பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்துக்கு பக்க பலமாக செயல்பட்ட ‘இஸ்ரோ’ பூமியை சுற்றிவரும் இந்திய செயற்கைகோள்.

பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்துக்கு பக்க பலமாக செயல்பட்ட 'இஸ்ரோ' பூமியை சுற்றிவரும் இந்திய செயற்கைகோள்.

பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்துக்கு 'இஸ்ரோ' பக்க பலமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

'இஸ்ரோ'

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து, இந்திய ராணுவத்தின் கமாண்டோக்கள் மிக துல்லியமாக அதிரடி தாக்குதல்கள் நடத்தி, வெற்றி பெற்றிருக்கிறார்கள் அல்லவா?

இந்த அதிரடி நடவடிக்கையில் 'திரைக்கு பின்னால்' என்று சொல்லக்கூடிய வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'இஸ்ரோ' இருந்திருக்கிறது.

இஸ்ரோ நேரடியாக போரிடுவதில்லை. இது ராணுவம் சாராத சிவிலியன் அமைப்புதான். ஆனால் இந்த இஸ்ரோ நாட்டுக்கு பயன்படுத்தி வருகிற வல்லமை, உலகிலேயே உன்னதமானது. இஸ்ரோ வடிவமைத்த செயற்கைக்கோள்கள், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள், அவர்களின் கட்டமைப்புகளை கழுகுக்கண் கொண்டு கண்காணித்து வருகின்றன. அப்படி கண்காணித்துவந்து, இருவழி தகவல் பரிமாற்றத்துக்கு உதவவும், மிக துல்லியமான வழிகாட்டும் சமிக்ஞைகளை வழங்கவும் ஆற்றல் வாய்ந்த ஒரு கட்டமைப்பை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த கட்டமைப்புதான், நமது நாட்டின் எல்லையை இரவு, பகல் பாராது பாதுகாக்க உதவியாக அமைந்துள்ளது.

இஸ்ரோவிடம் இப்படி ஒரு ஆற்றல்வாய்ந்த கட்டமைப்பு இருப்பது, பலருக்கு தெரியாது.

மகத்தான பங்களிப்பு

அந்த வகையில், இஸ்ரோ வலிமை வாய்ந்த 17 ஆயிரம் பேரை கொண்டு, நாட்டின் 120 கோடி மக்களின் பாதுகாப்புக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறும்போது, "இஸ்ரோ, தொழில்நுட்பங்களின் ஆற்றல் வாய்ந்த தொகுப்பாக திகழ்கிறது. மிகவும் துல்லியமாக படம்பிடிக்கிற செயற்கைக்கோள், நகர்ப்புறங்களை திட்டமிடுவதற்கும், எல்லைப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை கண்காணிப்பதற்கும் உதவுகிறது. செயற்கைக்கோள் படங்களை பொறுத்தமட்டில் அவற்றுக்கு நண்பர்கள், பகைவர்கள் என்று பேதமில்லை. இனி வரும் ஆண்டுகளில், எல்லையில் பகைமையினால் பதற்றம் ஏற்படுகிறபோது, இஸ்ரோவின் பங்களிப்பு மகத்தானதாக அமையும்" என்கிறார்.

சோடை போகாது

இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார், "இந்தியாவின் தேசிய நலன்களை இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி காப்பதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு பின்தங்காது, சோடை போகாது" என்கிறார்.

இந்தியா இன்றைக்கு புவியின் சுற்று வட்டப்பாதையில் 33 செயற்கைக்கோள்களை சுற்றி வரச்செய்திருக்கிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஒரு விண்கலத்தை ஈடுபடுத்தி உள்ளது.

33 செயற்கைக்கோள்களில், 12 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், 7 வழிகாட்டும் செயற்கைக்கோள்கள், 10 புவி ஆய்வு செயற்கைக்கோள்கள், 4 வானிலை ஆய்வு செயற்கைக்கோள்கள்.

அப்படி பார்த்தால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவியுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.

இப்போது உதவிய செயற்கைக்கோள்

ஒவ்வொரு செயற்கைக்கோளும், குறிப்பிட்ட நோக்கத்துக்காக மிகச்சரியாக வடிவமைக்கப்பட்டவை. எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவை தேசிய நலனுக்கு உதவுகின்றன.

வானில் மிகவும் கூர்மையான கண்களை, செயற்கைக்கோள் வடிவத்தில் இந்தியா கொண்டிருக்கிறது. அவைதான், துல்லியமான தாக்குதல்களுக்கு ஆயத்தங்களை செய்பவை. வானில் இந்தியாவின் மிகச் சிறந்த கண் என்று சொன்னால் அது கேர்ட்டோசேட் 2 வரிசை செயற்கைக்கோள்தான்.

