தவிப்பதற்கோ பிள்ளைகள்...!

தவிப்பதற்கோ பிள்ளைகள்...!

ஒரு காலத்தில் பிள்ளைகளைப் பெறுவதற்குத் தவமாய்த் தவமிருந்து, "ஸ்ரீரங்கம் ஆடி, திருப்பாற் கடலாடி, மாமாங்கம் ஆடி, மாசிக்கடல் ஆடி, தைப்பூசம் ஆடி, தவம் செய்து பெற்ற கண்ணே' என்று, பெற்ற குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி மகிழ்ந்தனர். இப்பொழுது பெற்ற குழந்தைகளை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, இரவோடு இரவாக மருத்துவமனையை விட்டு நழுவிச் செல்கின்ற தாய்மார்களையும் பார்க்கின்றோம்.அண்மையில்கூட மகப்பேற்றிற்காகத் தனியார் மருத்துவமனை விதித்த கட்டணத்தைக் கட்ட முடியாமல், பெற்ற குழந்தையை விற்றுக் கடனை அடைத்த தகவலைச் செய்தித்தாளில் படித்தோம். அந்தத் தாயின் நாணயத்தைப் பாராட்டலாம்; ஆனால், பெற்ற பாசத்தை விற்றா?ஒருவர் பெறுகின்ற பேறுகளில் அறிவறிந்த மக்கட்பேற்றைவிட மகத்தானது வேறு ஒன்று இல்லை என்றார் வள்ளுவர். ஆனால், அந்த மக்கட்பேறு பாரதிதாசன் பாடியதைப் போன்று, "தொத்துநோய் ஏழ்மைப் பணக்காரன் தொல்லை, தொடர்ந்து அடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை' என்று விற்கப்படுகின்றது அல்லது கொல்லப்படுகின்றது."குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' எனவொரு பொன்மொழி உண்டு. எவ்வாறெனில், இரண்டும் கருவறையிலிருந்து தாம் வெளியே வருகின்றன.சில நாட்களுக்கு முன்பு சித்தூர் மாவட்டத்தில் இரமணசமுத்திரம் மண்டலில் தின்னப்பள்ளி கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, நெஞ்சை நெருடுவதாய் அமைந்தது. புட்டப்பா - நரசம்மா எனும் ஏழைத் தம்பதிக்கு ஒரு நோயாளிக் குழந்தை பிறந்தது. பிறந்து ஓராண்டுக்குப்பிறகு மகேஷ்குமார் என்ற அக்குழந்தையை, எலும்பு - புற்றுநோய் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.ஐந்து ஆண்டுகள் அந்த ஏழைத் தம்பதி அக்குழந்தையோடு படாதபாடு பட்டனர். பெங்களூருவிலுள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் சேர்த்தாலும், விலையுயர்ந்த மருந்துகளை வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. அதனால் அந்தப் பெற்றோர் புங்கனூர் நீதிமன்றத்தை அணுகி, கருணைக் கொலைக்கு வேண்டுகோள் வைத்தனர்.நீதிமன்றம் அம்மனுவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மருத்துவத் துறை இயக்குநருக்கும் அனுப்பியது. பெற்றோர்கள் பெங்களூருவிலேயே இருந்த எம்.என்.ஜே. புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் சிகிச்சைப் பலனளிக்காமல், அப்பையன் அம்மருத்துவமனையிலேயே இறந்தான். உடன் மகேசின் தந்தை, "எங்களுடைய ஐந்தாண்டுக்கால துன்பங்கள், துயரங்கள் முடிந்தன' என்றார்.குழந்தையைப் பெற்ற பெற்றோர், கருணைக் கொலைக்கு விண்ணப்பம் செய்தல், மக்கட்பேற்றைக் கொச்சைப் படுத்தல் ஆகாதா? மக்கட்பேற்றிற்காக இறைவனின் கருணையை வேண்டிய காலம்போய், பிறந்த குழந்தையைக் கொல்லுவதற்குக் கருணையை வேண்டுகின்றனர்.ஒரு காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்ததால், பிரசவ வேதனையால் துடித்த ஒரு பெண், திருவானைக்காவலிலிருந்து, அதாவது காவிரியின் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வர முடியாமல் தவித்தாள். மலைக்கோட்டையின் உச்சியிலிருந்த சர்வேசுவரனை வேண்டினாள்.தாயின் தவிப்பையுணர்ந்த பரமேசுவரன் ஒரு தாயாக வடிவெடுத்து, அவளுக்கு மகப்பேறு பார்த்தான். அதனால், அந்த மலைக்கோட்டை மகேசுவரனுக்குத் தாயுமானவர் எனப் பெயராயிற்று. கருவறையிலிருந்த குழந்தையை வெளியே கொணர, கருவறையிலிருந்தே ஒருவர் வந்தது, மக்கட்பேற்றின் மகத்துவம்தானே! குழந்தையைப் பெற்ற எந்தத் தாயும் அதனைக் கொல்வதற்கு முன்வரமாட்டாள் என்பதற்கு விவிலியத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. மன்னன் சாலமன் காலத்தில் குழந்தையைப் பெற்ற ஓர் ஏழைத்தாய், அதனை வளர்ப்பதற்கு வழியில்லாமல், குழந்தையில்லாத வேறொரு பெண்ணிடம் தத்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறாள்.

