KALVISOLAI TNPSC

Monday, 10 October 2016

இது மாற்றத்திற்கான நேரம்!

இது மாற்றத்திற்கான நேரம்!

நஞ்சை, புஞ்சை என்ற விளைநில வேற்றுமை இயற்கையாகப் புவியியல் தட்பவெப்ப அடிப்படையில் பாசன நீரை மையமிட்டு எழுகிறது. எனினும் நீர் இருந்தால் நஞ்சை, நீர் இல்லாவிட்டால் புஞ்சை என்பதுவே நியதி. புவியியல் தட்பவெப்ப மண்டலம் (Climatic Zone)  என்பது இரண்டாம் பட்சமே.உணவு தானியங்களில் நெல் உற்பத்தி உயர வேண்டுமானால் பயிர் நிலங்களுக்குப் பாசனவசதியைப் பெருக்க வேண்டும். பாசன வசதியைச் செய்யும்போது புஞ்சை நிலம் நஞ்சையாவது நியதி. நஞ்சையாகும்போது புஞ்சை நிலத்தில் பயிரிட்ட சிறுதானியங்கள், பருப்புவகைப் பயிர்கள் மாறி நெல், கரும்பு, வாழை, பயிராகிறது.நஞ்சை பயிரிட்ட பின்னர் பாசனநீர் குறையும்போது பருப்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள் பயிராகலாம். ஒரே நிலத்தில் இவ்வாறு மாற்றுப்பயிர்த் திட்டம் மண்வள உத்தியாகவும் செயல்படும். மாற்றுப்பயிர்த் திட்டம் என்பது நஞ்சை புஞ்சை இரண்டுக்கும் பொதுவானது.இந்திய விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் முறையே மேட்டூர் அணைத் திட்டமும், கிருஷ்ணராஜா சாகர் அணைத் திட்டமும் சிறப்பானவை. கர்னல் காட்டன் துரையால் மேட்டூர் அணை கட்டப்பட்டதைத் தொடர்ந்து, 1832-இல் குளித்தலை அருகே முக்கொம்பில் கொள்ளிடம் பிரியும் இடத்தில் மேலணை கட்டப்பட்டு கொள்ளிடத்து நீர் காவிரிக்குத் திருப்பி விடப்பட்டது. கல்லணை பழுதுபார்க்கப்பட்டு காவிரி வெண்ணாறு நீர்ப்பாசனத் திட்டம் திருத்தப்பட்டது. முக்கொம்பில் பிரிந்த காவிரியும் கொள்ளிடமும் கல்லணையில் ஒன்று சேர்ந்து ஸ்ரீரங்கத்தை ஒரு சிறு தீவாக மாற்றி விட்டது. கல்லணையில் காவிரி மீண்டும் இரண்டாகப் பிரிந்து வெண்ணாறு தனித்துச் செல்கிறது. வெண்ணாறு தஞ்சை நகருக்கு வடக்கே பிரிந்து வடவாறு, வெள்ளையாறு, வெட்டாறு, பாமிணி, கோரையாறு என்று பிரிந்து வளப்படுத்துகிறது.1920-இல் புது ஆறு வெட்டப்பட்டு கல்லணை கால்வாய் திட்டம் உருப்பெற்றது. கல்லணை கால்வாய் - புது ஆறு திட்டம் 1925-இல் செயல்படுத்தப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்திற்கு ஒப்புதல் அளித்த சென்னை மாகாண அரசு, அதற்கு ஈடாகக் கல்லணை கால்வாய் திட்டம் மூலம் புதிய ஆயக்கட்டு நிலங்களை 1924 ஒப்பந்த அடிப்படையில் மைசூரு அரசின் ஒப்புதல் பெற்று உருவாக்கியது. கல்லணை கால்வாய் திட்டம் குறுக்கு வழியில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை, கீரனூர் வழியாக பேராவூரணிக்கு அருகில் கடலில் கலக்க திட்டமிடப்பட்டது.புதுக்கோட்டை சமஸ்தானக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜமீன் கிராமங்கள் ரயத்துவாரி கிராமங்களாக மாறும் நிலை ஏற்படும் என்று இந்த நீர்வழித்தடத்திற்கு புதுக்கோட்டை மகாராஜா எதிர்ப்புத் தெரிவிக்கவே, சென்னை மாகாண அரசு கல்லணை கால்வாயை திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் அரண்மனை கோட்டையைச் சுற்றிச் செல்லும் அகழியுடன் இணைத்து, வெட்டிக்காடு, ஒரத்தநாடு, ஈச்சவிடுதி ஆவணம், பேராவூரணி வழித்தடத்தில் புது ஆறு வெட்டப்பட்டது. இதுதான் காவிரியின் புதிய டெல்டாப்பகுதி. கிருஷ்ணராஜ சாகர் அணையை நிர்மாணித்த தலைமைப் பொறியாளர் விசுவேஸ்வரய்யாவைப் போல் கல்லணை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிய மாகாணத் தலைமைப் பொறியாளர் எச். வெங்கடகிருஷ்ண அய்யரும் திறமையானவரே. கல்லணையில் தொடங்கி பேராவூரணி வரை சுமார் 500 கி.