Wednesday, September 28, 2016

தலையெழுத்தை மாற்றுவார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

தலையெழுத்தை மாற்றுவார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

திருச்சி அருகே திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. உள்ளே நுழைந்ததும் கொடி மரம், அதைத் தொடர்ந்து நந்தியம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இதற்கு வேத மண்டபம் என்று பெயர். உள்பிரகாரம் சென்றால் நாதமண்டபம். இங்கு சப்த ஸ்வரத் தூண்கள் அமைந்துள்ளன. மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் துவார பாலகர்களை வணங்கி, பிரம்மபுரீஸ்வரரைக் காணலாம்.

நாதமண்டபம் தென்புறம் சென்றால் கிழக்கு நோக்கி பிரம்மா சன்னதி. பிரம்மனுக்கு கோயில்கள் இல்லை என்று சொல்வதுண்டு. ஆனால், பிரம்மன் இல்லாத சிவாலயங்கள் இல்லை என்பதே உண்மை. எல்லா சிவாலயங்களிலும், ஈசனின் இடப்புறம் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார். திருப்பட்டூரில் மட்டுமே பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனிச்சன்னதியுடன் காட்சியளிக்கிறார்.

பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடமே உள்ளது என கர்வத்தில் இருந்தார். ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என நான் என்ற அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது. ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரது  நிலையை உணர வைக்க எண்ணினார். 'பிரம்மனே... ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்' என்று கூறி, அவரது ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார். பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன் நிலையை உணர்ந்த பிரம்மன் திருப்பட்டூரில் துவாதச  சிவலிங்கங்களை(பனிரெண்டு லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். 'பிரம்மனே... அனைவருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உனது தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபடுபவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என்று வரமளித்தார்.

'விதியிருப்பின் விதி கூட்டி அருள்க' என்றும் வரம் வழங்கினார். இந்த வரம் இரு பொருள் படும். ஒன்று விதியிருப்பின் அதாவது இத்தலத்தில் வந்து யாருக்கெல்லாம் தலைவிதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே உன்னை வந்து பார்த்து மாற்றிக் கொள்ள இயலும். மற்றொரு பொருள்  யாருடைய தலையெழுத்தையெல்லாம் விதி கூட்டி மங்களகரமாக அருள முடியுமோ அவர்களுக்கெல்லாம் அருள்க என்பதாகும். குருவுக்கு அதிதேவதையாக விளங்கும் பிரம்மனின் அருட்பார்வை பட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற முடியும்.

ஒவ்வொருவருடைய ஆசையும் நாம் தற்போது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே. அதற்கு இத்தலத்து ஸ்ரீபிரம்மாவை நேரில் வந்து தரிசித்தால் போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவார். திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூருக்கு மேற்கில் 5 கி.மீ. தொலைவில் காவிரி வடகரையில் திருப்பட்டூர் உள்ளது. சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பட்டூர் செல்ல பஸ்கள் உள்ளன.

வாழ்வில் திருப்பம் நிச்சயம்

திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நமது பிறந்த நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத் தலமாகும். இத்தலத்தில் உள்ள ஈசன், பிரம்மன், அம்பாள் ஆகியோரை தரிசித்து விட்டு 36 தீபமிட்டு 9 முறை வலம் வந்து வேண்டுதல் வேண்டும். தம்பதியர் பிரிவு, துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தையின்மை, மன நோய்கள், தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி  'திருப்பட்டூர் வந்தோம், திருப்பம் நிகழ்ந்தது' என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

No comments:

Post a Comment