அவசரமும் அவசியமும்

அவசரமும் அவசியமும்

தில்லியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருத்தியைக் கடத்திய தம்பதி பஞ்சாப் மாநிலத்தில் ரூ. 12 ஆயிரத்துக்கு அச்சிறுமியை விற்றுள்ளனர். அந்தச் சிறுமியை வாங்கிய பெண் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். பின்னர் அந்தச் சிறுமி மாறி மாறி பலருக்கு விற்பனை செய்யப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்.அந்தச் சிறுமியை விட மூன்று மடங்கு வயதுடைய ஓட்டுநர் ஒருவர் அவரை பணம் கொடுத்து வாங்கி திருமணம் முடிக்கிறார். இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அவர் அந்தச் சிறுமியை மற்றொருவருக்கு விற்பனை செய்து விடுகிறார். அவரிடம் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுமி பத்து ஆண்டுகள் கொடூர போராட்டத்துக்கு பிறகு தப்பித்து தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அவர் தனக்கு ஏற்பட்ட அவலத்தை தாங்கிக்கொண்டு மனதைரியத்துடன் வீடு திரும்பி, போலீஸாருக்கு புகார் அளித்ததால்தான் இந்த கொடூர அவலம் வெளிச்சத்துக்கு வந்தது. அவரை கடத்திய எட்டு பேரை தில்லி போலீஸார் கைது செய்து, அவர்களின் பிடியில் இருந்த அப்பாவி சிறுமிகளையும் விடுவித்தனர்.இந்த சம்பவம் ஏதோ 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதில்லை. 2006ஆம் ஆண்டு நமது நாட்டின் தலைநகரான தில்லியில்தான் நடைபெற்றுள்ளது. வாய்கிழிய விவாதம் செய்யும் வடமாநில தொலைக்காட்சிகள் மனதை உருக்கும் இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடவில்லை.ஒருதலைக்காதல் கொலைகள், ஊழல் புகார்கள் போன்றவற்றின் மீது நீண்ட நேரம் விவாதம் நடத்தும் அவை, சிறுமிகள் கடத்தல் சம்பவங்களை கண்டுக்கொள்வதே இல்லை.பணம் படைத்தவர்கள் அல்லது அரசியல் வாதிகளின் குழந்தைகள் கடத்தப்பட்டிருந்தால் நீண்ட விவாதம் நடத்தி, குற்றவாளியைத் தேடி வெளிநாட்டுக்கு பயணம் செய்து செய்தி வெளியிட்டு, காவல் துறை, அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பார்கள் அந்தத் தொலைக்காட்சிகள்.இந்தியாவில் தினந்தோறும் 15 பேர் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2010-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தை கடத்தல் வழக்குகள் தொடர்பாக 45,375 பேர் கைது செய்யப்பட்டு 10,134 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அபராதம் அல்லது குறுகிய கால சிறைத் தண்டனை மட்டுமே.2014 - 2016 ஆண்டுகளில், கடத்தப்பட்ட 27,994 பெண்களும், 23,699 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் விபச்சாரத்திற்கும், பிச்சை எடுக்கவும், அடிமைகளாக பணியாற்றவும், அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கவும் கடத்தப்படுகிறார்கள் என்று அண்மையில் மாநிலங்களவையில் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை இணையமைச்சர் அளித்த தகவல் நம்மை பதற வைக்கிறது.இந்தியாவில் 1.80 கோடி இளைஞர்கள், குழந்தைகள், கட்டாய தொழிலாளர்களாக உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், அரசு தகவல்கள் சொற்ப எண்ணிக்கையை காட்டுகிறது. விபசாரத்துக்காக சிறுமிகள் கடத்தப்படுவது சர்வதேச வியாபாரமாக மாறியுள்ளது.அறியா வயதில் கடத்தப்படும் அவர்கள், தாங்கள் விலைமாதுக்களாக்கப்பட்டதை அறியும் வயது வரும்போது, அவர்களுக்கு மீண்டு வரும் மனதைரியம் வருவதில்லை. இதற்கு நமது சமுதாயக் கண்ணோட்டமும் ஒரு காரணம்.இத்தகைய நரக வேதனையில் சிறுமிகளைத் தள்ளும் சமூக விரோதிகள் பிடிபட்டால், பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களையும் காவல் துறையினர் ஒன்றாகவே கருதி சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பாகவே சமூக விரோதிகள் விடுதலை ஆகின்றனர். இதற்குக் காரணம், இந்தியாவில் மனிதக் கடத்தலை தடுப்பதற்காக தனியாக சட்டம் இல்லாததே.மனிதக்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) வரைவு மசோதா 2016- என்ற ஒன்றை மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த மே மாதம் கொண்டு வந்துள்ளார்.வரும் டிசம்பரில் கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மேனகா காந்தி நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ஒரு குழந்தை கடத்தப்பட்டவுடனே அதைக் கண்டுபிடிக்க முழுவீச்சில் ஈடுபட்டால்தான் பலன் கிடைக்கும். இல்லையென்றால் அது தேடப்படும் பட்டியலில் இணைந்துவிடும்.முன்பெல்லாம், தொலைந்துபோனவர்களின் படங்களை சமூக கண்ணோட்டத்துடன் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வந்தனர். அந்தக் காலம் போய்விட்டது. ஆகையால், இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டத்தில் கடுமையான விதிகள் வகுக்க வேண்டியது அவசியமாகிறது.குழந்தை கடத்தப்பட்ட உடன் அந்தத் தகவலை மாநில அரசுகள் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் பகிர ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் கிளைகள் இருக்க வேண்டும்.கடத்தப்படுபவர், கடத்தலில் ஈடுபடுபவர் என்று தெளிவாக குறிப்பிட்டு, குற்றவாளிக்கு குறிப்பிட்ட காலத்தில் தண்டனை வழங்கவும், அபராதமாக பெருந்தொகையை விதிக்கவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.கடத்தல்காரர்களுக்கு சர்வதேச அளவில் இணைப்பு உள்ளதால், ஒருங்கிணைந்த அமைப்பின் விசாரணை எல்லையை அண்டை நாடுகளுக்கும் நீட்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் தொடங்க மத்திய அரசு மூலதன நிதியை உருவாக்க வேண்டும்.வெளிநாடுகளுக்கு கொத்தடிமைகளாக செல்லும் இந்தியர்களை முறைப்படுத்தும் அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதால், பிறநாடுகளும்கூட இந்த மசோதாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

Comments