மொரார்ஜியை வென்ற இந்திரா!

மொரார்ஜியை வென்ற இந்திரா!

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதற்கு முன் அப்படி ஒரு காட்சியை இந்தியா பார்த்தது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா ஆனதன் அடையாளம்தான் இது என்று அன்றைய தலைவர்கள் சொல்லத் தொடங்கினர்.

இந்திரா, தலைவர் ஆக்கப்பட்டதாகத் தகவல் வந்தபோது ராஜாஜி, பெங்களூரில் இருந்தார். அன்று அவரும் மசானியும் ஒரு கூட்டத்தில் பேசினார்கள். மசானி, நேருவையும் இந்திராவையும் தர்க்கரீதியாக விமர்சித்துப் பேசினார். எப்போதும் தர்க்கரீதியாகப் பேசும் ராஜாஜி அன்று கோபமாகப் பேசினார். ''எனக்கு முன்பு பேசிய மசானி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜாக்கிரதையாகப் பேசினார். ஆனால் எனக்கு அந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்று சொன்ன ராஜாஜி, ''நேருவுக்குத் தன்னைவிட்டால் வேறு ஆள் கிடையாது என்ற பித்தம் தலைக்கேறிவிட்டது. அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறார்'' என்று குற்றம்சாட்டினார். அந்தக் கூட்டத்தில்தான், ''புதிய கட்சியை அமைத்துவிட வேண்டியதுதான். அதற்கான காலம் நெருங்கிவிட்டது'' என்றும் ராஜாஜி சொன்னார். அதாவது, காங்கிரஸ் கட்சி நேரு, இந்திரா என வாரிசு அடிப்படையில் வலம் வர ஆரம்பித்துவிட்டது என்ற கொந்தளிப்புத்தான் ராஜாஜியை சுதந்திரா கட்சியை தொடங்க வைத்தது.

 

கேரள ஆட்சி கலைக்கப்பட்டபோதும் ராஜாஜி அந்தக் கொந்தளிப்பை அதிகமாகக் காட்டினார். ராஜாஜிக்கு கம்யூனிஸ்ட்களைக் கண்டாலே பிடிக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியவதைவிட சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அதிகம் பேசியவர் ராஜாஜி. அப்படிப்பட்ட ராஜாஜிக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கை என்று ராஜாஜி குற்றம்சாட்டினார்.

''கம்யூனிஸ்ட்கள் இப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றார்கள். அவர்களை ஜனநாயக மரபுகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களை இந்த மாதிரி நடத்தினால் அவர்கள் மீண்டும் தலைமறைவாகி சதிச்செயல்களில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாவார்கள். மேலும், சட்டசபையில் அவர்களது பெரும்பான்மை பலம் குறையவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் உடன்பாடானவை அல்ல. ஆனால் அவர்களை நடத்தவேண்டிய விதம் இது அல்ல'' என்று தன்னுடைய 'சுயராஜ்யா' பத்திரிகையில் ராஜாஜி எழுதினார். அந்த அளவுக்கு இந்திராவின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு கலைக்கப்பட்டதை ஃபெரோஸ் காந்தி கடுமையாகக் கண்டித்தார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் இதனை முழுமையாக எதிர்த்தார். ஆனாலும் இந்திரா கேட்கவில்லை. இந்திராவை நேருவால் தடுக்க முடியவில்லை.

