கண் கவரும் தரைத்தளத்துக்கு உள்ளம் கவரும் டைல்ஸ் வகைகள்

கண் கவரும் தரைத்தளத்துக்கு உள்ளம் கவரும் டைல்ஸ் வகைகள்

ஒரு வீட்டின் தரைத்தளத்தை ஐந்தாவது சுவர் என்று சொல்வார்கள். சாதாரண கான்கிரீட்டில் அமைப்பது முதல் விலை உயர்ந்த 'மார்பிள் ஸ்டோன்' வரை தரைத்தளத்தை அமைப்பதற்கான வழிமுறைகள் பல வகையாக இருக்கின்றன. இன்னும் சற்று மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக 'வுடன் புளோர்' எனப்படும் மரத்தால் இழைக்கப்பட்ட தரைத்தள அமைப்பும் இப்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது.

'டைல்ஸ்' தேர்வும்.. வகையும்

கண் கவரும் வண்ணமும், வடிவமும் இருக்குமாறு அழகாக வீட்டை வடிவமைத்தாலும் அதன் தரைத்தளத்தை சாதாரணமாக அமைத்துவிட முடியாது. 'பட்ஜெட்' உள்ளிட்ட பல காரணங்களுக்காக சரியான தேர்வு இல்லாமல் வீட்டின் தரைத்தளத்தை அமைத்தால் அதன் அழகு நிச்சயம் குறைந்து விடும். இப்போது சந்தையில் நமது 'பட்ஜெட்டின்' அளவுக்குள் அடங்கும்படி அருமையான 'டைல்ஸ்' வகைகள் கிடைக்கின்றன. 'டிஜிட்டல் டைல்ஸ்', 'செராமிக் டைல்ஸ்', 'விர்டிபைடு டைல்ஸ்', 'போர்சலைன் டைல்ஸ்', 'கிளேஸ்டு டைல்ஸ்' மற்றும் 'முப்பரிமாண டைல்ஸ்' என்று பல்வேறு வகைகளாக உள்ளன.

'செராமிக் டைல்ஸ்'

'செராமிக் டைல்ஸ்' வகைகள் களிமண், மணல் மற்றும் வேறு சில இயற்கை பொருள்கள் ஆகியவற்றை கலந்து உருவாக்கப் படுபவை. உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் ஒட்டுவதற்கு ஏற்றதாகவும், சுவரில் பதிப்பதற்கும், தரைத்தளத்தில் பதிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை தயார் செய்யப்படுகின்றன. இவை சுத்தப்படுத்த எளிமையாக இருப்பதோடு, ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை. கறைகளும் அதிகமாக இவற்றில் படிவதில்லை. 'குவாரி டைல்ஸ்' வகையானது சொரசொரப்பாக இருப்பதால் தோட்ட நடைபாதை, நீச்சல் குளத்தை ஒட்டிய நடைபாதை, கார் பார்க்கிங், வாசல் படிக்கட்டுகள் ஆகிய இடங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

'விர்டிபைடு டைல்ஸ்'

களிமண், 'சிலிக்கா', 'குவார்ட்ஸ்', 'பெல்ட்ஸ்பர்' ஆகிய கனிமப்பொருட்களை சேர்த்து இவை தயார் செய்யப் படுகின்றன. உறுதியாக இருப்பதோடு, ஈரப்பதத்தால் உண்டாகும் பாதிப்புகளும், கறைகளும் இவற்றில் படிவதில்லை. இவ்வகை 'டைல்ஸ்' நீடித்து உழைப்பதாலும், அழகிய கண்கவர் வண்ணங்களாலும் மற்ற வகைகளுக்கு மாற்றாக உள்ளன. தளங்களிலும், சுவர்களிலும் இவற்றை பதிப்பதற்கு பல்வேறு அளவுகளில் 'பாலிஷ்' செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை 'டைல்ஸ்கள்' ஒட்டப்பட்டவுடன் விரைவாக 'செட்' ஆவது குறிப்பிடத்தக்கது.

'போர்செலைன் டைல்ஸ்'

'போர்செலைன் டைல்ஸ்' என்பவை சீன களிமண் மூலம் உருவாக்கப்படுபவை. நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால் ஈரத்தால் வரும் பிரச்சினைகள் இதில் வருவதில்லை. மற்ற 'டைல்ஸ்களைவிட' வலுவாக இருப்பதால் அதிக புழக்கம் இருக்கக்கூடிய தளங்களுக்கு ஏற்றவை. அதிக ஜன சந்தடி காரணமாக உண்டாகும் தேய்மானங்கள் பெரிய அளவில் இருக்காது.

'க்ளாஸ்டு டைல்ஸ்'

'செராமிக் டைல்ஸ்கள்' மேல் ஒரு அடுக்கில் கண்ணாடி தூள் தூவப்பட்டு பளபளப்புடன் உருவாக்கப்படுபவை 'கிளாஸ்டு டைல்ஸ்' ஆகும். கட்டிடத்தின் உட்புறம், வெளிப்புறம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் பயன்படும். பொதுவாக, அலுவலகங்களில் இவை கம்பீரமான தோற்றத்தை தரக்கூடியவை. வரவேற்பறையில் இவை ஒட்டப்படும்போது வசீகரமான வண்ணங்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். வெளிச்சத்தை பிரதிபலிக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் மின்விளக்கு வெளிச்சத்தின் பிரதிபலிப்பு அறை முழுவதும் எதிரொளிக்கும்.

'முப்பரிமாண டைல்ஸ்'

'3டி' என்று சொல்லப்படும் முப்பரிமாண முறையிலான 'டைல்ஸ்கள்' நாம் விரும்பும் காட்சியை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. எல்லா அறைகளுக்கும் பொருத்தமாக உள்ள '3டி டைல்ஸ்' வகைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 'டிஜிட்டல்' வகை 'டைல்ஸ் களில்' நமது முகத்தைக்கூட படமாக பதித்து வீட்டை அழகு செய்யலாம். இவ்வகை 'டைல்ஸ்' வகைகள் இப்போதுதான் நமது நாட்டில் அறிமுகமாகி இருக்கின்றன.

Comments