மீ. தூரத்திற்கு புது ஆறும், புது ஆற்றில் ஏராளமான கிளைக் கால்வாய்களையும், புது ஆறு வெட்டும்போது குறுக்கே வந்த காட்டாறுகளுக்கு மேல் வெட்டிக்காட்டிலும் ஈச்சவிடுதியிலும் நீர்த்தடப் பாலங்களை (Aqua Ducts) கட்டியுள்ளதும் வெங்கடகிருஷ்ணய்யர் திறமைக்குச் சான்று. பின்னர் கர்நாடகத்தில் துங்கபத்ரா அணைக்கட்டும் அய்யரின் கைவண்ணமே.அது நாள் வரை புஞ்சை நிலமாயிருந்த மைசூரு புதிய டெல்டாப் பகுதிகள் கால்வாய்ப் பாசனத்தால் நஞ்சையானபோது நெல் நிலப்பரப்பு கூடியது. பிரிட்டிஷ் அரசின் நோக்கம் அரிசி உற்பத்தியைப் பெருக்குவது அல்ல. இப்படிப் புதுக்கால்வாய் வெட்டி நீர் வழங்குவதன் மூலம் நிலவரியையும் நீர்வரியையும் உயர்த்தி வருமானம் பெறுவதுதான். பெரிய ஏரிகளும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஏரியின் ஆயக்கட்டுகளுக்கும் நிலவரி நீர்வரி விதிக்கப்பட்டது.நிலவரி, நீர்வரி வசூலிப்பது வருவாய்த்துறை. நீர் வழங்குவது பொதுப்பணித்துறை. அன்று நிலவரி நீர்வரி விதித்து பிரிட்டிஷ் அரசு சுரண்டியது.கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசம்தான் இந்தியாவிலேயே அதிக மழைப் பொழிவுள்ள இடமாகும். ஆண்டுக்கு சராசரியாக 3,400 மி.மீ. மழை உண்டு. குடகுமலைத் தொடர் வனங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த அளவு மழை இருந்தது. துங்கபத்ரா, காவிரி ஆகிய நதிகளின் தோற்றுவாய்களும் இங்கே.மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில், குறிப்பாக, குடகு மலையில் மரங்கள் வெட்டப்பட்டு வனநிலங்கள் விவசாய நிலங்களாகவும், கட்டடங்களாகவும், மனைக்கட்டுகளாகவும் மாறியதால் காவிரியின் தோற்று வாயில் மழைப் பொழிவு கடந்த சில ஆண்டுகளாக சராசரியை விடக்குறைவு. கடந்த ஆண்டு நிலைமை இன்னமும் மோசம்.தென்மேற்குப் பருவமழைதான் குடகுக்கு முக்கியம். அது பொய்த்துப் போயிற்று. 1924 ஒப்பந்தத்திற்குப்பின் சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட ஹேமவதி, கபினி அணைக்கட்டுகளால் கிருஷ்ணராஜ சாகருக்கு நீர் வருவதும் தடைப்பட்டுள்ளது. வறட்சியான காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பெங்களூரு போன்ற நகரங்களின் நீர்த் தேவையையும் கிருஷ்ணராஜ சாகரே நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டிலும் ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல நகரங்களுக்கும் குடிநீர்த்தேவையை நிறைவேற்றுவது காவிரியே. பவானி, சிறுவாணி நதிநீரும் கோவை - ஈரோடு மாவட்டக் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகிறது.இந்திய விடுதலைக்குப் பின் நஞ்சை நில மேம்பாடு என்பது நிலவரி நீர்வரி வருமானத்தை புறந்தள்ளி அரிசி உற்பத்தியை உயர்த்துவது தான். தமிழ்நாடு, கர்நாடகம் மட்டுமல்ல, ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம், சதீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிஸா போன்ற மாநிலங்களிலும் கங்கை, யமுனை, சட்லஜ், ரவி, பியாஸ், சம்பல், நர்மதா, மகாநதி, கோதாவதி, கிருஷ்ணா, ஆகிய நதிகளிலும் அணை கட்டி நெல் உற்பத்தி நிகழ்ந்து வருகிறது.