மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 5 (இந்திய பிரதமர்கள் )

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 5 (இந்திய பிரதமர்கள் )

ஜனநாயகக் குழந்தையைக்  கொன்ற பொம்மை!

அப்பா நேரு, இந்தியப் பிரதமராக இருக்கும்போது மகள் இந்திரா அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானால் அதிகாரம் எப்படி தூள் கிளப்பி, துஷ்பிரயோகமாக மாறும் என்பதற்கு மறக்க முடியாத உதாரணம் கேரளா.இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, சர்வாதிகாரக் கொடுக்குகள் சிறுகச்சிறுகச் சித்ரவதை செய்து கடைசியில் சிதைத்துப் போடும் காரியத்தை நேருவும் இந்திராவும் செய்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில ஆட்சியை, ஒரு துளி மையால் அழித்தனர். 'எங்கள் பூமியை நாங்கள்தானே ஆளவேண்டும், அந்நியரான ஆங்கிலேயருக்கு ஆள என்ன அருகதை இருக்கிறது?' என்று கேள்விகேட்டு சுதந்திரப் போராட்​டம் நடத்தியவர்கள் 'சுதந்திரத்தின் பலனை' இப்படிச் சுக்கு​நூறாக உடைத்துக் கொண்டாடிக் கழித்தனர். சர்வாதிகாரத்தின் பலிபீடத்தில் ஜன​நாயகக் குழந்தை யாரும் கேள்விகேட்க முடியாத கும்மிருட்டில் கழுத்தறுக்கப்பட்ட எதேச்​சதிகாரத்தின் தொடக்கம் அது. வெறும் பொம்மை என்று சொல்லப்பட்ட இந்திரா, நான் வெறும் பொம்மை அல்ல, ஷாக் அடிக்கும் பொம்மை என்று சொல்லிய ஆண்டு 1959!

ஆம்! கேரள மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் இந்திரா தூண்டினார். ஜனநாயகம் குறித்தும் மக்களாட்சி பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிய பிரதமர் நேருவும் அதற்கு சம்மதித்தார். 'முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், இந்திராவின் பிடிவாதம் காரணமாக இறுதியில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று' என்று சொல்வார்கள். வரலாறு எப்போதுமே முடிவுகளையே வரவு வைக்கும். முடிவுக்கு முந்தைய விவாதங்கள், காலங்கள் கடந்ததும் வீணானவையே!

1957-ல் கேரளாவில் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் இருந்த 126 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களில் வென்றது. அதன் ஆதரவு சுயேச்சைகள் 5 இடங்களைப் பிடித்தனர். காங்கிரஸ் படர்ந்த நாடாக இருந்த இந்தியாவில் கம்யூனிஸம் மலர்ந்த மாநிலமாக கேரளா ஆனது. அப்போது கேரள எல்லைக்குள்ளும் அதன் பிறகு இந்திய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராகவும் உயர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்ட கால் நூற்றாண்டு காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது ஒரு கௌரவமாகவும், கம்யூனிஸ சமுதாயம் உருவாவதற்கான ஆரம்பமாகவும் கேரள ஆட்சி உற்சாகம் கொடுத்தது. 'இன்று கேரளா, நாளை இதர மாநிலங்கள், இறுதியில் மத்திய அரசாங்கம்' என்று கம்யூனிஸ்ட்கள் பேசத் தொடங்கினார்கள். ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி கசப்பாகவே பார்க்க ஆரம்பித்தது.

