தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பொதுநல மனு

சுப்ரீம் கோர்ட்டில் பள்ளி, உயர்கல்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலசங்கத்தின் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ. வெளியிடும் தகுதி பட்டியலின் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. நியமித்த தனி அதிகாரி மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, எல்.என்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. வக்கீல் ஜி.எஸ்.மணி தனது வாதத்தில் கூறியதாவது:-

கூடுதல் கல்வி கட்டணம்

இதுவரை சி.பி.எஸ்.இ. தகுதி பட்டியலை வெளியிடாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு கல்வி கட்டணமாக சுமார் ரூ.50 லட்சம் வரை வசூலித்து உள்ளன. கல்வி கட்டண நிர்ணய குழு ரூ.2.5 லட்சம் மட்டுமே நிர்ணயித்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு சி.பி.எஸ்.இ. நிறுவனம் 85 சதவீத தகுதி பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும். அந்த பட்டியல் வெளியிட்டதும் இதற்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி மருத்துவ கல்வி சேர்க்கைக்கான செயல்பாடுகளை தொடங்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகள் நேரடியாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று கூறினார்.

விதிமுறைகள்

புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வெங்கட்டரமணி, ஏற்கனவே இதுகுறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கையை இந்த குழுதான் தீர்மானிக்கிறது. புதுச்சேரியில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகள், 5 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. மாநில கோட்டாவில் 284 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறித்து அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கல்லூரிகள் வழங்குகின்றன என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மாணவர்கள் 3 கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, அது மாணவர்கள் விருப்பம் என்று கூறினார்.

மனு தள்ளுபடி

இதற்கு நீதிபதிகள் முதல் கலந்தாய்வு முடிந்துவிட்டது என்றால் இந்த கலந்தாய்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களை காண்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.மனுதாரர் தரப்பில் நாங்கள் எங்களிடம் உள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில் வாதாடுகிறோம். உடனடியாக அப்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரையும் எங்களால் அழைத்துவர முடியாது என்று கூறினார்.அதற்கு நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல மனுதாரர் தரப்பில் மாணவர் சேர்க்கையில் தவறுகள் நிகழ்ந்ததாகவும் உறுதியாக கோர்ட்டு முன்பு நிரூபிக்க முடியவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Comments