சுற்றுச்சூழல் துளிகள்: பத்தை விழுங்கிய இருபத்தைந்து!

சுற்றுச்சூழல் துளிகள்: பத்தை விழுங்கிய இருபத்தைந்து!

பூமியில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளை கணக்கெடுக்கும் ஒரு ஆய்வு, கடந்த, 25 ஆண்டுகளில் மனிதர்களின் செயல்களால், 10 சதவீத இயற்கை காடுகள் அழிந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 'கரன்ட் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியான இந்த ஆய்வின்படி, ஆப்ரிக்காவின் காடுகளில், 14 சதவீதமும், அமேசான் காடுகளில், 30 சதவீதமும் பூண்டோடு அழிக்கப்பட்டு, மனித குடியேற்றம் அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது. காட்டு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றுவது, சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டுவது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் வெளியேற்றப்படும் கார்பன் மாசுபாட்டில், 38 சதவீதத்தை உறிஞ்சும் சக்தி படைத்த அமேசான் காடுகளில் கணிசமான சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் இழப்பு மட்டுமல்ல ஆபத்தும் கூட. அதுமட்டுமல்ல, உலகின் பல்லுயிர் தன்மையும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. பலவிதமான தாவர இனங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் போன்றவை இயற்கை அமைப்பிற்கு சமநிலையையும் வளர்ச்சியையும் தரக்கூடியவை. அவற்றில் பலவற்றின் வாழிடங்கள் மனிதர்களால் விழுங்கப்படும்போது இயற்கை நிலை குலையும். அடர்ந்த காடுகள் சராசரி மனிதர்களுக்கு எட்டாத தொலைவில் இருப்பதாலேயே, வனமும், வன உயிர்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பது மடத்தனம் என்கின்றனர், இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

Comments