டைட்டனில் ‘மீத்தேன்’ உயிர் வாழ்க்கை!

டைட்டனில் 'மீத்தேன்' உயிர் வாழ்க்கை!

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். அதுபோல, திடீரென்று ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிகொண்டுவிடும் பூகம்பம், சுனாமி, புயல்கள் மற்றும் பெருமழை வெள்ளம் போன்றவற்றால் அவ்வப்போது தாக்கப்படும் மனித இனம், பருவ நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஏற்படக்கூடிய புவி வெப்பமயமாதல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய துருவப் பனிமலை உருகுதல் போன்றவற்றால் இந்த பூமி அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்படும்போது கண்டிப்பாக அரண்டுதான் போய்விடுகிறது.

இது போதாதென்று விண்வெளி அல்லது அண்டப்பெருவெளியில் இருந்து விழக்கூடிய விண்கற்கள் மூலமாகவும் பூமி அழிவு ஏற்படும் ஆபத்துகள் இருகிறது என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பூமி தவிர்த்த வேறொரு கிரகத்துக்கு இடம்பெயர்ந்து மனித இனத்தைக் பாதுகாத்துக்கொள்ளலாம் எனும் நோக்கத்தில் அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு மையங்களில் அண்டப்பெருவெளியில், நட்சத்திரக் குடும்பத்தில் பூமியைப் போன்று உயிர்வாழ்க்கைக்கு தேவையான தண்ணீர், பிராண வாயு ஆகியவற்றைக் கொண்ட கிரகங்கள் அல்லது நிலவுகள் இருக்கின்றனவா என்று தேடிவரும் ஆய்வுகள் பல பத்தாண்டுகளாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில், மீத்தேன் வாயுவால் முழுவதும் சூழப்பட்ட, 'டைட்டன்' என்று அழைக்கப்படும் சனி கிரகத்தின் நிலவு ஒன்று நாசா விஞ்ஞானிகளால் பல வருடங்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாசா விஞ்ஞானிகள் டைட்டன் மீது ஒரு மர்மமான மேகம் ஏன் தோன்றியது என்று ஆய்வு செய்துகொண்டிருக்கும் அதே சமயம், உலகின் பிற விண்வெளி ஆய்வாளர்கள், மீத்தேன் வாயுவால் சூழப்பட்ட டைட்டனில் உயிர்கள் வாழ முடியுமா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஏனென்றால், பிராண வாயுவே இருக்க முடியாத அளவுக்கு உறைந்துபோய் கிடக்கும் டைட்டனில், பூமியை நினைவூட்டும் விதமாக, மலைத்தொடர்கள், நிலையான நீர் குளங்கள் மற்றும் தடிமனான பனிப்புகை கொண்ட வளிமண்டலம் என பல அமைப்புகள் இருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகம் அல்லது நிலவுகளிலேயே அதிகபட்ச பூமி போன்ற அமைப்பு கொண்டது சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன்தான் என்கிறது நாசா.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, இவற்றின் காரணமாக டைட்டன் உயிர்வாழ்க்கைக்கு தகுதியானதா? என்ற கேள்வி எழுகிறது. டைட்டனில் உயிர்வாழ்க்கை சாத்தியமா என்பது குறித்த தேடுதல் மூலமாக, கடந்த ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த வேதியியல் பொறியாளர்கள் ஒரு கவர்ச்சிகரமான யூகத்தை உருவாக்கினார்கள். அதில், 'டைட்டன் மற்றும் பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் பிராண முற்றிலும் இல்லாத சூழலில், மீத்தேன் வாயு அடிப்படையிலான உயிர்வாழ்க்கை சாத்தியமே. ஆனால் அது பூமியில் உள்ள உயிர்வாழ்க்கை போல இருக்காது. மாறாக முற்றிலும் வேறு விதமாக இருக்கும்' என்று கூறினார்கள்.

