காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவு நிறுத்தம் 7-ந்தேதி முதல் 12 நாட்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவு நிறுத்தம் 7-ந்தேதி முதல் 12 நாட்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. தமிழகத்துக்கு கர்நாடகம் 7-ந் தேதி முதல் 12 நாட்கள் தண்ணீர் தரவும் உத்தரவிட்டது.

மத்திய அரசு எதிர்ப்பு

காவிரிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. முடிவில், அக்டோபர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையில், தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. மேலும், 4-ந் தேதிக்குள் (நேற்றைக்குள்) மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய அரசு திடீரென்று எதிர்ப்பு தெரிவித்து திருத்தம் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை" என்றும், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் சட்டரீதியான நடவடிக்கையின் அடிப்படையிலும் பாராளுமன்றத்தின் வழியாக மட்டுமே அமைக்க முடியும்" என்றும் கூறப்பட்டுள்ளது.முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு, பின்னர் தன் நிலையில் மத்திய அரசு செய்த திடீர் மாற்றம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக வக்கீல் அறிக்கை

இந்த நிலையில் மத்திய அரசின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், கர்நாடக அரசு தரப்பில் நீதிமன்றத்துக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், செப்டம்பர் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, அக்டோபர் 1 மற்றும் 2-ந்தேதிகளில் தண்ணீர் திறந்து விட முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். அக்டோபர் 3-ந் தேதியில் இருந்து 5-ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது. கோர்ட்டு உத்தரவை கர்நாடகம் நிறைவேற்றி இருப்பதால் நான் அதன் சார்பில் மீண்டும் வாதாட முன்வந்து இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு வாதம்

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர், தன்னுடைய வாதத்தில் "தற்போது தண்ணீர் திறந்து விடுவது பற்றிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவு பற்றி இப்போது நாம் முடிவெடுக்க வேண்டும்" என கூறினார்.மேலும், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை. இதுபற்றி கோர்ட்டு முடிவு எடுக்கும்போது சட்டரீதியான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு காவிரி நடுவர்மன்றம் தந்துள்ளது. இந்த வாரியம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்ராபியஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட வழிமுறையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீடு சட்டம் 1956-ல் வரையறுத்துள்ளபடி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று வாதிட்டார்.

'நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது'

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, "இந்த விஷயத்தில் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு இறுதியானது" என்று கூறினார்.இடையில் கர்நாடக அரசின் சார்பில், மூத்த வக்கீல் பாலி நாரிமன் குறுக்கிட்டு, "காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு பல ஆண்டுகளாக அரசிதழில் வெளியிடப்படவில்லை. பின்னர் அது வெளியிடப்பட்டதால் ஏற்கனவே கர்நாடக அரசு தரப்பில் காவிரி நடுவர் மன்றத்துக்கு எதிராக தாக்கல் செய்த மூல வழக்கை அது பாதிக்காது. அந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 18-ந் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது" என்று கூறினார்.அப்போது அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த முடிவை ஒத்தி வைக்க கோரியபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, "எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அது எங்கள் அடிப்படை தேவை"என வலியுறுத்தி வாதாடினார்.அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்று நீதிபதி தெரிவித்தார். அதற்கு பாலி நாரிமன், "3 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் அதை விசாரிக்கும்" என்று கூறினார்.

தமிழக அரசு குற்றச்சாட்டு

அதற்கு தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வக்கீல் சேகர் நாப்டே, "தலைமை நீதிபதி அப்படி அமர்வுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தால் நாங்கள் ஒன்றும் கூற முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு 20-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. அப்போது கோர்ட்டில் இருந்த அட்டார்னி ஜெனரலும், கர்நாடகமும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதியும் கோர்ட்டில் இருந்தார். அப்போதும் அவர் ஒன்றும் கூறவில்லை. இப்போது திடீரென்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கிறது. கர்நாடக அரசின் கைப்பாவையாக மத்திய அரசு மாறிவிட்டது என்று வெளிப்படையாக நான் குற்றம் சாட்டுகிறேன்" என்று கூறினார்.அதற்கு நீதிபதிகள், "காவிரி மேலாண்மை வாரியம் பற்றி 18-ந் தேதி முடிவு எடுக்கலாம். அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டிய தண்ணீர் அளவு பற்றி முடிவு எடுக்கலாம்" என்று கூறினர்.

30 நிமிடம் அவகாசம்

அப்போது பாலி நாரிமன், "வேண்டும் அளவுக்கு தண்ணீர் திறந்து விட்டாயிற்று. இனியும் திறக்க சொன்னால் எங்களால் முடியாது. இது அரசாங்கம் மட்டும் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினை. இனி தண்ணீர் திறக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது" என்று கூறினார். ஆதற்கு நீதிபதிகள், " கர்நாடக அரசால் வரும் 18-ந்தேதி வரை எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியும் என்பது பற்றி அரசுடன் கலந்தாலோசித்து 30 நிமிடங்களில் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். அதன்படி 30 நிமிடங்கள் கழித்து கர்நாடக தரப்பு வக்கீல் மோகன், கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், "மாநில அரசுடன் கலந்து ஆலோசித்தோம். கடந்த செப்டம்பர் 5-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை தமிழகத்துக்கு 17.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மேலும் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க வேண்டி இருப்பதால் இதற்குமேல் எங்களால் தண்ணீர் திறக்க முடியாது. இருப்பினும் கோர்ட்டு விரும்பியபடி வரும் 18-ந்தேதி வரை வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த முடிவு 18-ந்தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கிடையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் காவிரிபடுகையில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரங்களை அறியும் பொருட்டு நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைவராகவும், உறுப்பினர்களாக எஸ்.மசூத் உசேன், டாக்டர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதன்மை பொறியாளர்கள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு தலைமை செயலாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் அதிகாரிகள் செயல்படுவார்கள். இந்த குழு உண்மை நிலையை ஆராய்ந்து 17-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால ஏற்பாடாக தமிழகத்துக்கு 7-ந் தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும்" என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

Comments