ஜூன் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்தான், இப்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்கள் நடத்துவதற்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

நவாஸ் ஷெரீப் கார்கள்

இது 526 கி.மீ. அளவிலான தனது அமர்விடத்தில் இருந்து, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு பொருளையும் பார்க்க முடியும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்களாவில் எத்தனை கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதுவரையில் இந்த செயற்கைக்கோள் கண்டு, கண்காணித்து துல்லியமாக கூற முடியும்.

மிக துல்லியமான ஆற்றலை உடைய இந்த செயற்கைக்கோள், பாகிஸ்தானில் உள்ள பீரங்கிகள், லாரிகள், போர் விமானங்கள் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்தியா விரும்புகிற எதையும் உளவாளி போல கண்டறிந்து விடும்.

பாகிஸ்தானிடம் கிடையாது

இதுபற்றி இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறுகையில், "இந்த செயற்கைக்கோளின் வேகம் வினாடிக்கு 37 கி.மீ. என்கிறபோதும், 1 நிமிட வீடியோவைக்கூட எடுக்க முடியும். குறிப்பிட்ட ஒன்றின்மீது ஒரு நிமிடம் கவனத்தை செலுத்த முடியும்" என்கிறார்.

மேலும், புவியை படம் எடுக்கும் 3 செயற்கைக்கோள்களும் இயங்கி வருகின்றன. அவை, கேர்ட்டோசேட்-1, கேர்ட்டோசேட்-2, ரிசோர்ஸ்சேட்-2 ஆகும். இவையெல்லாம் பகல் நேரத்தில், மிகச்சிறப்பான படங்களை தர முடியும். எதிர்காலத்தில் இன்னும் துல்லியமான செயற்கைக்கோள்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தானிடம் இப்படி எந்தவொரு ஆற்றலும், வசதியும் கிடையாது.

பெரும் முதலீட்டின் பலன்

மிகத்துல்லியமான செயற்கைக்கோள்கள் சீனாவிடம் கூட கிடையாது என்ற கூடுதல் தகவலை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "விண்வெளி படம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா மிக அதிகளவில் முதலீடு செய்திருக்கிறது. அதன் பலன்களை இப்போது அறுவடை செய்து வருகிறது" என்றார்.

தப்ப முடியாது

பகலிலும், இரவிலும் பார்க்கிற சக்தியுடன்கூடிய செயற்கைக்கோள்களையும் இந்தியா பறக்க விட்டிருக்கிறது. அவை 'சிந்தெடிக் அபெர்ஜர் ரேடார் செயற்கைக்கோள்கள்' ஆகும். அவற்றில் ரிசாட்-1, ரிசாட்-2 என்று 2 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ளன. இவற்றின் பார்வையில் இருந்து எதுவும் தப்பி விட முடியாதாம். மேகங்கள் திரண்டிருந்தாலும்கூட அதையும் ஊடுருவி பார்க்கிற வல்லமையை இவை கொண்டிருப்பது சிறப்பம்சம்.

இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் நேவிக். இது வழிகாட்டும் செயற்கைக்கோள். இது அமெரிக்காவின் வழிகாட்டும் ஜி.பி.எஸ். அமைப்பை போன்று துல்லியமானது. எல்லையில் இருந்து எல்லா பக்கமும் 1,500 கி.மீ. பரப்பை கண்காணிக்கக்கூடியது.

24 மணி நேரமும் சமிக்ஞைகளை தரும். இது போன்ற வல்லமை, அமெரிக்காவிடமும், ரஷியாவிடமும்தான் உள்ளது.

ஜி.பி.எஸ். சிக்னல்கள்

இந்தியாவின் ஜி.பி.எஸ்., சிக்னல்கள், பயங்கரவாதிகளின் பின்னால் மூளையாக இருந்து செயல்படுகிறவர்களையும் நமது படை வீரர்கள் சென்றடைவதற்கு வழிகாட்டும்.

இந்தியாவின் ஜிசாட்-6 செயற்கைக்கோள் 2 ஆயிரம் கி.மீ., பரப்பளவில் கண்காணிக்கிற ஆற்றலை கொண்டுள்ளது. இது இரவும், பகலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய படைகளுக்கு வல்லமையை வழங்கத்தக்கதாகும். மிக நீளமான ஆன்டென்னாவை இது கொண்டுள்ளது. 21-ம் நூற்றாண்டின் மையப்படுத்திய போர் நெட்வொர்க்கில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யக்கூடியதாகும்.

சிறப்பு படைகளுக்கு தேவைப்படுகிற ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளை உருவாக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாதவன் நாயர் மத்திய அரசுக்கும், இஸ்ரோவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயற்கைக்கோள் எல்லாம் உருவாகி விட்டால், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு இஸ்ரோவின் பங்களிப்பு மகோன்னதமானதாக அமையும் என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. நம்மையும், நாட்டையும் பாதுகாப்பதில் பாதுகாப்பு படைகளுக்கு பக்க பலமாக இஸ்ரோவும், அதன் செயற்கைக்கோள்களும் எப்போதும் இருக்கும்.

Comments