எம்.விஸ்வேஸ்வரய்யா புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர்

எம்.விஸ்வேஸ்வரய்யா புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர்

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.விஸ்வேஸ்வரய்யா (M.Visvesvaraya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட் டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத் தில் பிறந்தவர் (1860). இவரது முழுப் பெயர், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ் வரய்யா. தந்தை சமஸ்கிருத பண்டிதர். ஆரம்பக் கல்வியை சொந்த ஊரிலும் மேல்நிலைப் பள்ளி கல்வியைப் பெங்களூரிலும் பயின்றார்.

l

15 வயதில் தந்தையை இழந்தார். வறுமை காரணமாக, தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டி னார். 1881-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய பெங்க ளூர் மத்திய கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பயின்றார்.

l

புதிது புதிதாய் எதையாவது உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். பம்பாய் பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பின்னர், இந்தியப் பாசன ஆணையத்திலும் பணியாற்றினார். அப்போது நவீன இந்தியாவை வடிவமைக்கும் பணிகளில் அசுர வேகத்துடன் களமிறங்கினார்.

l

தானியங்கி வெள்ள மதகை வடிவமைத்தார். 1903-ல் அதை ஒரு நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்பு அமைப்புமுறையை உருவாக்கினார். துறைமுகங்களைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கத் தடுப்பு அமைப்புகளை வடிவமைத்து பிரபலமடைந்தார்.

l

ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர்த்தேக்க அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் காவிரியின் குறுக்கே கட்டினார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும், மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின்உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.

l

1912-ல் மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை ஏற்கும் முன்னர், தன் உறவினர்கள் அனைவரையும் ஒரு விருந்துக்கு அழைத்து, எந்தச் சலுகைகளுக்காகவும் தன்னை யாரும் அணுகக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மைசூர் மாகாணக் கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

l

ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சந்தன எண்ணெய் நிறுவனம், உலோகத் தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923-ல் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

l

1934-ல் 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை எழுதினார். கிராமங்களைத் தொழில்மயமாக்குதல், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் சில நூல்களை எழுதியுள்ளார். லண்டன் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சிவில் என்ஜினீயரிங் அமைப்பு, இந்தியப் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

l

ஆங்கில அரசின் 'சர்' பட்டமும் பெற்றார். 1955-ல் 'பாரத ரத்னா' விருது பெற்றார். புனேயில் இவர் பயின்ற பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1918-ம் ஆண்டு அரசுப் பதவிகளிலிருந்து விருப்பு ஓய்வு பெற்றார். ஆனாலும் இறுதிவரை நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார்.

l

'இந்தியப் பொறியியலின் தந்தை' எனப் போற்றப்பட்ட எம்.விஸ்வேஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 101-வது வயதில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், 'இந்தியாவின் பொறியியலாளர் தின'மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.. 

Comments