‘சீட் பெல்ட்’ தரும் ஆரோக்கியம்

'சீட் பெல்ட்' தரும் ஆரோக்கியம்

வாகனங்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும் என்று அரசு பல முறைகளில் பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும், பலர் இதை கண்டு கொள்வதில்லை. விபத்து நடைபெறும்போது இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதையும், காருக்குள்ளே தலை மோதி உயிரிழப்பு ஏற்படுவதையும் சீட் பெல்ட் தடுக்கும். இப்படி உயிரைக்காக்கும் சீட் பெல்ட் ஆரோக்கியத்தையும் தருகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவின் சிறுநீரகவியல் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு, சீட் பெல்ட்டுகளை அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு அதிகப்படியாக உணர்த்தியுள்ளது. சீட் பெல்ட், ஏர் பேக் ஆகியவை விபத்தின் போது தலை, மார்புப் பகுதிகளைக் காப்பாற்றுவதுடன், சிறுநீரகங்களையும் காக்கும் என்பதை இந்த ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடந்த 2 லட்சத்து 87 ஆயிரத்து 174 சாலை விபத்துகளை நுட்பமாகக் கவனித்திருக்கிறார்கள். அதில் சீட் பெல்ட் அணிந்த 2 ஆயிரத்து 580 பேருடைய சிறுநீரகங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. சிறுநீரக பாதிப்புகள் 23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டிய அவசியமும் பாதியாகக் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்துகளில் சீட் பெல்ட் அணியாதவர்களில் 44.3 சதவிகிதத்தினர் சிறுநீரகப் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். சிறுநீரகத்தை அகற்ற வேண்டிய சதவிகிதம் அவர்களுக்கு 47.5ஆக அதிகரித்து இருப்பதையும் ஆய்வில் சுட்டிக் காட்டினார்கள். பிரசாரமாக சொல்வதைவிட சீட் பெல்ட் அணிந்தவர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பையும், அணியாதவர் களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளையும் ஆதாரப்பூர்வமாக சொல்லியிருப்பதால், மக்களிடம் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

எப்படியோ சீட் பெல்ட் அணிவது வேறுவிதமான பக்கவிளைவுகள் எவற்றையும் ஏற்படுத்தாமல் உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தை தருவதுடன், குறிப்பாக சிறுநீரகங்களை பாதுகாப்பது மிக நல்ல செய்தி. இனியாவது வாகனங்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட்டை கட்டாயமாக அணிவோம்.

Comments