நிறங்களை பிரித்தறியும் அற்புதக்கருவி

நிறங்களை பிரித்தறியும் அற்புதக்கருவி

அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவி தான் 5 லட்சத்துக்கு மேற்பட்ட நிறங்களைப் பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தில் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக்கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும். அந்தக்கருவி வேறு எதுவும் இல்லை. நம்முடைய கண்கள் தான்.

இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களைப் புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுனரும் தேவையில்லை. எளிதில் எவ்விதப் பணச் செலவும் இன்றி நாம் பெறும் அற்புதக்கருவி நம் கண்கள் தான். கண்ணின் கருவிழி வட்டமான ஒரு பகுதி. இந்த வட்ட விழியின் மையப்பகுதி ஓரப்பகுதியை விட பொருட்களைத் தெளிவாகப் பார்த்து அறியும் திறன் கொண்டது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே அதிக ஒளியைத் தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியினால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதுவே இரவு நேரங்கள் என்றால் கருவிழியின் மையம் குறைந்த ஒளியையே காணுகிறது. மாறாக ஓரப்பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகிறது.

இதற்கு காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வுச் செல்களே ஆகும். இவற்றின் அமைப்பின் அடிப்படையில் கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப் படுகின்றன. 7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழி செல்கள் கருவிழி ஓரத்தில் அமைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செல்களுக்கான ஊட்டச் சத்துக்கள் வைட்டமின் ஏ மூலம் கிடைக்கின்றன. இதனால் தான் வைட்டமின் ஏ குறைவு ஏற்பட்டால் கண் நோய்கள் தோன்றுகின்றன. நமது கண்கள் ஒரு விநாடியில் 40ல் ஒரு பங்கு நேரத்தைதான் ஒரு முறை பார்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறது.

கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளை கொல்லும் குணம் உண்டு. ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனுடைய கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.

Comments