நம்பிக்கை மனிதர்கள்!

நம்பிக்கை மனிதர்கள்!

பிரிட்டனைச் சேர்ந்த 26 வயது லாரா ஒயிட்ஃபீல்ட் 4 அடி உயரமும் 37 வயது நாதன் பிலிப்ஸ் 3 அடி உயரமும் கொண்டவர்கள். இருவரும் 'ஸ்நோ ஒயிட்' திரைப்படத்தில் குள்ளர்களாக நடித்தபோது நண்பர்களாக பழகினர். நட்பு, காதலானது. லாரா பெற்றோரிடம் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டார் பிலிப்ஸ். அனுமதி கிடைத்த ஒரு மாதத்தில் லாரா கர்ப்பமானார். "நாங்கள் இருவருமே வெவ்வேறு வகையான வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. கருவைக் கலைத்துவிடும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் எங்களுக்கு மனம் வரவில்லை. மன உறுதியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். அதனால் எங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டைக் குறைபாட்டுடன் எங்கள் மகன் பிறந்தான். சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். குழந்தை இருக்கும்வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். இதோ எங்கள் மகனுக்கு இரண்டரை வயதாகிவிட்டது. மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை! இனிமேலும் தள்ளிப் போடாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைத்தோம். எங்கள் அருமை மகன் மோதிரம் எடுத்துக் கொடுத்தான். எங்கள் வாழ்க்கையில் அற்புதமான நாளாக அமைந்தது. எங்களைப் போல வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதற்கு நாங்களே சாட்சி. உயரம் மட்டும்தான் எங்களுக்குக் குறைவு. மற்றபடி சக மனிதர்களைப் போல எங்களுக்கும் மென்மையான மனம் உண்டு. அதில் அன்பு, காதல், வலி, கருணை எல்லாம் நிறைந்திருக்கிறது. நீங்கள் எங்களை அரவணைக்க வேண்டாம். கேலியாக பார்க்காமல் இருந்தால் போதும். நாங்கள் தன்னம்பிக்கையுடன் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொள்வோம்" என்கிறார் லாரா ஒயிட்ஃபீல்ட்.

பாசப் போராட்டத்தில் பார்பராவைச் சிறை வைத்த பறவைகள்!  

பிரிட்டனில் வசிக்கிறார் 80 வயது பார்பரா காக்ஸ். துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக வெளியே வந்தார். எங்கிருந்தோ வந்த சீகல் பறவைகள் இரண்டு அவரை ஆக்ரோஷமாகக் கொத்தி, விரட்டின. கால்களில் ரத்தம் வடிய வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். சில மணிநேரம் கழித்து மீண்டும் மெதுவாக வெளியே வந்தார். அப்போதும் பறவைகள் கொத்தி, விரட்டின. மறுநாள் சென்றுவிடும் என்று நினைத்த பார்பராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. காரணம் புரியாமல் தவித்த பார்பரா, காவல்துறையில் முறையிட்டார். அவர்கள் பறவைகளால் பிரச்சினை என்றதும் அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்பராவைச் சிறை வைத்திருந்தன சீகல் பறவைகள். நான்காவது நாள் மீண்டும் புகார் கொடுத்த பிறகு, காவலர்கள் வந்தனர். பார்பராவின் தோட்டத்தில் சீகல் பறவைகளின் குஞ்சு ஒன்று இறந்திருந்ததைக் கண்டனர். தங்கள் குஞ்சுக்காகத்தான், பார்பராவை விரட்டியிருக்கின்றன என்ற விவரம் அறிந்து, எல்லோரும் நிம்மதி அடைந்தனர். 

Comments