''ஐந்து சுயேச்சைகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். அவர்கள் சொல்வது திருப்தியானால்தான் உங்களைப் பதவியேற்க விடுவேன்'' என்று கேரள ஆளுநராக இருந்த ஹைதராபாத் காங்கிரஸ்காரர் கிடுக்கிப்பிடி போட்டுத்தான் ஈ.எம்.எஸ்-ஸை பதவி ஏற்கவே அனுமதித்தார். ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவரை சட்டமன்றத்துக்கு நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஆட்சியை அமைக்கும் ஆளுங்கட்சிக்கு உண்டு. அது அன்று மட்டுமல்ல... இன்றுவரை இருக்கும் நடைமுறை. ஆனால், காங்கிரஸ்காரரான அந்த ஆளுநர், ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நான்தான் நியமனம் செய்வேன் என்பதில் பிடிவாதம் காட்டினார். இத்தகைய சூழ்நிலையில் ஆட்சியை அமைத்த ஈ.எம்.எஸ். சில முக்கியமான முடிவுகளை, கொள்கைகளை அமல்படுத்தினார். அமல்படுத்த முயற்சித்தார்.

1. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய முக்கியமான மூன்று பகுதிகளிலும் வெவ்வேறு விதமான நிலக் குத்தகை முறை இருந்தது. பதவியேற்ற ஒருவார காலத்தில் அனைத்துவகை வெளியேற்றங்களையும் தடைசெய்து ஒரு அவசரச் சட்டத்தை போட்டார்கள். இது விவசாய சீர்திருத்தம் எனப்பட்டது. அதாவது கிராமப்புற சாதாரண மக்களுக்கும் நகர்ப்புறத்தில் இருந்த நடுத்தர மக்களுக்கும் இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. சமூகத்தின் வசதி படைத்தவர்களுக்கு இது கோபத்தைக் கிளப்பியது.

2. நகர்ப்புறங்களில் நடந்த வேலை நிறுத்தங்களின்போது போலீஸைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. போலீஸின் வேலை கிரிமினல்களைப் பிடிப்பதுதானே தவிர தொழில் உறவுகளில் தலையிடக்கூடாது என்று சொல்லப்பட்டது. 'இது சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும்' என்று விமர்சனம் செய்யப்பட்டது.

3. மத்திய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்துக்கு வெளியே இருக்கும் தொழில் அதிபர்களை கேரளா பக்கமாக ஈர்க்க இந்த ஆட்சி முயற்சிகள் எடுத்தது. இது உள்ளூர் தொழில் அதிபர்களை ஆத்திரம் அடைய வைத்தது.

4. புதிய கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்கள். தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகளை வைத்துக் கொண்டு தங்குதடையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் மொத்தமாக பள்ளி, கல்லூரிகளை ஆரம்பித்தவர்களுக்கு செக் வைத்தது. மதத்துக்கு ஆபத்து என்று இவர்கள் கிளம்பினார்கள்.

5. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இதர பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்தது. அதில் ஒரு சீர்திருத்தத்தை இந்த ஆட்சி கொண்டுவந்தது. இடஒதுக்கீடு பெறுபவர்களே ஒரு குறிப்பிட்ட அளவு வருட வருமானத்தை அடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று செய்யப்பட்ட அறிவிப்புக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு இந்தத் திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டனர்.

-இந்த ஐந்து கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் நடந்த அனைத்துப் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசினரும் குடியரசுத் தலைவரும் இழுத்தடித்தனர். இவை அனைத்தையும் 'பரிசோதனை முயற்சிகள்' என்று கம்யூனிஸ்ட் அரசாங்கம் சொல்லிக்கொண்டது. ஆனால், இந்தப் பரிசோதனைகளை அனுமதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இத்தனைக்கும் அன்றைய பிரதமர் நேரு, சோஷலிசம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லிக்கொண்டு இருந்ததும், இவர்கள் அமல்படுத்த நினைத்ததும் ஏறத்தாழ ஒன்றுபோல் நினைக்கத் தக்கவையே. ஆனால், காங்கிரஸின் ஏகபோகத்துக்கு இந்த மாதிரியான மாற்றுக் கட்சிகளின் பரிசோதனை முயற்சிகள் இடையூறாக இருக்கும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா நினைத்தார். மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை, 'வெகுஜன எழுச்சி' என்று நேருவும் இந்திராவும் பட்டம் கொடுத்தனர். ''கேரளாவில் நடக்கும் எழுச்சி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது'' என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். 'இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக உடனடியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' என்று சொன்னார்கள். கேரளாவில் அரசாங்கம் அமைந்து இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்த யோசனையை முதல்வர் ஈ.எம்.எஸ். கடுமையாக எதிர்த்தார்.

''தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அதனுடைய ஐந்து வருட பதவிக் காலத்துக்குள்ளேயே புதிய தேர்தலுக்கு ஆட்பட வேண்டும் என்று எவரும் கேட்க முடியாது. பிரதமராக இருந்தாலும் அதனைக் கேட்க முடியாது. பெரும்பான்மையே இருந்தாலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதே இதன் உள் அர்த்தம். நாங்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் இதுதான்''- என்று ஈ.எம்.எஸ். அறிவித்தார். அதன் பிறகு, ஆட்சியைக் கலைக்க நேரு காலதாமதம் செய்தார். ஆனால், இந்திரா கட்டாயப்படுத்தினார். ஒரு மாநிலத்தில் அமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 356-வது சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கி இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்திரா வலியுறுத்தினார். நோக்கம் நிறைவேறியது. ஈ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. 200 ஆண்டு காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பலனை, ஜனநாயகத்தின் அருமையை 28 மாதங்கள்கூட 'அடுத்த கட்சி' அனுபவிக்க அனுமதியாத சர்வாதிகார வடிவம் கேரளாவில் இருந்து தொடங்கியது. இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இந்திராவுக்குப் பிடித்திருந்தது.

அன்றைய தேதியில் கேரளா தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. கேரளாவில் ஈ.எம்.எஸ். அரசாங்கம் 59-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் தலைவராக உட்கார்ந்தார் இந்திரா. உட்கார்ந்த உடனேயே ஒரு மக்களாட்சிக்கு உலை வைத்தார். இதற்கு இன்னொரு உள்நோக்கம் கற்பிக்கப்படும். 'கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க அமெரிக்க உளவு நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு டெல்லி காங்கிரஸின் அதிகார மட்டத்தில் இருந்த சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்' என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டானியல் பேட்ரிக் எழுதியதாகச் சொல்வார்கள். இதைப் பின்பற்றி மலையாளத்திலும் புத்தகங்கள் வெளிவந்தன. அது உண்மையானால் இன்னும் ஆபத்தானது.

'ஐவஹர்லால் நேருவுக்கு பெண் பிறந்ததற்குப் பதிலாக ஒரு மகன் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மகன் தந்தைக்கு தோழனாகவும் பின்னர் வாரிசாகவும் ஆகியிருந்தால் அதிக சிரமம் இருந்திருக்காது அல்லவா?' என்று அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் இந்திராவிடம் கேட்டார். ''அதெப்படி சொல்ல முடியும்? ஒருவேளை சிரமங்கள் அதிகமாகி இருக்கலாம் அல்லவா?'' என்று இந்திரா பதில் சொன்னார். எந்தப் பொருளில் அப்படிச் சொன்னாரோ, இந்திய ஜனநாயக நெறிமுறைகளுக்கு அதிகப்படியான சிரமங்களை இந்திரா தனது ஆட்சி காலத்தில் செய்தார். அவர் 1966 ஜனவரி 24-ம் தேதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் 1977 வரையிலான 11 ஆண்டு காலத்தில் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 29 முறை இந்தியாவின் பல்வேறு மாநில ஆட்சிகளைக் கலைத்தார். அதற்கான ருசியை ஏற்படுத்திக் கொடுத்தது கேரளா. மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி. அப்படி ஆட்சி அமையவில்லையானால் வேறு கட்சி ஆட்சி அமைந்தால் அதனைக் கலைத்துவிட்டால் போகிறது என்ற 'அதிகார உச்சபட்ச குணம்' கேரளாவில்தான் அரும்பியது. அடுத்த 25 ஆண்டுகள் அதுவே ஆட்டிப் படைத்தது.

Comments