நம்மில் பலர் வட இந்தியாவில் கோதுமை மட்டுமே விளைவதாக நினைக்கிறோம். அது தவறு. இன்று நாம் அரிசி உற்பத்தியில் தாய்லாந்தை மிஞ்சிவிட்டோம். ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவில் நெல் விளையும்போது, நீர்ப்பற்றாக்குறை தோன்றினால் குறைந்த நீர்ச்செலவுள்ள மக்காச்சோளம், வேர்க்கடலை, துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை நஞ்சை நிலத்தில் விளைவிக்கலாம். காவிரியின் முழு உரிமையும் கர்நாடகத்திற்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டுக்கும் உரிமை உண்டு என்று சட்டப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டாலும் - வறட்சியையும் குடிநீர்த்தேவையையும் காரணம் காட்டி கிருஷ்ணராஜ சாகர் நீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்க இயலாது என்று மாநில அவையைக் கூட்டி ஒரு தீர்மானத்தைக் கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. மாநில அவை அதிகாரம் பெரிதா? உச்சநீதிமன்றம் பெரிதா? இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குள்ளது. சட்டத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால், சம்பாப் பயிருக்குத் தண்ணீர் வருமா? காவிரி டெல்டாவில் அரிசி விளைந்துதான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காவிரி டெல்டாவில் விளையும் அரிசி முழுக்கவும் ரேஷன் வினியோகத்திற்குத்தான். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளை வாழவைக்கும் தமிழ்நாடு அரசு அங்கு கொள்முதலை நிறுத்திவிட்டு விளையும் நெல்லை வெளிச்சந்தைப் பயனுக்கு விட்டால் டெல்டா மக்கள் தாமாகவே மாற்றுப்பயிர்த் திட்டத்திற்கு மாறும் வாய்ப்புண்டு.காவிரி டெல்டாவில் விளைவது எல்லாம் நடுத்தரம் அல்லது மோட்டா ரக அரிசிதான். தஞ்சை மாவட்ட அரிசிக் கடைகளில் விற்கப்படும் பொன்னி அரிசி கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலச் சரக்குத்தானே தவிர, தஞ்சை மாவட்ட சரக்கு அல்ல.காவிரி டெல்டாவில் கொள்முதலாகும் நெல்லை அரிசியாக்கிப் பொது விநியோகத்திற்கு விடும்போது அவ்வளவையும் மனிதர்கள் உண்பதாகக் கொள்ள முடியாது. பெரும்பாலும் ரேஷன் அரிசியுடன் மக்காச்சோளம், கம்பு கலந்து மாவாக்கிக் கறவை மாடுகளுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது.தமிழ்நாடு அரசு, உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் வழங்கி விட்டால் மையத் தொகுப்பிலிருந்து தேவையான அரிசியைப் பெறலாம். நெல் கொள்முதலுக்கு அவசியமே இல்லை.நஞ்சை, புஞ்சை என்பதெல்லாம் நீரைப் பொருத்து அமைகிறது. நெல்லுக்குத் தேவையான நீர் வராவிட்டால், நஞ்சையில் புஞ்சை சாகுபடி மிக அவசியம் என்பதை காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்.குடகுப் பிரதேசத்தில் வன அழிவு, புவியியல் தட்பவெப்ப மாற்றம் கர்நாடக அரசின் தண்ணீர் வழங்க மறுப்பு ஆகிய காரணங்களினால் காவிரியின் எதிர்காலமே கவலையளிப்பதாக இருப்பதை டெல்டா மாவட்ட விவசாயிகள் உணர வேண்டிய தருணம் இது!

No comments:

Post a comment