என்றாலும், ஓராண்டு கழிந்து அக்குழந்தை, செழிப்பாக வளர்வதைக் கேள்விப்பட்டு, வளர்ப்புத்தாயிடம் வந்து தம் குழந்தையை மீண்டும் தர வேண்டுகிறாள். வளர்ப்புத்தாய் வளர்த்த பாசத்தால், அக்குழந்தையைத் தர மறுக்கிறாள். இருவரும் மதிநுட்பம் அமைந்த மன்னன் சாலமனை அணுகி, அக்குழந்தைக்குத் தாங்கள் தாம், தாய் என்று உரிமை கொண்டாடினர். ஞானத்தின் கவசமான சாலமன் உண்மையை அறிய, இருவரையும் மறுநாள் வரச்சொல்லுகிறான். அடுத்த நாள் இரண்டு தாய்மார்களிடமும், நீங்கள் இருவருமே அக்குழந்தைக்கு உரிமை கொண்டாடுவதால், நான் அக்குழந்தையை இரண்டாக அரிந்து, ஆளுக்குப் பாதியாகத் தரப்போவதாகக் கூறினான். வளர்ப்புத்தாய் எப்படியாவது பெற்றவளுக்கு அக்குழந்தை கிடைக்காமல் போக வேண்டும் என்பதற்காகச் சரி என்று சொல்லகின்றாள். ஆனால், பெற்ற தாய் அக்குழந்தை உயிரோடு இருந்தால் போதும் என்று, அக்குழந்தை தனக்கு வேண்டாம் அவளிடமே கொடுத்துவிடுங்கள் என்று மன்னனிடம் கூறுகின்றாள். பெற்ற தாய் யார் என்பதைத் தமது மதியூகத்தால் கண்டறிந்த மன்னன் சாலமன், பெற்றவளிடமே பிள்ளையை ஒப்படைத்தான். கொல்வேன் எனச் சொல்லப்பட்ட குழந்தையைத் தனது கருணையால் காப்பாற்றியவள், பெற்ற தாய்! சங்க காலத்துப் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி மக்கட்பேற்றின் மகத்துவத்தை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளான். கோடான கோடி செல்வம் படைத்த கோடீசுவரனாக இருந்தாலும், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்சோற்றை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு தந்தையைக் கட்டிக்கொண்டு மழலை மொழி பேசி, மயக்கத்தைத் தரும் குழந்தைகளைப் பெற்றிராவிட்டால், அவனின் வாழ்நாள் வீழ்நாளே என்றார் அந்தப் புறநானூற்றுப் புலவர் (பாடல் 188). கருணைக்கொலை என்னும் கருத்துக் கருத்தரிக்காத காலமது. மொகாலயப் பேரரசன் பாபருக்கு ஒரே மகன் ஹுமாயூன். பிறந்ததிலிருந்து நோய்வாய்ப்பட்ட அக்குமாரன், உயிர்பிரியும் நேரம் வருகிறது. உடன் பாபர் மண்டியிட்டு, ஆண்டவரே, என் குலம் விளங்க வந்த ஒரே மகன் ஹுமாயூன் என்னுடைய உயிரை எடுத்துக்கொண்டு அவனுக்கு உயிரைத் தாருங்கள் என்று வேண்டுகிறார்.இறைவனின் கருணை அதி அற்புத நிகழ்ச்சியாக, அதே பதேபூர் சிக்ரியில் உயிரிழக்கிறார் பாபர். அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில், ஹுமாயூன் உயிர் பெற்று எழுகிறான். எனவே, மொகலாயர் காலத்திலும் இறைவனின் கருணையை வேண்டியது காப்பாற்றுவதற்காகவேதானே தவிர, பெற்ற பிள்ளையைக் கொல்வதற்காக அன்று.2011-இல் உச்சநீதிமன்றம்வரை சென்ற ஒரு கருணைக் கொலை வழக்கு, பல விரும்பத்தகாத பின்விளைவுகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது. அருணா சான் பாக் என்னும் பெண் மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்த்து வந்தாள். ஒரு நாள் இரவு குடிவெறியில் வந்த ஒரு வெறியன், நாயைக் கட்டுகின்ற சங்கிலியால் அவளை அடித்து துவைத்து, உயிரை மட்டும் வைத்துவிட்டுச் செல்கிறான். அருணா சான்பாக்கின் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் செயலிழந்து அவள் கோமாவுக்குச் சென்றுவிடுகிறாள். அவளுடைய வேதனையைக் கண்டு மனம் பொறுக்காத பத்திரிகையாளர், பின்கி விரானை (Binki Virani)  உச்சநீதிமன்றத்தில் கருணைக்கொலை கோரி மனு செய்கிறார். அவ்வழக்கைப் பரிவோடு ஆராய்ந்த நீதிமன்றம், அரசியல் சட்டம் 21-ஆம் பிரிவின்படி, கருணைக்கொலைக்கு அனுமதி தர முடியாது என்று கூறி, பாசிவ் எதுநாசியாவிற்கு அனுமதி வழங்கியது.அதன்படி அவளுக்குத் தரப்பட்டு வந்த எல்லா மருத்துவ உதவிகளையும் நிறுத்திவிடுவார்கள். குளுக்கோஸ் வழி உணவும் நிறுத்தப்பபடும். அதனால் இயற்கை மரணம் எய்துவார். எதுநாசியா (Euthanasia)  எனும் கிரேக்க வார்த்தைக்கு நல்ல சாவு என்பது பொருளாகும்.அருணா சான்பாக்கிற்கு மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பை இன்று பலரும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். சித்தூர் மாவட்டத்தில் நுதலசேருவு மண்டல் பகுதியில், பாதாலபுர் எனும் சிற்றூரில் ரமணப்பா - சரசுவதி எனும் தம்பதியார் வாழ்ந்து வருகின்றனர்.காய்கறிக்கடையில் சிப்பந்தியாக வேலை பார்த்து வரும் ரமணப்பாவுக்கு கல்லீரல் பழுதுபட்ட ஒரு பெண்குழந்தை இருந்தது. பெயர் ஞானசாய் என்பதாகும். வறுமைக்கோட்டின் விளிம்பில் நின்ற பெற்றோர் குழந்தையைப் பராமரிக்க முடியாமல் தம்பலப்பள்ளி நீதிமன்றத்தை அணுகிக் கருணைக்கொலை வேண்டினர்.