பின்பு ஒருமுறை பேட்டி அளித்த இந்திரா, கேரள அரசு கலைக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல என்றார். ''காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கம்யூனிஸ்ட் அமைச்சரவையை அகற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனப்படுத்தும்படி எந்தக் காரணங்களுக்காக ஆலோசனை கூறினீர்கள்?'' என்று பத்திரிகையாளர் கே.ஏ.அப்பாஸ் கேட்டபோது, ''நான் அப்படி ஆலோசனை சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் காரணமாக மாநிலத்தில் ஒரு குழப்பமான நிலைமை இருந்தது. அதனால் மீண்டும் தேர்தல் நடத்தி வாக்காளர்கள் இன்னும் தெளிவான தீர்ப்பு அளிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கருதினோம்'' என்று இந்திரா சொன்னார். இதேபோன்ற சூழ்நிலை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் இப்படிச் செய்திருப்பீர்களா என்று அப்பாஸ் திருப்பிக் கேட்கவில்லை. இது சரியா, தவறா என்ற விவாதங்களைத் தாண்டி 'இந்திரா என்றால் நினைத்ததை சாதிக்கக் கூடியவர்', 'நேருவின் மகள் மன உறுதி படைத்தவர்' என்ற பிம்பம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட இந்த சம்பவம் காரணமாகிவிட்டது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவின் செல்வாக்கை உணர்த்துவதற்கு இந்த ஆட்சிக் கலைப்புப் பயன்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இந்திரா விலகியது இன்னும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.

ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆனால், இரண்டு ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருக்கலாம். அது முடிவதற்கு முன்னதாகப் பதவியைவிட்டு விலகி நேருவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கினார் இந்திரா. கேரள ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்கு முழுமையான ஆதரவை காங்கிரஸ் தலைவர்கள் தராததும் பம்பாய் மாநிலத்தை மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று அவர் எடுத்த முடிவை சில தலைவர்கள் எதிர்த்ததும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. நேருவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண்மணி என்ற தகுதியை அப்போது அடைந்திருந்தார் இந்திரா. அதற்கு முன் அன்னிபெசன்ட், சரோஜினி தேவி, நெல்லி சென்குப்தா ஆகிய மூவர் தலைவராக இருந்துள்ளார்கள். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராக ஆனதில் மூன்றாவது நபர் என்ற தகுதியும் இந்திராவுக்கு இருந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு அடுத்து இவர் தலைவராகி இருந்தார். இப்படி ஒரு கௌரவத்தை ஒருநாள் இரவில் திரும்பக் கொடுத்துவிட்டார் இந்திரா. அதாவது, தான் நினைத்தது நடக்காவிட்டால் அந்தப் பதவியே தேவையில்லை என்ற மனோபாவம் கொண்டவராக அவர் இருந்தார். அப்படித்தான் வளர்ந்தார்.

நேரு இருந்த காலக்கட்டத்திலேயே இப்படி என்றால் நேருவே இல்லாத சூழ்நிலையில்..? 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என்ற பெரும் முழக்கமே யதார்த்த வடிவம் எடுத்தது.

நேரு தன்னுடைய இறுதிக் காலக்கட்டத்தில் எடுத்த தூய்மை நடவடிக்கை ஒன்று மறைமுகமாக இந்திராவுக்கு வசதியாகப் போனது. 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் சரிவைச் சந்தித்தபோது நேரு மிகவும் வருந்தினார். தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற முடியாத ஏக்கம் ஒருபுறம், காங்கிரஸ் பிரமுகர்கள் மீது எழுந்த ஊழல் முறைகேடுகள் மறுபுறம் அவரை வாட்டியது. அப்போது நேருவும் காமராஜரும் சேர்ந்து எடுத்த முடிவுதான், காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு வசதியாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதும், கட்சிப் பணிகளுக்குத் திரும்புவதும் என்பது. 'கே பிளான்' என்று வரலாற்றில் இது பதிவானது. இந்த அடிப்படையில், இதை முன்மொழிந்த காமராஜரே, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பிஜு பட்நாயக் (ஒடிசா), சந்திர பானு குப்தா (உத்தரப்பிரதேசம்), பஷி குலாம் முகமது (காஷ்மீர்), ஜீவராஸ் மேத்தா (குஜராத்), பகவதிராய் மண்ட்லோய் (மத்தியப் பிரதேசம்) ஆகிய முதலமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

