சுறுசுறுப்பான உயிரினங்கள்!

சுறுசுறுப்பான உயிரினங்கள்!

சுறுசுறுப்பில் முதலிடத்தில் இருப்பவை தேனீக்கள்தான். பூவின் மகரந்தத்தில் இருந்து தேனை உறிஞ்சி அவற்றை தேன் கூடுகளில் சேகரித்து வைக்கும் அரிய செயலை செய்யும் தேனீக்கள் தட்பவெப்ப நிலை மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தம் பணியை அமைத்துக் கொள்கின்றன. தேனீக்களில் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டார்ட்டிக் போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் மட்டும் வாழும் உயிரினமான பென்குயின்கள் பறவை இனத்தை சார்ந்தவை என்றாலும் அவற்றால் பறக்க முடியாது. இது தன் வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்காக கழித்துவிடும். பெண் பென் குயின்கள் கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் தொலைவில் சென்று தங்களுக்கு ஏற்ற பகுதியில் முட்டையிடுகின்றன. அந்த முட்டையை தனது அடிவயிற்றில் வைத்து ஆண் பென்குயின்கள் 64 நாட்கள் அடைகாக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில் பெண் பென் குயின்களே அவற்றுக்கு இரைதேடி கொண்டு சேர்க்கின்றன. முட்டை பொரிந்து குஞ்சு வெளிவந்தவுடன் அந்த சின்னஞ்சிறு பென்குயின் தனது தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளுமாம். 17 வகையான பென்குயின் இனங்கள் உள்ளன.

இயற்கை விவசாயி என்ற பெயர் பெற்றது மண்புழு. மண் வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. எல்லா வகை மண்களிலும் மண்புழுக்கள் இல்லாவிட்டாலும், இவை வாழும் மண் வளமான மண் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மண் புழுக்கள் மண்ணைத் துளையிடுவதால் அந்த ஓட்டைக்குள் காற்றும், நீரும் சென்று மண்ணை வளப் படுத்துகின்றன. இவை வெளியேற்றும் கழிவுகளால் கால்சியம், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துகள் மண்ணிற்குக் கிடைக்கின்றன.

எறும்புகளைப் போல கரையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், திறமையில் சிறந்தவை. இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கரையான்கள் மரத்தில் உள்ள செல்லுலோஸ்களை உண்டு வாழ்பவை. ஒரு சில மணி நேரங்களிலேயே பல அடி நீள மரங்களை அரித்துவிடும் சக்தி கொண்டவை. கரையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். கரையான்கள் தங்களுக்கிடையே வேலையை முறையாக பகிர்ந்து கொள்கின்றன. இவை தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப தமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. மண்ணுக்கு கீழ், மண்ணுக்கு மேல், மரக்கிளைகள் என பல்வேறு இடங்களில் வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. கரையான்களில் ஏறத்தாழ 275 கரையான் பேரினங்களும், 2,750 கரையான் சிற்றினங்களும் உள்ளன. தங்களுக்கு கிடைக் கும் உணவு, மண்ணின் தன்மை, இயற்கைச் சீற்றம் ஆகியவற்றால் இதன் புற்று அளவு மாறுபடுகிறது.

போவர் பறவை (BO-W-ER BI-RD) ஒரு வித்தியாசமான பறவை. இன விருத்திக்காக மட்டுமே கூடுகட்டுவதுதான் பறவைகளின் இயல்பு. ஆனால், இந்த போவர் பறவை தனக்காகக் கூடுகட்டுகிறது. அதுவும் வழக்கமாக பறவைகள் பயன்படுத்தும் குச்சிகளை பயன்படுத்தாமல் வண்ணக் கூழாங்கற்கள், பூக்கள், வழவழப்பான மரத்துண்டுகள், சிப்பிகள் என வித்தியாசமான பொருட்களினால் கூடு கட்டுகிறது. எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தனித்துத் தெரிவது போல கண்களை ஈர்க்கும் வகையில் அதன் கூட்டைக் கட்டுகிறது.

வேட்டையாடுவதில் சிறந்தவை பெண் சிங்கங்களே. இரவில் சென்று வேட்டையாடும் இயல்புடைய இவை, 100 அடிக்கு அப்பால் இருக்கும் தன்னுடைய இரையை கண்டுபிடித்துவிடும் ஆற்றல் உடையவை. தன் குட்டிகளை மட்டுமல்லாமல், பிற சிங்கங்களின் குட்டிகளையும் அரவணைத்துக் காக்கும் குணமுடையவை. ஆண் சிங்கங்கள் தன் குடும்பத்தைக் காக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன.

விலங்குகளின் பொறியாளர் எனப் பெயர் பெற்றவை நீர்நாய். பாலூட்டி வகையைச் சேர்ந்த அழிந்து வரும் ஒரு உயிரினமாகும். இவை தோற்றத்தில் கீரிப்பிள்ளையைப் போல் காணப்படும். மீன்கள்தான் நீர்நாய்களின் முதன்மையான உணவாகும். இது நீரில் செல்ல ஏதுவாக மெலிந்த நீண்ட உடலையும், பாதங்களில் சவ்வும் பெற்று உள்ளன. வேட்டையாடுவதற்கு கூர்மையான பற்களையும், கால் நகங்களையும் கொண்டு உள்ளன. ஆறு அல்லது நீர்நிலை ஓரங்களில் காணப்படும் பாறை, மரத்தின் வேர் இடுக்குகள் மற்றும் பொந்துகள் ஆகியவற்றில் நீர்நாய்கள் வாழ்கின்றன. இவை விளையாட்டுத்தனங்கள் மிகுந்த சுறுசுறுப்பான உயிரினமாகும்.

சுறுசுறுப்பு என்று சொன்னால் எறும்புதான் நமக்கு நினைவுக்கு வரும். எந்நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கும் எறும்புகள் மண்ணுக்குள் காற்று நுழையத் துளையிடும் முக்கிய வேலையைச் செய்கின்றன. பெண் எறும்புக்கு முட்டையிடுவது மட்டுமே வேலை. இந்தப் பெண் எறும்புகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும். ஆனால் ஆண் எறும்புகள் அவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வதில்லை. உணவு தேடுதல், பாதுகாத்தல் என ஒவ்வொரு வேலையையும் பிரித்துக் கொண்டு செய்கின்றன.

இந்த உயிரினங்களைப் போல் நாமும் தினந்தோறும் சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும், பயனுள்ள வகையிலும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும்.

Comments