பாலைவனம், சோலைவனமாகிய அதிசயம்!

பாலைவனம், சோலைவனமாகிய அதிசயம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது செரபியம் காடு. 340 ஹெக்டேரில் பரந்துவிரிந்துள்ள காடு, சுற்றுச்சூழலின் அதிசயம்! பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள இந்தக் காட்டில் மண்ணின் மரங்களும் அந்நிய மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. ஜெர்மனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலைவனமாதலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுக்கணக்கில் மழை இல்லாத இடங்கள் காலப்போக்கில் பாலை நிலங்களாக மாறிவிடுகின்றன. ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட நிலங்கள் அதிகம். ஆராய்ச்சியாளர்கள் பாலை நிலங்களை மீண்டும் வளம் மிக்க நிலங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கி, வெற்றியும் பெற்றுவிட்டனர். நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, குறிப்பிட்ட அளவுக்குச் சுத்திகரிக்கிறார்கள். இந்த நீரை நீண்ட குழாய்கள் மூலம், பாலைவனத்துக்கு அனுப்புகிறார்கள். விதைகள், மரங்கள், செடிகள் என்று நடப்பட்ட இடங்களில் குழாய் மூலம் கழிவு நீர் வந்து சேர்கிறது. மழையை எதிர்பார்த்து இந்தத் தாவரங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை. 'கழிவு நீரை ஓரளவு சுத்தம் செய்து பயன்படுத்துவதால் செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த நீரை மனிதர்கள் பயன்படுத்த முடியாது. மனிதர்கள் பயன்படுத்தும் அளவுக்குச் சுத்திகரிக்க வேண்டும் என்றால் ஏராளமாகச் செலவாகும். இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துகளும் சூரிய ஒளியும் செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன. 15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. செரபியம் காடு மனிதர்களால் ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

புத்தகம் திருப்பிக் கொடுக்காவிட்டால் சிறை!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ஏதென்ஸ் லைம்ஸ்டோன் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள், டிவிடிகள் இருக்கின்றன. இங்கிருந்து எடுக்கப்படும் புத்தகங்களையும் டிவிடிகளையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்காவிட்டால், 30 நாட்கள் சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம். 'எங்கள் நூலகத்தில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இதுவரை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக் கொடுக்கவே இல்லை. இதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். சரிவர வில்லை. அதனால் இந்த அதீத தண்டனையைக் கொண்டு வரவேண் டியதாகிவிட்டது. எடுத்தவுடன் தண்டனை விதித்துவிட மாட்டோம். முதலில் நினைவூட்டல் மெயில் அனுப்புவோம். அடுத்து ஒரு எச்சரிக்கை அனுப்புவோம். 10 நாட்களில் திருப்பித் தரவில்லை என்றால் 6,500 ரூபாய் அபராதம் அல்லது 30 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. பொதுச் சொத்தை எதுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. பொதுச் சொத்து அனைவருக்கும் பயன்பட வேண்டும், ஒருவரிடம் முடங்கிப் போகக்கூடாது. இந்தக் கட்டுப்பாடு கொண்டு வந்ததிலிருந்து ஒரு சிலர்தான் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். புத்த கங்கள் பத்திரமாக வந்து சேர்ந்துவிடுகின்றன' என்கிறார் நூலகர்.

 

Comments