தமிழர்க்குப் பெருமை தந்த தமிழர்!

தமிழர்க்குப் பெருமை தந்த தமிழர்!

சென்ற ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டபோது, சிங்கப்பூரின் முன்னாள் குடியரசுத் தலைவரான 91 வயது நிரம்பிய எஸ்.ஆர்.நாதனைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பனிடம் கேட்டுக் கொண்டோம். அமைப்பாளர்களின் பெரு முயற்சியால் எஸ்.ஆர்.நாதனைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடுகிற வாய்ப்பு கிடைத்தது.1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது. நம் நாட்டைப் போல் போராடிப் பெற்ற சுதந்திரம் அல்ல அது. மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் விடுவிக்கப்பட்ட நாளே சிங்கப்பூரின் விடுதலை நாள்.அன்றைய சிங்கப்பூரின் நிர்கதியான நிலையை எண்ணி அந்நாட்டின் மக்கள் தலைவர் லீ குவான் யூ கண் கலங்கினார். இதை ஊடகங்கள் உலகறியச் செய்தன. சிங்கப்பூர் தனி நாடு. அதற்கு உலக நாடுகளிடையே ஓர் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். கனிம வளங்கள் இல்லை. அனைத்திற்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்திருக்கும் அவல நிலை. உள் கட்டுமான வசதிகள் அனைத்தையுமே புதிதாகத்தான் உருவாக்க வேண்டும். இதுதான் சுதந்திர சிங்கப்பூரின் தொடக்க நிலை.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட வெளியுறவு அமைச்சகப் பணிக்கு அரசால் நியமிக்கப்பட்டார் எஸ்.ஆர். நாதன்.அப்போது சிங்கப்பூருக்கென்று ஒரு தனி வெளியுறவுக் கொள்கை உருவாகவில்லை. துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணி என்று திட்டவட்டமாக வகுத்து அறிவிக்க முடியாத ஆரம்பகட்டம். இத்தகைய சிக்கலான சூழலில் எஸ்.ஆர். நாதன் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துள்ளார்.இவரது உழைப்பு, நுட்பம், அணுகுமுறை போன்ற முக்கியத் தலைமைப் பண்புகள் யாவும் அன்றைய பிரதமர் வீகுவான் யூ வுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக எஸ்.ஆர்.நாதன் அப்போது விளங்கினார்.1970-ஆம் ஆண்டு பிரதமர் லீ குவான் யூ உலகநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் என்ற தனி நாட்டிற்கான ஆதரவைத் திரட்டவும், சிங்கப்பூரின் நிலைகுறித்து மற்ற நாட்டுத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணமாக அது விளங்கியது.பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ராஜரத்தினம், அரசு அதிகாரி எஸ்.ஆர்.நாதன் ஆகிய இருவர் மட்டுமே அரசுப் பிரதிநிதிகளாக இச்சுற்றுப் பயணத்தில் சென்றனர். வெளியுறவு அமைச்சர் எஸ். ராஜரத்தினம் ஒரு தமிழர். நடமாடும் பல்கலைக் கழகம் என்ற அழைக்கப்பட்ட பேரறிவாளர். லீ குவான் யூ வோடு அரசியல் பணியாற்றிய நான்கு முக்கிய சிங்கப்பூர்த் தலைவர்களில் ஒருவர். மிக நீண்டகாலம் (1959 முதல் 1988 வரை)சிங்கப்பூரின் அமைச்சர், துணைப் பிரதமர் ஆகிய முக்கியப் பதவிகள் வகித்தவர். இவரிடம் இருந்த நெருக்கம் எஸ். ஆர். நாதனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளது.இலங்கை, இந்தியா, தான்சானியா, ஜாம்பியா, அரபு நாடுகள், சோலியத் யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான நீண்ட பயணமாக பிரதமரின் உலகச்சுற்றுப் பயணம் திகழ்ந்தது.இதில் பிரதமருடன் இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் கலந்துகொண்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதோடு உலகத் தலைவர்களோடு பிரதமர் நடத்திய அனைத்து உரையாடல்களிலும் உடனிருந்து உயிரோட்டமாகப் பணியாற்றினார் எஸ்.ஆர்.நாதன்.அமெரிக்காவில் மட்டும் மூன்று வார காலத்திற்கும் மேல் பிரதமர் லீ தங்கியிருந்து அங்குள்ள ஹார்வார்டு, யேல், பிரின்ஸ்டன் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.அப்போதும் ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்பது அமெரிக்கா மற்றும் பிற நாட்டுத் தலைவர்களை அதிகாரிகளைச் சந்தித்து உரையாடும் பணிகளை மேற்கொண்டார். உடனிருந்த எஸ்.ஆர்.நாதனுக்கு ஏற்கெனவே அரசியல், நிர்வாக அறிவும் அனுபவமும் இருந்ததால் உலக அரசியல் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட்டது.சுற்றுப் பயணம் முடிந்து சிங்கப்பூர் திரும்பிய சில நாட்களில் காமன்வெல்த் மாநாட்டை சிங்கப்பூரில் சிறப்பாக நடத்தியதில் எஸ்.ஆர்.நாதன் பெரும் பங்காற்றினார். உலகத் தலைவர்களோடு இவருக்கு மேலும் நெருக்கம் ஏற்பட இம்மாநாடு வழிவகை செய்தது.நெருடிக்கடியான கட்டத்தில் வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளர் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றிய காரணத்தால் எஸ்.ஆர்.நாதனுக்கு 1971-இல் மிக முக்கியத் துறையான உள்துறையின் செயலாளர் பணி வழங்கப்பட்டது.புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் கோ எஸ்.ஆர்.நாதனை அழைத்து பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் இயக்குநராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.அவ்வாறு நாதன் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவுடன் பாதுகாப்பு அமைச்சரே இவருடன் நேரடியாகக் கலந்து பேசி நாட்டின் பாதுகாப்பு குறித்த சில முக்கிய முடிவுகளை எடுத்தார்.1978-இல் முன்பு பணியாற்றிய வெளியுறவுத்துறைக்கு பிரதம நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டார் நாதன். அந்த அமைச்சகத்தில் நிலவிய ஏராளமான குளறுபடிகளை ஒழுங்கு செய்யும் பொருட்டே நாதனுக்கு அத்தகைய மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள் அத்தனையும் சீர் செய்யப்பட வேண்டுமென்றும் அவ்வாறு கட்டுக்குள் அத்துறையை முழுமையாகக் கொண்டுவர இயலவில்லையெனில் அத்துறை பிரதமரின் நேரடிப் பொறுப்பிற்குக் கீழ் கொண்டு வரப்படும் என்றும் பிரதமரால் தெரிவிக்கப்பட்டது.நாதன் வெளியுறவுத் துறைப் பிரதம நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பெடுத்த பின்னர் துறை சார்ந்த குளறுபடிகளை முற்றிலுமாக சரி செய்தது மட்டுமின்றி பல நாடுகளுடான சிங்கப்பூரின் உறவை பலப்படுத்தினார்.1988-இல் மலேசிய நாட்டிற்கான சிங்கப்பூரின் தூதராக பிரதமர் லீ குவான் யூ வால் நியமிக்கப்பட்டார் நாதன். மலேசியாவில் நாதன் வேவு பார்ப்பதாக சிங்கப்பூர் பிரதமரிடம் மலேசியப் பிரதமர் தெரிவித்ததால், தன்னை மலேசியத் தூதர் பொறுப்பிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு நாதனே பிரதமர் லீயிடம் கேட்டுக் கொண்டார்.பிரதமர் லீ, நாதனை மலேசியத் தூதர் பொறுப்பிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட அதே நேரத்தில் உடனடியாக அதைவிட மிகப் பெரும் பொறுப்பான அமெரிக்க நாட்டிற்கான தூதராக நியமித்தார்.சிங்கப்பூரில் கிரிமினல் குற்றங்கள் புரிந்த 18 வயது அமெரிக்க இளைஞர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நான்கு மாத சிறை தண்டனையும், ஆறு பிரம்படிகளும் 3,500 வெள்ளி அபராதமும் விதித்தது. இச்செய்தி அமெரிக்காவில் சர்ச்சையை உருவாக்கியது. அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் தண்டனையைக் குறைக்க வேண்டுகோள் விடுத்தார்.இருப்பினும் இரண்டு பிரம்படி மட்டும் குறைக்கப்பட்டு சிங்கப்பூர் அரசால் தண்டனை முழுமையாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கிளிண்டனை வெள்ளை மாளிகையில் சந்தித்து விவரம் கூறும் பொறுப்பு தூதர் நாதனுக்கு அளிக்கப்பட்டது. நாதன் இதை மிகத் துணிச்சலாகவும் லாவகமாகவும் எதிர்கொண்டார். ஆறாண்டு கால அமெரிக்கத் தூதர் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி விட்டு சிங்கப்பூர் திரும்பிய நாதன் இனி ஓய்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு தொலைபேசியில் நாதனை அழைத்த பிரதமர் லீ குவான் யூ சிங்கப்பூரின் அதிபர் பொறுப்பிற்கு நாதனை முன்மொழிய சிங்கப்பூர் அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.பெரும்பான்மையாக சீனர்கள் வாழும் நாட்டில், சீன இனத்தவரான பிரதமர் ஒருவர் மிகச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இந்தியரை முன்மொழிந்ததோடு மட்டுமல்ல, அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இனம் ஒரு பிரச்னையாக முன்னிறுத்தப்படுமானால் தானே களத்தில் இறங்கி அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப்போவதாக நாதனிடம் வாக்குறுதியளித்தார் பிரதமர் லீ குவான் யூ.நாதனுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அதிபராக 1999-ஆம் ஆண்டு போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அதிபர் பொறுப்பேற்றவுடன் அலுவலகப் பணியை மட்டும் அந்நாட்டின் அதிபர் மாளிகையான இஸ்தானா வில் செய்து விட்டு தனது வீட்டையே அதிபர் வீடாகத் தொடர்ந்து தனது பதவிக் காலம் முழுவதும் பயன்படுத்தினார்.மக்கள் மீது இவர் காட்டிய அன்பினாலும், மக்கள் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும் 1995-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார் எஸ்.ஆர். நாதன். இரண்டு முறை மொத்தம் பனிரெண்டு ஆண்டுகள் அதிபர் பதவியிலிருந்த சிங்கப்பூரின் ஒரே அதிபர் என்ற வரலாற்றைப் படைத்தவர் எஸ். ஆர். நாதன். சமீபத்திய இவரது மறைவு ஒட்டுமொத்த சிங்கப்பூரையே சோகத்தில் ஆழ்த்தியது."யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் மந்திரத்தின் திருவுருவமாக விளங்கியவர் எஸ். ஆர். நாதன் என்று கூறினால் அது மிகையல்ல.

Comments