மாங்கல்யம் காத்தருளும் குங்கும சுந்தரி : உமையாள்புரம்

மாங்கல்யம் காத்தருளும் குங்கும சுந்தரி : உமையாள்புரம்


பிரணவத்திற்குப் பொருள் சொல்லத் தெரியாத பிரம்மாவை சிறையிலிட்டான் முருகன். அவனுடைய செயலைக் கண்டித்த சிவபெருமான், அவனுக்குத் தெரிந்தால் அந்தப் பொருளை தனக்குச் சொல்லுமாறு முருகனைக் கேட்டார். உடனே முருகன், "பிரணவத்தின் பொருளைத் தாங்கள் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உபதேசம் கேட்பதற்கு ஏதுவாகத் தாங்கள் சீடனாக மாறி என்னைக் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று நிபந்தனை விதித்தான். இறைவனும் சம்மதித்தார். இவ்வாறு முருகன் சுவாமிநாதனாக சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பெருமையை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. சுவாமிநாதனிடம் உபதேசம் பெற வந்த இறைவன், உடன் வந்த உமையம்மையையும் இதர பரிவாரங்களையும் வழியில் ஆங்காங்கே விட்டு விட்டு தாம் மட்டும் தனியாக சுவாமிமலைக்கு வந்து முருகனிடம் உபதேசம் பெற்றதாக வரலாறு. கணபதியும் பூத கணங்களும் கணபதி அக்ரகாரம் என்ற தலத்தில் தங்கி விட்டதாகவும், அன்னை உமாதேவி தங்கிய இடம் உமையாள்புரம் என்றும் சொல்லப்படுகிறது. பிறைச்சந்திரன் திங்களூரிலும், கங்கை கங்காதரபுரத்திலும் தங்கிவிட்டார்களாம். இந்த விவரம் பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணத்திற்கு அருகே இருக்கிறது அன்னை தங்கிய உமையாள்புரம். அன்னை உமாதேவி குங்கும  சுந்தரி என்ற திருப்பெயரில் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒரு சிவபக்தையின் கணவன் தீர்க்க முடியாத நோயால் அவதிப்பட்டானாம். எந்தவகை வைத்தியத்தாலும் பயனில்லை. தன்னுடைய மாங்கல்ய பாக்கியம் பறிக்கப்பட்டு விடுமோ என்று பயந்தாள் அவள். சிவனடியார் ஒருவரிடம் யோசனை கேட்டாள். "கவலைப்படாதே. இறையருளால் குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவுமே கிடையாது. காவிரியின் வடகரையில் உமாபுரத்தில் உள்ள உமாமகேஸ்வரியை நம்பிக்கையுடன் வழிபடு" என்று பணித்தார். உடனே அவள் இத்தலத்திற்கு வந்து உமாதேவியைக் குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டாள். அவள் கணவனும் குணம் பெற்றான். இதனால் இத்தல நாயகிக்கு குங்கும சுந்தரி என்ற பெயர் ஏற்பட்டது. அன்னை தனிச்சந்நதியில் நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகிறார். தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு தேவி குங்கும சுந்தரிக்கு இப்போதும் பலர் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இறைவன் காசி விஸ்வநாதர் கோயில் கொண்டிருக்கும் இத்தலம் பற்றி பிரமாண்ட புராணத்தில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் அக்னி தீர்த்தம் என்று ஒரு புஷ்கரணி இருந்ததாகவும், இறைவன் திருமுடியில் பெருகும் கங்கை நீரும், காவிரியும் சேர்ந்து இந்த திருக்குளம் தோன்றியதாகவும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற பல பாவச்செயல்களுக்கு நிவாரணமாக இத்தீர்த்தம் விளங்கியதாகவும் அந்தப் புராணம் கூறுகிறது. இத்தலத்தில் சிவன் கோயிலை நிர்மாணித்த விஜயாள் என்ற கந்தர்வப் பெண் இங்கு ஒரு திருக்குளத்தை உருவாக்கி, அதன் கரையில் தவம் செய்ததாகவும் அக் குளம் அவள் பெயராலேயே விஜயா தீர்த்தம் என்றும், நாரி தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டதாகவும் தலபுராணம் விவரிக்கிறது. இக்குளம் இப்போதும் நார்யா குளம் என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வூரில் கிழக்கு எல்லையில் காவல்கார விநாயகர் என்ற கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலையொட்டி சுடுகாடு இருக்கிறது. காசி க்ஷேத்திரத்து மயானத்தை விட இது சிறப்புடையது என்று புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இங்கு தகனம் செய்யப்படும் உடல்களை வெட்டியான் எனப்படும் சுடுகாட்டுக் காவலர்கள்கூட இறைவன் ஆணையின்படி தொடுவதில்லை. சுடுகாட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் எல்லாவற்றிற்கும் காவலாக இருக்கிறார் என்று இக்கிராம மக்கள் தீவிரமாக நம்புகிறார்கள். தகனச் சடங்குகள் முடிந்ததும் இந்தக் காவல்கார விநாயகருக்கு காணிக்கை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.ஜடாயுவுக்கு ராமன் இந்த மயானத்தில் தமது கையால் எரியூட்டியதாக இவ்வூர் மக்கள் கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக இக்கிராமத்தை அடுத்த புள்ளம்பூதங்குடி என்ற தலத்தில் பெருமாள் திருக்கரத்தில் தர்ப்பைப் புல்லோடு காட்சியளிக்கும் தோற்றத்தை காட்டுகிறார்கள். இத்தலத்தில் காவிரியின் மேற்குக் கரையில் உள்ள ஆனந்த மகா கணபதி கோயில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். கோயிலை ஒட்டி ஒரு மடம் இருக்கிறது. நீராடி, தூய உடையுடுத்தி, கோயில் நந்தவனத்திலேயே மலர் பறித்து, மாலை கட்டி, மடத்திலேயே நைவேத்தியம் தயார் செய்து விநாயகருக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஆசாரம் காரணமாக இந்த மடத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆனந்த மகாகணபதி வரப்பிரசாதி என்றும், ஊரில் பல சமயங்களில் பலருடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றி ஆனந்தத்தை கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. கிராமத்தின் மேற்கே ஆபத்சகாயர் என்ற ஐயப்பன் கோயில் இருக்கிறது. தன்னைச் சரணடைந்த ஒரு கர்ப்பிணிக்கு ஆபத்து சமயத்தில் செவிலித் தாயாக வந்து காப்பாற்றியதால் இந்த ஐயப்பனுக்கு ஆபத்சகாயர் என்ற பட்டம் கிட்டியது. தென் அக்ரகாரத்தின்  மேலக்கோடியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் இருக்கிறது. மூலவர்  திருமால் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருப்பதும், ராதா ருக்மிணி சகிதமாக கம்பீரமாகக் காட்சி தரும் எழில்மிகு ராஜகோபால சுவாமியின் உற்சவ விக்கிரகங்களும் பார்க்கப் பரவசமூட்டுபவை. சிவன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின்போது பெருமாள் அங்கே எழுந்தருளி திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பது, இக்கிராமத்தின் சிறப்புக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டு. கர்நாடக இசை உலகில் உமையாள்புரத்துக்குத் தனி இடம் உண்டு.சத்குரு தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடர்களான சுந்தர பாகவதரும், கிருஷ்ண பாகவதரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். கர்நாடக இசையில் உமையாள்புரப் பாணி உருவாகக் காரணமானவர்கள். இவர்கள் பஜனை நடத்திய இல்லம் இப்போதும் பஜனை மண்டலியாகத் திகழ்கிறது. பாகவதர்கள் பூஜை செய்த விக்கிரகங்கள் இப்போதும் இங்கு பூஜையில் உள்ளன. தஞ்சாவூர் பாணி ஓவியத்தில் காலைத் தூக்கி ஆடும் நடராஜர் திருவுருவப் படம் நம்மைக் கவர்கிறது. புராணப் பெருமைமிக்க இந்த உமையாள்புரம் தலத்தின் பாரம் பரியம் கெடாமல் இந்த ஊர் பெரியவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நம்முடைய பாரம்பரிய கிராம வாழ்க்கை முறை சிறிதும் மாறாமல் இருப்பது இந்தத் தலத்தின் தனி சிறப்பு. கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது இத்தலம்.  

Comments