லியோ டால்ஸ்டாய் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்

லியோ டால்ஸ்டாய் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்

ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9 வயதில் தந்தையையும் இழந்தார். அத்தையால் வளர்க்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோது, படிப்பில் கவனம் செல்லவில்லை.

l

கஸன் பல்கலைக்கழகத்தில் சட்டம், பாரம்பரிய மொழிகள் கற்றார். படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், தனக்குப் பிடித்த விஷயங்கள், புத்தகங்களை அதிகம் படித்தார். குறிப்பாக, ரூஸோவின் படைப்புகளைத் திரும்பத் திரும்ப படித்தார்.

l

குடும்பச் சொத்தில் தனக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு, தனது கிராமத்து விவசாயிகளின் வறுமையைப் போக்கவும் அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி புகட்டவும் நலத்திட்டங்களைத் தொடங்கினார். ஆனால், அவரது முயற்சிகள் பலன் தரவில்லை. பின்னர் மாஸ்கோ சென்றார். அங்கு மது, சூதாட்டப் பழக்கத்தால் சொத்துகளை இழந்தார்.

l

16 வயதில் எழுதத் தொடங்கியவர், முதலில் சிறுகதைகள் எழுதினார். 'தி சைல்ட்ஹுட்', 'பாய்ஹுட்' உள்ளிட்ட நூல்களால் ரஷ்யா முழுவதும் புகழ் பெற்றார். இவரது மாஸ்டர் பீஸ் எனப்படும் 'வார் அண்ட் பீஸ்' நாவல் 1869-ல் வெளிவந்து இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. 1877-ல் வெளிவந்த 'அன்னா கரேனினா' நாவல், இவருக்குப் புகழுடன் பணத்தையும் அள்ளிக் கொடுத்தது.

l

இவரிடம் அடிக்கடி சண்டை போட்டாலும், குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் போராட்டத்திலேயே கழிந்தாலும், இவரது மனைவி, புரிந்துகொள்ள முடியாத இவரது எழுத்துக்களைப் படித்துப் புரிந்துகொண்டு பலமுறை நகலெடுத்துக் கொடுப்பாராம்.

l

ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்த பிறகு, அகிம்சை கோட்பாடு அவருக்குள் வலுப்பட்டது. அகிம்சை, எளிமை, ஏழைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். ஏழைகளுக்கு உணவளித்தார்.

l

இந்திய விடுதலை இயக்கப் புரட்சி வீரர் தாரக்நாத் தாஸுக்கு இவர் எழுதிய புகழ்பெற்ற 'எ லெட்டர் டு எ ஹிண்டு' என்ற கடிதங்கள் அடங்கிய தனது நூலில், பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற அகிம்சைதான் வழி என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

l

அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்த காந்தியடிகள் இதைப் படிக்க நேர்ந்தது. அதுமுதல் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அகிம்சை, சைவ உணவு உள்ளிட்ட பல கொள்கை களில் காந்திஜிக்கும் டால்ஸ்டாய்க்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இவரது நினைவைப் போற்றும் வகையில் காந்திஜி அங்கு தான் நிறுவிய ஆசிரமத்துக்கு இவரது பெயரைச் சூட்டினார்.

l

ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்த டால்ஸ்டாய், தன் வாழ்வின் இறுதி 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக் கான கட்டுரைகளை எழுதினார். இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

l

குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு, இறுதிக் காலத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். ரயிலில் சென்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அஸ்டபோவ் ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார். 82-வது வயதில் (1910) அவரது உயிர் அங்கேயே பிரிந்தது. ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தற்போதும் அந்த ரயில் நிலையத்துக்குத் தவறாமல் செல்கின்றனர்.

 

Comments