தேர்தல் தேதி அவசரகதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெற இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தேர்தல் தேதி அவசரகதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெற இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தமிழகத்தில் மாநகராட்சி, நகரசபை உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

2 கட்டமாக தேர்தல்

இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

தேர்தல் ரத்து

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தி.மு.க. வழக்கு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில், 'உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டு கூட எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டார்.

இடைக்கால தீர்ப்பு

இந்த நிலையில், இந்த வழக் கின் இடைக்கால தீர்ப்பை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிற்பகலில் வழங்கினார். அந்த இடைக்கால தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-உண்மையான ஜனநாயகம் என்பது கிராமங்களிலும் வாழும் மக்களின் மூலமாகத்தான் முடிவு செய்யவேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய மத்திய, மாநில அரசுகளை போல, 3-வது ஒரு அமைப்பாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகின்றன. இதற்காக கடந்த 1993-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்தது. எனவே, பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு நடத்தப்படும் தேர்தல் நடைமுறைகளை உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்ற வேண்டும்.

கிரிமினல்கள் போட்டி

ஆனால், பல ஆண்டுகளாக இந்த உள்ளாட்சி தேர்தல்களில் குற்றப்பின்னணி கொண்ட பல கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். அதுவும் அரசியல் கட்சிகளை சேர்ந்த குற்ற பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், தேர்தலின்போது வன்முறை வெடிக்கிறது. இப்படிப்பட்ட நபர்கள் போட்டியிட்டால், மகாத்மா காந்தியின் கனவு நனவாகுமா? இப்போது வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க. பல முறை தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. தற்போது, உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளது.

ஏற்க முடியாது

இதுகுறித்து மனுதாரர் தரப்பும், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.கடந்த 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைவிட, 2016-ம் ஆண்டுக்கான தேர்தலில் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது என்று தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே, இடஒதுக்கீடு தொடர்பான முடிவினை முன்பே எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை.அதே நேரம் மனுதாரர் கட்சி தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும். தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் இடஒதுக்கீடு தொடர்பாக விவாதித்து, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்கீடு செய்ய மனுதாரர் கட்சியும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அதை மனுதாரர் கட்சி செய்யவில்லை. எனவே, இடஒதுக் கீடு தொடர்பான மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது.

அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு

அதே நேரம், இந்த வழக்கு எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்டது என்றாலும், விசாரணையின்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மனு தாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.1995-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தின்படி, உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அறிவிப்புகளை முதலில் வெளியிடவேண்டும். அதன்பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி வரையிலான ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் மற்றொரு அறிவிப்பினை வெளியிடவேண்டும்.ஆனால், கடந்த செப்டம்பர் 25-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்பட்டமாக மீறல்

ஆனால், இதற்கு அட்வகேட் ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் குறித்து கடந்த செப்டம்பர் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும், 26-ந் தேதி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகைகளில் அந்த அறிவிப்பு ஒட்டப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதே நடை முறைதான் 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பின்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.ஆனால், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 24(2)(1)-ன்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின்னர் சிறிது காலஅவகாசம் வழங்கி, பிரிவு 24(1)-ன்படி வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடவேண்டும். ஆனால், இந்த நடைமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் பின்பற்றப்படவில்லை. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

நடு இரவில் அறிவிப்பு

மேலும் தேர்தல் அட்டவணையை செப்டம்பர் 26-ந் தேதி நடு இரவில், அதாவது 12.15 மணிக்கு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் கூறுவதை ஏற்கமுடியாது. நடு இரவில் அரசு அலுவலகத்தில் எந்த மனிதர்களும் இருக்கமாட்டார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் தேதியை அவசர கதியில் வெளியிடப்பட்டதால், ஆளும் கட்சியைத்தவிர பிற அரசியல் கட்சிகளால் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய் விட்டது.ஆனால், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆளும் கட்சிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால், அவர்கள் ஏற்கனவே வேட்பாளர்களை தேர்வு செய்து, சரியான நேரத்தில் பட்டியலை வெளியிட்டுவிட்டனர். ஆளும் கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தொடங்கிவிட்டனர். இதே போன்ற வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. தேர்தல் போட்டியில் அனைத்து தரப்புக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கவேண்டும். அந்த வாய்ப்பு தற்போது வழங்கப்படவில்லை.எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வெளியிடப்படவில்லை என்று முடிவு செய்கிறேன். எனவே, அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்கிறேன்.இதுதொடர்பான தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று அறிவித்து, அதையும் ரத்து செய்கிறேன்.

புதிய தேதி

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய அரசாணையை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் பிறப்பிக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்.அதே நேரம் அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதவி காலம் முடிவடைகிறது. எனவே, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வரை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 261-ன் கீழ் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கவேண்டும். அதே நேரம் இடஒதுக்கீடு தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

கொடூர குற்றவாளிகள்

பொதுவாக தேர்தல் என்றால், ஓட்டுக்கு பணம் கொடுப்பது. வாக்காளர்களுக்கு மதுபாட்டில்களை வழங்குவது என்ற நடைமுறை பின்பற்றப்படுகின்றன. இதையெல்லாம் தடுக்கவில்லை என்றால், நேர்மையான தேர்தலை நடத்த முடியாது.அனைத்து அரசியல் கட்சிகளும் பண பலத்தின் மூலம் தேர்தலை சந்திக்கின்றன. இதற்காக நில ஆக்கிரமிப்பாளர்கள், கொடூர குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்ற குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம் சிதைக்கப்படுகின்றன.எனவே, இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் எந்திரத்தனமாக செயல்படக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களை பற்றி அனைத்து விவரங்களுடன் கூடிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் கடந்த 2006-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பொறுப்பு உள்ளது

மேலும், உள்ளாட்சி நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதாக அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. இதற்கு காரணம் உள்ளாட்சி நிர்வாகிகள் பலர் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்.எனவே, உண்மையான சமூக சிந்தனையுடன் கூடிய நபர்கள் இந்த தேர்தலில் போட்டியிடும் விதமாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்களது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். அதே நேரம், இதுபோன்ற கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறேன்.

தள்ளிவைப்பு

இந்த வழக்கின் உத்தரவின்படி தேர்தல் நடத்தி முடித்து, அதற்கான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments