பயன்படுத்துவதற்கு எளிதான நவீன அலமாரிகள்

பயன்படுத்துவதற்கு எளிதான நவீன அலமாரிகள்

தினந்தோறும் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் பரபரப்புக்கு இடையே அன்றைக்கு அணிய வேண்டிய ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சிரமமான வேலை. ஆடைகளை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிக்கலானதாக இருப்பதோடு அதற்கு அதிக நேரம் செலவழிக்கவும் வேண்டியிருக்கிறது.

'வார்டுரோப்' என்று அழைக்கப்படும் நவீன ஆடை அலமாரிகளை பயன்படுத்துவதால் துணிகளைத் தேர்ந்தெடுக்கும் குழப்பங்களையும் அவற்றை பாதுகாக்கும் சிரமங்களையும் எளிதாக தவிர்க்க முடியும். இதனால் தினசரி வாழ்க்கையே இனிமையான அனுபவமாக மாறுகிறது. ஆனால் வார்டுரோப்களை பயன்படுத்தும்போது சில அடிப்படையான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்முடைய பயன்பாட்டுக்காகத்தான் வார்டுரோப் அமைக்கிறோமே தவிர தினந்தோறும் அதை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருப்பதற்காக அல்ல. எனவே வார்டுரோப்பை ஒழுங்குபடுத்த அதிக நேரம் செலவிடாத வகையில் அதன் வடிவமைப்பு அமைந்திருக்க வேண்டும். வார்டுரோப்பை ஒழுங்குபடுத்துவது ஒரு கலைதான். ஆனால் அதை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும்.

படுக்கையறையில் அமைக்கப்படுகிற வார்டுரோப் நிச்சயமாக மற்ற அறைகளில் அமைக்கின்ற வார்டுரோப்களைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும். கணவன்-மனைவி இருவரது துணிகளையும் இந்த அலமாரியில் வைக்கலாம். அதே நேரத்தில் பெரிய அளவிலான வார்டுரோப்களில் சின்ன, சின்னதாய் நிறைய அடுக்குகளை அமைக்க முடியும். அப்போது ஆடைகளுக்கு மட்டுமின்றி பெல்ட், டை, கைக்குட்டைகள் என்று ஒவ்வொன்றுக்கும் தாராளமாக இடம் ஒதுக்க முடியும்.

ஆள் உயர கண்ணாடியுடன் இணைந்த வார்டுரோப்கள் அறையை பெரிதாக உணரச் செய்யும். மேலும் வெளிச்சத்தை பிரதிபலித்து அறை முழுவதையும் வெளிச்சமாக காட்டும். ஆள் உயர கண்ணாடிகள் பொருத்தமான ஆடைகளை கால தாமதமின்றி உடனடியாக தேர்வு செய்யவும் உதவியாக இருக்கும். முக்கியமாக கண்ணாடிக்காக அறையில் தனியிடம் ஒதுக்கவேண்டியதில்லை. எனவே இடத்தையும் மிச்சப்படுத்தலாம்.

விலை அதிகமான விழாக்கால ஆடைகளையும் தினந்தோறும் பயன்படுத்தும் சாதாரண ஆடைகளையும் எப்போதும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் விலை அதிகமான ஆடைவகைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியும்.

வார்டுரோப் அமைப்பானது போதுமான வெளிச்சத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். வெளிச்சம் இருந்தால்தான் தேவையான ஆடைகளை உடனடியாக எடுக்கமுடியும். இல்லையென்றால் எந்த நோக்கத்திற்காக வார்டுரோப்பை பயன்படுத்துகிறோமோ அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். வார்டுரோப்பில் உள்ள சிறிய அறைகளின் மூலை முடுக்குகளும் தெளிவாக தெரியும் விதத்தில் மின்வெளிச்சம் அமையவேண்டும்.

Comments