கம்புதான் நல்லது

கம்புதான் நல்லது

உலக அளவில் பல வகையான உணவு தானியங்கள் இருந்தாலும், அவற்றில் நம் உடலுக்குத் தேவையான அதிகபட்ச கலோரியை தரவல்லது மில்லட் எனப்படும் கம்பு மட்டுமே (100 கிராமில் 378 கலோரி). மிகக் குறைவான கலோரியைக் கொண்டது அரிசி (130 கலோரி). கோதுமையில் உள்ளது 339 கலோரி.கார்போஹைட்ரேட், அதிகபட்சமாக மக்காச்சோளத்தில் (100 கிராமில்) 74 கிராமும், குறைந்தபட்சமாக ஓட்ஸில் 12 கிராமும் உள்ளது. கம்பில் 73, கோதுமையில் 71, அரிசியில் 28 கிராம் என்ற அளவில் உள்ளது.புரதச்சத்து, கோதுமையில் 14, கம்பில் 11, அரிசியில் 2.7 கிராம் உள்ளது. இரும்புச்சத்து, கோதுமையில் 19, கம்பில் 16, அரிசியில் 1 சதவீதம் உள்ளது. அதிக சர்க்கரை உள்ளது கோதுமைதான் (100 கிராமுக்கு 2 கிராம்). கம்பில் 1.66, மக்காச்சோளத்தில் 0.6, அரிசியில் 0.1 கிராம் உள்ளது.சத்து நிறைந்த கோதுமை மூன்று பகுதிகளைக் கொண்டது. எண்டோஸ்பெர்ம், பிரான், ஜெர்ம். கோதுமையை சுத்திகரிக்கும் போது (பிலீச் செய்தல்) பிரான், ஜெர்ம் என்ற பகுதிகள் நீக்கப்படுகின்றன. பி விட்டமின்கள், போலிக் அமிலம், கால்சியம், பாஸ்போரஸ், துத்தநாகம், காப்பர், இரும்பு, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துப் பொருள்களைக் கொண்டவை அவை.ஆனால், நம்ம ஊர் கம்பில் எந்த பிரச்னையும் கிடையாது. ஆங்கிலத்தில் மில்லட் என அழைக்கப்படும் கம்பில் பல வகைகள் உள்ளன. கிரேட் மில்லட் (சோளம்), பியர்ல் மில்லட் (கம்பு), பிங்கர் மில்லட் (கேழ்வரகு), பாக்ஸ்டைல் மில்லட் (தினை), லிட்டில் மில்லட் (சாமை), கோடோ மில்லட் (வரகு), காமன்மில்லட் (பனி வரகு), பார்ன்யார்ட் மில்லட் (குதிரைவாலி).இந்த கம்பு வகைகளில் மிக முக்கிய ஊட்டச்சத்துகளான காப்பர், மாங்கனீசு, பாஸ்போரஸ், மெக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இதிலுள்ள மெக்னீசியம் இருதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்பதால், மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அதன் வீரியத்தை குறைக்கச் செய்கிறது.குறிப்பாக, நீரிழிவு நோயால் ஏற்படும் இருதய நோய், மாரடைப்பையும் தடுக்கிறது. பாஸ்போரஸ் எலும்புக்கு உறுதியை அளிப்பதோடு, உடலின் ஆற்றல் மூலக்கூறு எனப்படும் ஏ.டி.பி. மூலக்கூறு உற்பத்திக்கும், நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.பொதுவாக கம்பில் உள்ள அதிக அளவிலான மெக்னீசியம் 300 வகையான நொதிகளுக்கு (என்சைம்ஸ்) துணை காரணியாக விளங்குகிறது. இந்த நொதிகள் உடலின் குளுகோஸ் பயன்பாட்டிலும், இன்சுலின் சுரத்தலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.இதனால், டைப் 2 நிரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. கம்பில் உள்ள நார்ச்சத்து பெண்களுக்கு ஏற்படும் பித்தப்பை கல், மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.உலக சுகாதார நிறுவனத்தின் சத்தான உணவு தானியங்களாகக் கூறப்பட்டுள்ளதில் முதலிடத்தை மக்காச்சோளமும், இரண்டாவது இடத்தை கம்பும் (மில்லட் வகைகள்), மூன்றாவது இடத்தை ஓட்ஸும் பிடித்துள்ளன. நான்காவது இடத்திலேயே கோதுமை உள்ளது.அரிசி மற்றும் கோதுமைபோல 3 முதல் 5 மடங்கு சத்தானது கம்பு வகைகள். கம்பு பயிரிடுவது உயிரினப் பரவலுக்கும், சூழல் மேம்பாட்டுக்கும் உகந்தது. வளமான மண்ணோ, அதிக தண்ணீரோ, வேதியியல் உரங்களோ அவசியம் இல்லை.இது பூச்சியினங்களைக் கவராத பயிர் என்பதால், நோய்த் தொல்லையும், அதைத்தடுப்பதற்கான விஷங்களைத் தெளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.ஆனால், ஒரு கிலோ நெல்லை விளைவிக்க 4000 லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீர் தேங்கும் நெல் வயல்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் வாயு நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.பசுமை புரட்சி காட்டிய அரிசி, கோதுமை இரண்டும் கம்பின் இடத்தை ஆக்கிரமித்துவிட்டன.1971-ல் 18.41 மில்லியன் டன்னாக இருந்த கம்பு உற்பத்தி, 2006-ல் 17.97 மில்லியன் டன்னாக சுருங்கியது. இதே காலத்தில் 38.09 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 85.72 மில்லியன் டன்னாகவும், 18.1 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி 70 மில்லியன் டன்னாகவும் உயர்ந்தது. அதாவது, நெல் 125 சதவீதமும், கோதுமை 285 சதவீதமும் அதிகரித்துள்ளது.பல நோய்களை ஏற்படுத்தும் குளுடன் மிக்க கோதுமையைதான் நாம் சர்க்கரை நோய்க்கு நல்லது என நினைத்து அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். அதே சமயத்தில், மிகச் சொற்ப அளவில் சத்துகள் உள்ள அரிசியைத்தான் முதலிடத்தில் வைத்து உற்பத்தி செய்துவருகிறோம்.ஆனால், அனைத்து சத்துக்களையும் அதிக அளவில் கொண்ட, பல நோய்களைத் தடுக்கும் தன்மைகொண்ட, குறிப்பாக நீரிழிவு நோய், மாரடைப்பு, மார்பக புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கவல்ல, சர்க்கரை அளவு குறைந்த, அக்ரிலமைட், குளுடன் நச்சுப் பொருள்கள் இல்லாத, அதிக கலோரி கொண்ட கம்பை உற்பத்தி செய்வதிலும், உணவாகப் பயன்படுத்துவதிலும் நாம் தோற்றிருக்கிறோம்.எனவே, பொது விநியோகத் திட்டத்தில் கம்பை உடனடியாக சேர்ப்பது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல விடுதி ஆகியவற்றில் கம்பு வகை உணவுகளை அரசு இடம்பெறச் செய்ய வேண்டும்.கம்பு பயிரிட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, அதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். கம்பை உணவாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.செலவு மிக்கதாகவும், பிரச்னைக்குரியதாவும் விவசாயம் மாறிவரும் சூழலில், பஞ்சமில்லாத, சக்திமிக்க வருங்கால சந்ததியை உருவாக்க கம்பு உற்பத்தியையும், பயன்பாட்டையும் நமக்காக நாம் மீட்டெடுப்பது மிக அவசியம். தேநீருக்கு மாற்றாக கம்மங்கூழும் கம்மங்கஞ்சியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

Comments