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் தட்சணை பணத்தை மீதம் வைக்காமல் பிரித்துக் கொடுத்து விடுவார். அவர் மகா சமாதி அடையும் நாள் வரை 12 ஆண்டுகள் இந்த பழக்கத்தை வைத்திருந்தார். இந்த 12 ஆண்டுகளில் சாய்பாபா 13 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை தட்சணையாக பெற்று வினியோகித்ததாக கணிக்கப்பட்டுள்ளது.தட்சணை பெற்று சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். பாபாவுக்கு தட்சணை கொடுத்த ஒவ்வொருவரும் அதை இரட்டிப்பாக திரும்பப் பெற்றனர். இந்த அற்புதம் இப்போதும் கூட நடக்கிறது. பாபா ஆலயங்களுக்கு மனம் உவந்து பணிவிடை செய்பவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகிறது. இது நிதர்சனமான உண்மை.பாபா தன் வாழ்நாளில் தட்சணை பெற்று நிகழ்த்திய அதிசயங்கள் போல யோகா கலை மூலமாகவும் அற்புதங்கள் செய்தார்.

Comments