மத்திய அமைச்சரவையில் இருந்து லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், எஸ்.கே.பாட்டீல், பி.கோபால், கே.எல். ஸ்ரீமலி ஆகியோரும் பதவி விலகினார்கள். பதவியைவிட்டு விலகி, கட்சிப் பணியாற்ற பெரிய தலைவர்கள் செல்வது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேருவின் எதிரிகள் வேறுமாதிரியாகச் சொல்ல ஆரம்பித்தனர். 'அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரது சிறகுகளையும் மறைமுகமாக நேரு வெட்டிவிட்டார்' என்றனர். ஏனென்றால் அமைச்சர் பதவியை விட்டு விலகியவர்களில் பலருக்கும் கட்சிப் பணிகளோ, பதவிகளோ பின்னர் தரப்படவில்லை.காமராஜரை அடுத்து லால்பகதூர் சாஸ்திரிதான் நேருவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். பதவி விலகிய சாஸ்திரியை அழைத்து, மீண்டும் அமைச்சர் ஆக்கினார் நேரு. புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர், காங்கிரஸின் அகில இந்திய தலைவர் ஆனதும், சில மாதங்களில் நேரு மறைந்ததும் நடந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரியைப் பிரதமர் ஆக்குவதற்கு மொரார்ஜி தேசாய் தவிர வேறு யாரிடமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது. சாஸ்திரி - மொரார்ஜி மோதலில் காமராஜர், சாஸ்திரி பக்கம் இருந்தார். அவரை பிரதமர் ஆக்க அனைத்தையும் செய்தார். அதைப் போலவே, அப்பாவின் மறைவுக்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து அரசியல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துவந்த இந்திராவை, மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கும் காமராஜர் நினைத்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா ஆனார். மொத்தமே 17 மாதங்கள்தான் சாஸ்திரி பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு இயற்கை அனுமதித்தது.அடுத்தது யார் என்ற கேள்வி அதற்குள் வரும் என்பதை காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மொரார்ஜி முகம் முன்னுக்கு வந்தது. நேர்மையாளர் என்று பெயர் எடுத்தாலும் நெகிழ்வுதன்மை இல்லாதவர் என்று பெயர் வாங்கியவர் மொரார்ஜி. அவரை சமாளிக்கவே முடியாது என்று காமராஜர் நினைத்தார். அப்போது இந்திராவைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. 'இந்திராதான் அடுத்த பிரதமர்' என்ற முடிவோடு களத்தில் இறங்கிய காமராஜர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த அல்லது தன்னைவிட பெரிய மனிதர்களாக இருந்த அனைவரிடமும் இந்திராவைப் பிரதமராக்குவதற்காக ஆதரவு கேட்டு அலைந்தார். நிஜலிங்கப்பாவோ, சஞ்சீவி ரெட்டியோ ஆரம்பக் கட்டத்தில் இந்திராவை ஆதரிக்கவில்லை. 'இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்றுதான் சொன்னார்கள். ஆனால் தன்னுடைய இத்தனை ஆண்டுகால கடும் உழைப்பால் திரட்டி வைத்திருந்த அத்தனை பேரையும், புகழையும் பயன்படுத்தி, இந்திராவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வைத்தார் காமராஜர். ஆனாலும் மொரார்ஜி, இந்திராவை எதிர்த்து தேர்தலில் நின்றார்.ரகசிய வாக்கெடுப்பு நடந்த நாளில், வெண்மையான கதர் புடவையும் பழுப்புநிற காஷ்மீர் சால்வை அணிந்து, அதில் சிறு ரோஜாப் பூவையும் செருகி நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு வந்தார் இந்திரா. மொரார்ஜியைப் பார்த்ததும் அருகில் சென்று கை கொடுத்தார். அடுத்த சில மணிநேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு 189 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இந்திரா அறிவிக்கப்பட்டது அவரை பிரதமர் ஆக்க உழைத்த அனைத்துத் தலைவர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்திரா நீடிக்கவிடவில்லை. காமராஜர் உள்ளிட்ட அனைவரையும் காயப்படுத்தும் காரியங்களைத் தொடங்கி முழு அதிகார மையமாக இந்திரா தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்

 

Comments