அவ்வழக்கை ஆராய்ந்த நீதிபதியே அக்குழந்தையின் மீது பரிதாபப்பட்டு, மருத்துவச் செலவிற்காக ரூ.5,000 வழங்குகின்றார். அக்குழந்தைக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்துவதாக இருந்தால் ரூ.50 இலட்சம் செலவாகும். எனவே, ஏழைத் தம்பதியர் கருணைக்கொலை வேண்டினர்.அந்தப் பெற்றோர் நீதிமன்றத்தை நாடுவதற்குப் பதிலாகச் சில, செல்வப் பெருந்தகைகளை அல்லது மாற்றுத் திறனாளி பராமரிப்பு நிறுவனங்களை நாடினால் ஏதாவதொரு கதவு திறக்கப்படும்.மக்கட்பேற்றின் மாண்பினை வில்லிபுத்தூராழ்வார், பாண்டு எனும் பாத்திரத்தின் வாயிலாக வெகு நேர்த்தியாக எடுத்துரைப்பார். குதலைமொழி பேசும் மழலைகளின் மயக்குறு சொற்கள் நம்மைக் கிறங்க வைக்கும். அக்குழந்தைகள் தந்தையினுடைய மார்பைத் தாவிப்பற்றி, மார்பில் விளையாடும் மகிழ்ச்சி பெறாத தந்தையர்கள், மனைவாழ்க்கைக்கு அருகதையற்றவர்கள் (சம்பவச் சருக்கம் - 59வது பாடல்) எனப் பாண்டு, குந்திதேவியிடம் கூறுவான்.நளவெண்பாவில் புகழேந்திப்புலவர், மக்கட்பேற்றின் மகிமையை மிகச் சிறப்பாகப் பாடிப் போயிருக்கிறார். இனிதான உணவிலே கைவிட்டு, துழாவுகின்ற தாமரைப்பூ போன்ற கைகளையும், மணம்நாறும் சிவந்த வாயினையும் கொண்ட பிள்ளைகளைப் பெறாத மனிதர்கள், வேறு எதனைப் பெற்றிருந்தாலும், எதனையும் பெறாதவர்களே ஆவர். இப்படிப்பட்ட மக்கட்பேற்றைக் கருணை மனு போட்டுக் கொல்வதற்கு முயலக்கூடாது.கருணை மனு போட்டு உயிரை முடிப்பதற்கு முயலுபவர்கள் பெரும்பாலும் பாமர மக்களாகவே இருக்கின்றனர். பாமர மக்களும் மக்கட்பேற்றின் அருமை பெருமையினை ஒரு காலத்தில் உணர்ந்திருந்தனர் என்பதற்குக் கீழ்வரும் நாட்டுப்பாடலைச் சான்றாகச் சொல்லலாம்.

"ஆக்கி வைத்த அண்டாச் சோற்றை,

அள்ளித் தின்ன பிள்ளையில்லே,

கூட்டி வைச்ச வீட்டுக்குள்ளே

குப்பைப் போடப் பிள்ளையில்லே'

எனும் பாடல், பாமர மக்கள் தங்கள் வயிற்றுக்குக் கஞ்சியில்லை என்றாலும், பிள்ளைகளின் வயிற்றைக் காயப்போட மாட்டார்கள் அவர்களின் உயிருக்கும் உலை வைக்க மாட்டார்கள் என்கிறது.இன்று சிலர் கேட்கும் கருணை கொலைக்கான உயிர்களில், ஒரு ஹெலன் கெல்லர் உருவாகக்கூடும்; ஒரு ஜான்மில்டன் உருப்பெறக்கூடும்; ஏன் ஒரு ஹோமரேகூட உருவாக வாய்ப்புண்டு. எனவே, கருணையைப் பெருக்குங்கள்; கருணைக் கொலைகளை நறுக்குங்கள்.

Comments