ரோவல்ட் தால் ஆங்கில எழுத்தாளர்

ரோவல்ட் தால் ஆங்கில எழுத்தாளர்

வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரோவல்ட் தால் (Roald Dahl) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

வேல்ஸ் நாட்டின் லேண்டாஃப் நகரில் (1916) பிறந்தார். தந்தை நார்வே நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டில் நார்வேனிய மொழி பேசினர். இவருக்கு 3 வயது இருக்கும்போது தந்தை இறந்தார். அவரது விருப்பப்படி, குழந்தைகளின் கல்விக்காக வேல்ஸிலேயே தங்கிவிட்டார் தாய்.

l

பள்ளிப் பருவத்தில், தால் மிகவும் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தார். அதனால் இங்கிலாந்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வாரம் தவறாமல் தாய்க்கு கடிதம் எழுதுவார். விடுதியில் தங்கிப் படிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், இதுபற்றி தாயிடம் அவர் கூறியதே இல்லை.

l

பின்னர் தனியார் பள்ளியில் பயின்றார். அப்போதே, எழுத ஆரம்பித்தார். கால்பந்து, ஸ்குவாஷ் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்த அணிகளின் கேப்டனாக இருந்தார். புகைப்படக் கலையிலும் அதிக திறன் பெற்றிருந்தார்.

l

படிப்பை முடித்ததும், பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவில் உள்ள ஷெல் பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர்ந்தார். 1939-ல் இரண்டாம் உலகப் போரில் ராயல் விமானப் படையில் பணியாற்றினார். விங் கமாண்டர் நிலைக்கு உயர்ந்தார்.

l

அப்போது ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். உடல்நிலை தேறியதும் வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் துணை விமான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றியபோது, அமெரிக்காவின் பிரபல நாவலாசிரியர் சி.எஸ்.ஃபோரஸ்டர், போர் அனுபவங்களை எழுதுமாறு இவரை ஊக்கப்படுத்தினார்.

l

முதன்முதலாக 'சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பத்திரிகையில் இவரது சிறுகதை வெளியானது. பின்னர் முழுநேர எழுத்தாளரானார். ஏராளமான நூல்களை எழுதினார். இவரது கதைகள் தொலைக்காட்சிகளில் தொடர்நாடகங்களாக வந்தன.

l

குழந்தைகளுக்காக 19 நூல்களை எழுதினார். பெரியவர்களுக்கான நூல்களையும் எழுதினார். சிறுவயது அனுபவங்களே இவரது கதைகளின் கருவாக அமைந்தன. இவரது நூல்கள் விற்பனையில் சாதனைப் படைத்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் விற்பனையாகின. 'சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி' கதை திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.

l

சிறுவயதில் தான் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் தாய் பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார் என்பது 1967-ல் தாய் இறந்த பிறகுதான் தெரிந்துகொண்டார். சமீபத்தில் இவரது நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தக் கடிதங்கள் 'புக் ஆஃப் தி வீக்' என்ற தலைப்பில் பிபிசி ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டன.

l

தனது பள்ளி அனுபவங்கள் மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை 'பாய்: டேல்ஸ் ஆஃப் சைல்ட்ஹுட்' என்ற சுயசரிதை நூலில் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, மருத்துவம், ஏழைகள் கல்வி ஆகியவற்றுக்குத் தாராளமாக நிதி வழங்கினார்.

l

'வேர்ல்டு ஃபேன்டசி' வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரிட்டிஷ் புத்தக விருதுகள் உட்பட ஏராளமான விருதுகள் பெற்றார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் குழந்தைகளுக்கான இலக்கியத்தில் சாதனை படைத்தவருமான ரோவல்ட் தால் 74-வது வயதில் (1990) மறைந்தார். 

Comments