சீரான வாழ்வருளும் சித்துக்கண் மாரியம்மன்

சீரான வாழ்வருளும் சித்துக்கண் மாரியம்மன்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில், கீழ ஆண்டாள் வீதியில் உள்ளது சித்துக்கண் மாரியம்மன் ஆலயம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. மூன்று நண்பர்கள். அவர்களில் ஒருவர் பூசாரி மூவரும் குளிப்பதற்காக அருகே இருந்த அகன்ற காவிரியை நோக்கி பேசியபடியே நடந்தனர். ஸ்ரீரங்கத்தைத் தொட்டபடி, அடர்ந்த கருவேல மரக் காடுகள் வழியாக வந்துகொண்டிருந்தது காவிரி. இவர்கள் அந்தச் செடிகளின் இடையே நடந்து கொண்டிருந்தபோது அந்த மூவரில் ஒருவரின் பெயரைக் கூறி  யாரோ அழைக்கும் குரல் கேட்டது. மூவரும் திரும்பினர். யாரையும் காணோம். நடந்தனர். மறுபடியும் அதே அழைப்புக் குரல். அது ஒரு புதரிலிருந்து வருவதை உணர்ந்த மூவரும், அந்தப் புதரை நோக்கி நடந்தனர். எதுவும் தெரியவில்லை. புதரின் உள்ளே தேடத் தொடங்கினர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்படையச் செய்தது.

 ஆம், புதரின் நடுவே ஓர் அம்மன் சிலை இருந்தது. யார் இதை இங்கே கொண்டு வந்து போட்டிருப்பார்கள் என அவர்கள் மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. உடனே பூசாரி சிலையைத் தூக்கினார். தூக்க முடியவில்லை. மற்ற இருவரையும் உதவிக்கு அழைத்தார். மூவரும் சேர்ந்து அந்தச் சிலையைக் தூக்க முயன்றனர். சுமார் இரண்டடி உயரமே உள்ள அந்தச் சிலையை மூவராலும் தூக்க முடியவில்லை. பூசாரியின் மனதில் ஒரு மின்வெட்டு. உடனே பூசாரி தன்னிடமிருந்த கத்தியால் தனது கையில் கீறிக்கொண்டார். அவர் கையில் இருந்து ரத்தம் வழிந்து, சிலையின் மேல் விழுந்தது. என்ன ஆச்சர்யம்! இப்போது அந்த சிலையை மூவரும் எளிதாகத் தூக்கினர். ஊர் பெரியவர்கள் ஒன்று கூடினர் ஊரின் நடுவே அந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. அந்த அம்மனே அருள்மிகு சித்துக்கண் மாரியம்மன்.

ஆலயம் தென்திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறை முகப்பில் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க உள்ளே கருவறையில் அன்னை சித்துக்கண் மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் இன்முகம் தவழ அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது வலதுமேல் கரத்தில் நாகாபரணத்துடன் உடுக்கையையும், மேல் இடது கரத்தில் பாசத்தையும், கீழ் வலது கரத்தில் சூலத்தையும், கீழ் இடது கரத்தில் குங்குமச் சிமிழையும் தாங்கி அருள் பாலிக்கிறாள். அன்னையின் சந்நதிக்கு வலதுபுறம் மதுரை வீரன் சந்நதி உள்ளது. மதுரை வீரன், பொம்பி, வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி ஆகியோர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறனர். இந்த ஆலயத்திற்கு இரண்டு கன்னிப் பெண்கள் திருவிழா நாயகிகளாக, ஆலயச் சடங்குகளை முன் நின்று நடத்தித் தர தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வுக்காக வரும் கன்னிப் பெண்கள் அருள்வந்து சாமியாடுவது சகஜம். அப்போது ஒரு தட்டில் ஏழு எழுமிச்சை பழங்களை வைத்து அதனுள்ளே எத்தனை விதைகள் உள்ளன என கேட்கப்படுகிறது.

அங்குள்ளவர்களில் இருவர் பதில் கூற உடனே பழங்களை அறிந்து விதைகள் எண்ணப்படுகின்றன. என்ன ஆச்சர்யம்? அந்தப் பெண்களின் விடை சரியாக இருக்கிறது. இது முதல் தேர்வு. அடுத்து வெள்ளியாலான சிறிய கிளி ஒன்றைக் கொண்டுபோய் பதுக்கி வைக்கிறார்கள் - அருகே நிற்பவரின் சட்டைப் பையிலோ அல்லது நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு வீட்டின் பரணிலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டில் உள்ள அரிசி டப்பாவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இரு கன்னிப் பெண்களும் நிதானமாக நடந்து சென்று தாங்களே வைத்ததுபோல் அந்தக் கிளி சிலைகளை எடுத்து வர, கூட்டத்தினர் வியந்து பாராட்டுவார்கள். இரண்டு முயற்சிகளிலும் தேர்ச்சி பெறும் கன்னிப் பெண்கள், 'பெண் மருளாளி' என்று அழைக்கப்படுகிறார்கள். ஆண் மருளாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? மருளாளி சூடக்கூடிய வெள்ளிக் கிரீடத்தையும் இடை மணியையும் எங்கேயாவது பதுக்கி வைத்து விட அருள் வந்த ஆண் அதைக் கண்டு பிடிப்பதுடன் ஐந்து அடி நீளமுள்ள கூர்மையான கத்தியின் மேல் ஏறி நின்று குறியும் சொல்லக்கூடியவர் ஆண் மருளாளராவர்.

சித்திரை மாதம் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவும் பூச்சொரிதலும் வெகு பிரசித்தம். அன்று காலை மேலச் சிந்தாமணி காவிரி கரையிலிருந்து கரகம் புறப்படும். இரண்டு கன்னிப் பெண்களும் காளி கரகம், மாரி கரகம் என்று இரு கரகங்களை சுமந்துவர மதுரை வீரசுவாமி, கருப்பண்ணசாமி, அக்னி சட்டி சூலாயுதம் முருகவேல் பால்குடம், தீர்த்த குடம், அலகுக் காவடிகள்  முதலியன புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அன்னையின் சந்நதியை வந்தடையும். வரும் வழியில் பெண் மருளாளிகள் கேட்பவர்களுக்கெல்லாம் அருள் வாக்கு சொல்வதுண்டு. ஆடி மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக் கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.

குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் தொட்டில் வாங்கி அன்னையின் சந்நதியில் கட்ட, அவர்கள் வேண்டுதல் பலிப்பது கண்கூடு என்கின்றனர். பெண் மருளாளிகளும் கன்னிப் பெண்கள்தானே! அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் நினைப்பது சகஜம்தானே! அவர்களுக்கு மணமகன் தேடும் முன் பெற்றோர் அன்னையின் சந்நதிக்கு பூ பழத்தட்டுடன் வந்து அன்னையிடம் பெண்ணின் திருமணம் பற்றி அறிவிக்கின்றனர். பின்னரே மணமகன் தேடும் பணி தொடங்குகிறது. இவர்கள் திருமணமாகிச் சென்ற பின்னர் புதிய பெண் மருளாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பழைய மருளாளிகள் விபூதி பூசி ஆசீர்வதிப்பதுடன் இவர்கள் பணி நிறைவு பெறுகிறது.

Comments