மூன்று வகை பாலைவனங்கள்

மூன்று வகை பாலைவனங்கள்

பொதுவாக பாலைவனங்கள் மனித வாழ்க்கைக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. அதிலும் செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களில் மக்கள் சுத்தமாக வசிப்பதில்லை. மற்ற பாலைவனங்களில் மிகச்சிறிய அளவில் மக்கள் வசிக்கிறார்கள். பாலைவனங்களை மூன்று வகையாக பிரிக்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள்.

முதல் வகை வெப்ப பாலைவனங்கள். இவை பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் காணப்படும் பாலைவனங்களே. அரேபியன் பாலைவனம், நமீப் பாலைவனம், காலஹாரி பாலைவனம் இவற்றிற்கு உதாரணம்.

இரண்டாவது வகை பாலைவனம், குளிர் பாலைவனம் எனப்படுகிறது. இவை கடல்மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும். மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இப்படிப்பட்ட பாலைவனங்கள் உருவாகும். பகலில் அதிகமான வெப்பமும் இரவில் கடுமையான குளிரும் இருக்கும். வருடத்திற்கு 25 செ.மீ.க்கும் குறைவான மழைதான் பெய்யும். இத்தகைய காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் இருக்கும் கோபி பாலைவனம் தென் அமெரிக்காவில் உள்ள பட்டகோனியன் பாலைவனம் ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவை.

மூன்றாவது வகை, துருவப் பாலைவனங்கள் ஆகும். அண்டார்டிகா, வட அமெரிக்காவின் வட பகுதி, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்கள் இந்த இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பாலைவனங்களும் வருடத்திற்கு 38 செ.மீ.க்கும் குறைவான மழையையே பெறுகின்றன. இதுவும் கூட பனிப்பொழிவு போலத்தான் இருக்கும்.

வெப்ப பாலைவனங்களைப் போல இதில் மணற்பரப்பு அதிகமாக காணப்படாவிட்டாலும் பாறைகள் அதிகமாக இருக்கும். குறைவான அளவிலே உயிரினங்கள் இங்கு வாழும். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை விட மிகவும் வறண்ட பகுதியே அண்டார்டிகா.

பொதுவாக எல்லா பாலைவனங்களிலும் தட்ப வெப்ப நிலையை பார்த்தால், அதிகபட்ச வெப்பநிலை 58 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் குளிரும் வாட்டி எடுக்கும். மிகக் குளிர்ந்த நிலை மைனஸ் 88 டிகிரி. அதற்கும் கீழே கூட செல்லும்.

உலகில் இருக்கும் சில பிரபலமான பாலைவனங்களின் பெயர்கள் இங்கே:- சஹாரா, தார், ஆஸ்திரேலியா, கோபி, கிரேட் விக்டோரியா, காலஹாரி, நமீப், மொஜாவி, நேகேவ், கராகும், கிரேட் பேஸின், கிரேட் ஸால்ட் லேக், கைசில் கிம், கிப்ஸன், அட்டகாமா, தக்லமக்கான், கவிர், சோனோரன், படகோனியா, சிரியன், அரேபியன்.

Comments