உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வணிகப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சக்தி வாய்ந்த கார் குண்டுவெடிப்பில் 12 அப்பாவி மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். 15 கார்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் உடனடியாக பொறுப்பேற்றனர்.

* "கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல்வீசக்கூடாது" என பாகிஸ்தானை அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கவுதம் பாம்பவாலே கண்டித்தார். மேலும், "இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தியாவின் பிரச்சினையில் தலையிட்டு கொண்டிருக்காமல், பாகிஸ்தான் தனது பிரச்சினைகளை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என அவர் கருத்து தெரிவித்தார்.

* உஸ்பெகிஸ்தான் வெளியுறவு மந்திரி அப்துல் அஜிஸ் கொமிலோவை அமெரிக்காவின் மத்திய ஆசிய பகுதிகளுக்கான வெளியுறவு துணை மந்திரி டேனியல் ரோசன்பிளம் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து டேனியல் ரோசன்பிளம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "அமெரிக்காவுடன் நிலையான உறவு வைத்துக்கொள்ள உஸ்பெகிஸ்தான் விரும்புகிறது" என கூறினார்.

* அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அவமதிப்பான வார்த்தைகளால் விமர்சித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து அவருடனான தனது சந்திப்பை ஒபாமா ரத்து செய்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறின.

Comments