முக்கியமாக, பூமியில் உள்ள உயிர்வாழ்க்கை குறித்த அல்லது உயிரணுக்களைச் சுற்றியுள்ள சவ்வில் உள்ள உயிர்மூலக்கூறுகள் தொடர்பான முன்முடிவுகள் எதுவும் இல்லாமல், டைட்டனில் உள்ள சேர்மங்களில் இருந்து ஒரு உயிர் உற்பத்தியானால் அது எப்படி இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக வேதியியல் பொறியாளர்கள் தங்களின் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

ஆனால் பொதுவாக, ஒரு கிரகம் அல்லது நிலவு உயிர்வாழ்க்கைக்கு தகுதியானது என்று கருதப்படும்போது பூமியில் உள்ளது போல, கரிமம் அடிப்படையிலான மற்றும் பிராண வாயுவை சுவாசிக்கும் உயிர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தக் கூடிய திறன் குறிப்பிட்ட கிரகங்கள் அல்லது நிலவுகளுக்கு இருக்கக்கூடும் என்று கருதப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அது சரி, பூமியில் உள்ள உயிர்களின் அடிப்படை அமைப்பு என்ன?

பூமியில், உயிர் வாழ்க்கையானது பாஸ்பரஸ் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆன இரண்டு அடுக்குகளைக் கொண்ட ஒரு சவ்வின் (phospholipid bilayer membrane) அடிப்படையில் ஆனது. முக்கியமாக, மிகவும் உறுதியான இந்த சவ்வு, தண்ணீர் ஊடுருவிச் செல்லக்கூடிய மற்றும் உயிரணுக்களின் கரிமப் பொருட்களை உள்ளடக்கிய, தண்ணீரால் ஆன குமிழிகளைக் கொண்டது என்கிறார் ஆய்வாளர் ஆன்னி ஜூ.

அத்தகைய சவ்வினால் ஆன குமிழிகள் (vesicle) லைப்போசோம் (liposome) என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே வேற்று கிரகங்களில் உயிர்வாழ்க்கையை தேடக்கூடிய பெரும்பாலான விண்வெளி ஆய்வாளர்கள் சூரியனைச் சுற்றியுள்ள மிகவும் குறுகிய ஒரு பகுதியான 'திரவ தண்ணீர்' உள்ள உயிர்வாழ்க்கைத் தகுதிகொண்ட பகுதி அல்லது circumstellar habitable zone ல் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

ஆனால், மீத்தேன் மட்டுமே கொண்ட, பிராண வாயு இல்லாத டைட்டன் போன்ற உலகங்களில் உயிர் அமைப்பு வேறு விதமாக இருக்கலாமே? என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நைட்ரஜன் எனும் பொருள்படும் பிரெஞ்சு வார்த்தையான அசோடோசோம் (azotosome) என்று அழைக்கப்படும் ஒரு கற்பனையான உயிரணு சவ்வை உருவாக்கியது ஆன்னி ஜூ தலைமையிலான ஆய்வுக்குழு.

முக்கியமாக, இந்த அசோடோசோமில் டைட்டனின் குளிர்ந்த பகுதிகளில் இருக்கக்கூடிய நைட்ரஜன், கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பூமியில் உள்ள லைப்போசோமில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அசோடோசோம், லைப்போசோமுக்கு நிகரான உறுதி மற்றும் வளையும் தன்மை கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோதனைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சில சூழல்களில் டைட்டனில் உள்ள சில சேர்மங்களை இணைத்து, ஆக்ரோ நைட்ரைல் அசோடோசோம் எனும், பூமியில் உள்ள உயிரணுச் சவ்வு போலவே செயல்படும் உறுதியான சவ்வை உற்பத்தி செய்தது ஆன்னியின் ஆய்வுக்குழு. தற்போது யூகம் மற்றும் சோதனைக்கூட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆக்ரோ நைட்ரைல் அசோடோசோம், டைட்டன் நிலவில் இருந்து மாதிரிகளைக் கொண்டுவந்து மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு, ஊர்ஜிதப்படுத்தப்படும் வரை டைட்டனில் உயிர்வாழ்க்கை மற்றும் மீத்தேன் அடிப்படையிலான உயிர் அமைப்பு தொடர்பான மேலதிக புரிதல்கள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment