தொப்புள் கொடி உறவு!

தொப்புள் கொடி உறவு!

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் கடல் பகுதி இரு பிரிவுகளாக உள்ளது. ஒன்று, பாக்ஜலசந்தி எனப்படும் பாக்கு நீரினை. இது வடகடல் என அழைக்கப்படுகிறது. மற்றொன்று, மன்னார் வளைகுடா எனப்படும் மன்னார் நீரினை. இது தென்கடல் என்று அழைக்கப்படுகிறது. வடகடல், தென்கடல் இவை இரண்டைப் பற்றியும் சங்க இலக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன. இந்தியாவோடு இணைந்திருந்த இலங்கை நிலப்பரப்பு எப்போதோ ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இரண்டாக பிரிந்தாலும் இலங்கை மற்றும் இந்திய மக்களின் உறவுகளை வடகடல் மற்றும் தென்கடல் பரப்பு இணைத்தே வைத்து இருந்தது.வடக்கு கடல் 10,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பன்னெடுங்காலமாக இக்கடல் வழியாக தங்குதடையின்றி இந்திய இலங்கை போக்குவரத்து இருந்தது. இராமபிரான் இக்கடலை கடந்துஇலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் என்பது இதிகாசம். மகாபாரதம் தொடர்பான பல்வேறு குறிப்புக்களும், சான்றுகளும் இலங்கையில் உண்டு.இலங்கையைச் சேர்ந்த ஈழத்து பூதந்தேவனார் இக்கடல் வழியாக வந்துதான் மதுரை தமிழ்ச்சங்கத்தில் சங்கப்பலகையில் அமர்ந்து சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்து 13 பாடல்கள் பாடியதாக சங்க இலக்கியங்களில் இடம் பெற்று உள்ளது. நாகநாதர் என்கிற ஈழத்தைச் சார்ந்த சங்கப்புலவரும் உண்டு. ஈழத்து உணவு குறித்து பழந்தமிழ் நூலான பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.இலங்கை வரலாற்றை கூறும் "மஹாவம்சம்' எனும் நூலில் துட்டகைமனு எனும் சிங்களபெளத்த அரசனுக்கும், எல்லாளன் எனும் ஈழத்தமிழ் அரசனுக்கும் நடைபெற்ற போரில் எல்லாளனுக்கு உதவியாக தமிழகத்து சோழமன்னரின் படைகள் கடல் தாண்டி மன்னார் வழியாக அருவியாறு தாண்டிச் சென்று அனுராதபுரம் வந்தடைந்தன என குறிப்பிடுகிறது.இந்தியாவின் தமிழகத்து சோழப்பேரரசின் மாமன்னர்களாகிய இராஜராஜ சோழனும் அவரது மகன் இராஜேந்திர சோழனும் இலங்கை சிங்கள, பெளத்த அரசுகளை வென்று வெற்றி வாகைசூடியுள்ளனர். இலங்கையில் தமிழ்மக்களைக் காப்பாற்றி உள்ளனர். தங்கள் சோழப் பேரரசை இலங்கையிலும் அமைத்திருந்தனர்.வடகடல், அதாவது இந்தியாவின் கிழக்கு எல்லையாக உள்ள வங்காள விரிகுடா என்பதே "சோழகங்கம்' என்று அழைக்கப்பட்டது. அதாவது சோழர்கள் ஏரி என்பதாகும். வங்காளவிரிகுடா முழுவதும் சோழ மன்னர்களின் ஆதிக்கமே நிலவியது.யாழ்ப்பாணத்தின் கடைசித்தமிழ் மன்னன் மாவீரன் சங்கிலியனை போர்ச்சுக்கீசியர்கள் சுற்றி வளைத்தபோது தமிழகத்தின் தஞ்சையை ஆண்ட தெலுங்கு மன்னரான ரகுநாத நாயக்கரின் தளபதி தலைமையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வடகடல் வழியாக இலங்கை யாழ்ப்பாணம் சென்றனர்.சங்கிலி மன்னனைக் காப்பாற்ற இந்தியாவின் கேரளத்தைச் சார்ந்த மலையாள வீரர் குஞ்சாலி போர் புரிந்தார். உதவிகள் சென்றடைய தாமதம் நேர்ந்ததால் போர்த்துக்கீசியரால் யாழ்ப்பாண அரசன் சங்கிலி குடும்பத்தாரோடு சிறை பிடிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கோவா மாநில சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.1950-களிலேயே இலங்கைத் தமிழ் மீனவர்கள் இழுவைப்படகுகள், விசைப்படகுகள் ஆகியவற்றை தங்கள் மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்த தொடங்கினர்.அப்போது இலங்கை கடல் துறை அமைச்சராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் ஈழத்தமிழ் மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பெரும் பக்கபலமாக இருந்தார்.2,000 படகுகளுக்கு மேல் இலங்கைத் தமிழர்கள் சொந்தமாக வைத்து இருந்தனர் ஈழத்தமிழ் மீனவர்கள் 75,000 பேர் இருந்தனர். இலங்கையில் தலைமன்னார் முதல் காங்கேசன் துறைமுகம் வரை தீவுகளின் கடற்கரை நீளங்களையும் சேர்த்தால் 850 கிலோ மீட்டர் அளவுக்கு இலங்கைத் தமிழர்களின் வடகடல் கடற்கரை இருக்கிறது. இந்தியாவில், தமிழகத்தில் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள தமிழக கடற்கரையின் நீளம் 1,083 கிலோ மீட்டராகும். தமிழகத்தில் 1960-க்கு பிறகுதான் விசைப்படகுகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்த தொடங்கினர்.சிங்கள, பெளத்த இனவாதக் கொள்கைகளை கொண்ட இலங்கை அரசு 1966 முதல் ஈழத்தமிழ் மீனவர்களை ஒடுக்கத் தொடங்கியது. கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழ் மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் முதலில் "கடத்தல்காரர்கள்' என பழிசுமத்தியது. பின்னர் "கள்ளத்தோணிகள்' என அவதூறு பரப்பியது. அதன்பின்னர் போராளிகள் என்று சொல்லி இலங்கைத்தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் வடகடலில் மீன் பிடிக்கவே இலங்கை அரசு அனுமத்திக்கவில்லை. திட்டமிட்டு இலங்கை அரசு இலங்கைத்தமிழ் மீனவர்களின் கடல் தொழிலை அழித்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வு காரணமாகவும், வடகடலில் சிங்களக் கடற்படையின் ஆதிக்கம் காரணமாகவும் தமிழக மீனவர்கள் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்டோர் சுடப்பட்டுள்ளனர்.இப்போதுகூட எல்லை தாண்டியதாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் மீன்பிடித் தொழில் அழிந்ததற்கு இந்திய அரசோ, தமிழக மீனவர்களோ, காரணம் அல்ல. சிங்கள, பெளத்த இன வெறி கொள்கைகள் கொண்ட இலங்கையின் சிங்கள அரசுகளே காரணம்.இலங்கையிலிருந்து 1980-களில் 700 படகுகள் மூலம் இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர். இந்தியாவின் மத்திய - மாநில அரசுகள் அவர்களை வரவேற்று பாதுகாத்து வருகிறது. சுமார் இரண்டு லட்சம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழக மக்களும், இந்திய அரசும் இன்றளவும் உதவி வருகின்றனர். போர்ச் சூழலில் இலங்கைத்தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது தமிழகத்திலிருந்து ஏராளமான நிவாரணப் பொருட்கள் சென்றுள்ளன.வடகடல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் எப்போதும் பொதுவானதாகவே இருந்தது. இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகள் காரணமாக 1970-களில் கடலில் கண்ணுக்குத் தெரியாத இந்த எல்லைக்கோடுகள் இந்திய, இலங்கை அரசுகளால் உருவாக்கப்பட்டன.இந்திய, தமிழக மீனவர்களும், தமிழக அரசும், ஈழத்தமிழக மீனவர்களும், இலங்கை வடக்கு கிழக்கு மாநில அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. இந்திய அரசும் இலங்கை கொழும்பு அரசும் பேசி எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இலங்கையுடன் நல்லுறவு பேணவேண்டும் என்பதற்காக இந்திய அரசு கச்சத்தீவை கூட விட்டுக் கொடுத்துள்ளது.இலங்கை அரசு, தொடர்ந்து இந்திய அரசுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மற்றும் இந்திய தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் செயற்கையான மோதலை உருவாக்கி வருகிறது.இறால் மீன்வளம் நிரம்பிய நந்திக்கடலில் சிங்கள மீனவர்களை மட்டுமே மீன்பிடிக்க இலங்கை அரசு அனுமதிக்கிறது. மூன்று லட்சம் மீனவர்களாக பெருகியிருக்க வேண்டிய ஈழத்தமிழ் மீனவர்கள் தற்போது வெறும் 75,000 பேர் மட்டுமே இருப்பதற்கு யார் காரணம்? 2,000 படகுகளையும், கடல் தொழில் உபகரணங்களையும் வைத்திருந்தவர்கள் 150 படகுகளே வைத்திருப்பதற்கு யார் காரணம்? இலங்கையின் ஆதிகுடிகளான ஈழத்தமிழ் மீனவர்களுக்கு இலங்கைக்கு சொந்தமான பல கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது யார்? இவை எல்லாமே சிங்கள அரசின் தமிழர் ஒடுக்கு முறை செயல்பாடுகள் ஆகும்.சிங்கள அரசை எதிர்த்துப் போராட வேண்டிய ஈழத்தமிழர் தலைவர்கள் இந்தியாவை எதிர்த்தும், தமிழக மீனவர்களை எதிர்த்தும் பேசுவது நியாயமற்றது. இது விஷயத்தில் இலங்கை அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியாவும் ஈழத்தமிழர் தலைவர்களும் முறியடிக்க வேண்டும்.கடலில் அனைத்துப் பகுதிகளிலும் மீன்பிடிக்கும் உரிமை இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானதாக மாறவேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆக்கபூர்வமான யோசனைகளை இரு நாட்டு அரசுகளும் ஏற்று நடைமுறை படுத்த வேண்டும்.கடல் வளத்தையும், மீன் வளத்தையும், சுற்றுச்சூழலையும் அழிக்கும் நவீன மீன்பிடிக்கருவிகளுக்கு இருநாட்டு அரசுகளும் தடை விதிக்க வேண்டும். மீன்வளம் நிரம்பிய வடகடல் பகுதியில் அமைதி நிலவ வேண்டும். இரு நாட்டு மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். இந்திய - இலங்கை நட்புறவு மேம்பட வேண்டும். இதற்குரிய முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

Comments