வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ தமிழ்ப்படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு

வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' தமிழ்ப்படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விசாரணை' தமிழ்ப்படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்கார் விருது போட்டி

சினிமா துறையில் உலக அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆஸ்கார் விருது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு இந்தியாவில் இருந்து படங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகின்றன.

இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கார் விருதை வென்றது இல்லை. 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற படத்துக்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கார் விருது பெற்றனர்.

அடுத்த ஆண்டு வழங்கப்படும் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்படும் படங்களின் பரிசீலனை பட்டியலில் சைரத், பாஜிராவ் மஸ்தானி, சுல்தான், பேன், ஏர்லிப்ட், உத்தா பஞ்சாப், விசாரணை உள்ளிட்ட 29 படங்கள் இடம்பெற்று இருந்தன.

'விசாரணை' படம் தேர்வு

இந்த படங்களில் இருந்து, தமிழ்ப்படமான 'விசாரணை' ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருது போட்டியில் வெளிநாட்டு மொழிப் படங்களுக்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் 'விசாரணை' கலந்து கொள்ள இருக்கிறது.

இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தேர்வுக்குழு தலைவர் கேத்தன் மேத்தா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

3 தேசிய விருதுகள்

நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

எம்.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட 'விசாரணை' படம் இந்த ஆண்டில் மத்திய அரசின் 3 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது. தமிழில் சிறந்த படமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திர கனி சிறந்த துணை நடிகருக்கான விருதையும், இந்த படத்தின் படத்தொகுப்பாளரான, சமீபத்தில் மறைந்த டி.இ.கிஷோர் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றனர்.

பிழைப்பு தேடி ஆந்திரா சென்ற தமிழ் இளைஞர்களை அங்குள்ள போலீசார் பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். ஒரு தமிழக போலீஸ் அதிகாரி மூலம் அவர்கள் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகின்றனர். இங்கு அரசியல் சதியில் சிக்கி அவர்கள் என் கவுண்ட்டரில் கொல்லப்படுவதே விசாரணை படத்தின் கதை.

இந்த படம் ஏற்கனவே சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்று உள்ளது.

நடிகர் தனுஷ் மகிழ்ச்சி

ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு விசாரணை படம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது குறித்து, அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தனது தயாரிப்பு நிறுவனத்துக்கும் டைரக்டர் வெற்றிமாறனுக்கும் பெருமைமிக்க தருணம் என்று தனது 'டுவிட்டர்' வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ள தனுஷ், விசாரணை படத்தில் சிறப்பாக பணியாற்றிய அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதேபோல் டைரக்டர் வெற்றிமாறனும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

அன்பும் அமைதியும் மலரட்டும் என்று அட்டகத்தி தினேஷ் 'டுவிட்டர்' பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

9-வது தமிழ்ப்படம்

கடந்த காலங்களில் தமிழ்ப்படங்களில் இருந்து ஏற்கனவே தெய்வமகன், நாயகன், குருதிப்புனல், இந்தியன், தேவர்மகன், அஞ்சலி, ஜீன்ஸ் உள்ளிட்ட 8 படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் கலந்து கொண்டு உள்ளன. கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டில் ஹேராம் தமிழ்ப்படம் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் பங்கு கொண்டது.

அதன்பிறகு இப்போது 9-வது படமாக விசாரணை, இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது.

Comments