மலேசியன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ முதலிடம்

மலேசியன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ முதலிடம்

கோலாலம்பூர், பார்முலா1 கார்பந்தயத்தில் மலேசியன் கிராண்ட்பிரியில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிக்கார்டோ முதலிடம் பிடித்தார்.

ஹாமில்டன் அதிர்ச்சி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16–வது சுற்றான மலேசியன் கிராண்ட்பிரி கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 5.543 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஓடுபாதையை 56 முறை சுற்றி வர வேண்டும். அதாவது பந்தய தூரத்தின் மொத்த இலக்கு 310.408 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர்.தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 41–வது சுற்று வரை முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு எதிர்பாராத விதமாக அவரது காரின் என்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் அதிர்ச்சிக்குள்ளானார். என்ஜின் பழுதடைந்ததால் அவரால் மேற்கொண்டு முன்னேறி செல்ல முடியவில்லை. அத்துடன் கண்ணீர் மல்க வெளியேறினார்.

ரிக்கார்டோ முதலிடம்

ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிக்கார்டோ (ரெட்புல் அணி) 1 மணி 37 நிமிடம் 12.776 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவரது முதல் வெற்றி இதுவாகும். அவரை விட 2.443 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (ரெட்புல் அணி) 2–வதாகவும், ஜெர்மனியின் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) 3–வதாகவும் வந்தனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் முறையே செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 6–வது இடத்தையும், நிகோ ஹல்கென்பெர்க் (ஜெர்மனி) 8–வது இடத்தையும் பிடித்தனர்.

16 சுற்று முடிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ராஸ்பெர்க் 288 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 265 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், ரிக்கார்டோ 204 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர். இந்த சுற்றை நிறைவு செய்ய முடியாமல் போனதால் ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. எஞ்சிய 5 போட்டிகளிலும் ஹாமில்டன் முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். 17–வது சுற்று பந்தயம் ஜப்பானில் அடுத்த வாரம் 9–ந்தேதி நடக்கிறது.

Comments