வனச் சீருடைப் பணியாளர் தேர்வு: விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் வெளியீடு

வனச் சீருடைப் பணியாளர் தேர்வு: விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வு தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில், வனவர் களஉதவியாளர் பணிக்குரிய நபர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதன் பின்னர் இறுதியான மதிப்பெண்ணைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நியமன ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றியும் விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் தயார் செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து அசல் சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்க கோரும் வகையில், தயாரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் இரண்டாவது பட்டியல் வனத்துறையின் www.forests.tn.nic.in  இணையதளத் தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களிடமும் சான்றிதழ்களின் நகல்களை கோரும் வகையில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தனித்தனியே அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல்களையும், மற்ற இனங்களையும் செப்டம்பர் 30-க்குள் உறுப்பினர் செயலருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சான்றிதழ்? பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், இளங்கலைப் பட்டம், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், பதிவெண்ணுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒளிம நகல் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும்.

இதுதவிர, விண்ணப்பத்தில் கோரியிருப்பின் முதுநிலை பட்டம், விளையாட்டுச் சான்றிதழ்கள், தமிழ்வழிக்கல்வி பயிற்றுச் சான்றிதழ் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments