Sunday, October 9, 2016

லூயிஸ் லின் ஹே

லூயிஸ் லின் ஹே

பிரபல அமெரிக்க எழுத்தாளரும், நேர்மறை சிந்தனை வாயிலான மருத்துவ முறையை வழங்கியவருமான லூயிஸ் லின் ஹே (Louise Lynn Hay) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1926) பிறந்தவர். இவருக்கு ஒன்றரை வயதாகும்போது பெற் றோர் பிரிந்தனர். அம்மா 2-வது திருமணம் செய்துகொண்டார். புதிதாக வந்தவரால், தாயும் மகளும் பல கொடுமைகளுக்கு ஆளாகினர்.

பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க இயலவில்லை. தீய பழக்கங் களுக்கு ஆளானார். 16-வது வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதை யாருக்கோ தத்து கொடுத்துவிட்டார். வேலை தேடி சிகாகோ வந்தவர், குறைந்த சம்பளத்தில் பல வேலைகளைப் பார்த்தார்.

நியூயார்க் சென்று ஃபேஷன் மாடலானார். 1954-ல் திருமணம் செய்துகொண்டார். 14 ஆண்டுகள் இந்த பந்தம் நீடித்தது. தேவாலயத்தில் தங்கி, பல்வேறு பணிகளை மேற்கொண்டார். சிந்தனையின் ஆற்றலையும், அது நம்மை மறுவடிவம் பெறவைக்கும் நுட்பத்தையும் அங்கு கற்றுக்கொண்டார்.

மன ஆற்றல் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார். நேர்மறை சிந்தனை நமது மனத்தை மட்டுமல்லாமல் பொருளியல் சூழலையும் மாற்றவல்லது. அதன்மூலம் நோய்களையும் குணப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அறிந்தார்.

தேவாலயத்தில் மனநல ஆலோசகராகப் பணியாற்றினார். 1970-களில் மத அறிவியல் பயிற்சியாளராக மாறினார். 'நம் வாழ்க்கையை நாமே சிறந்த முறையில் மாற்றிக்கொள்ளலாம். அதற்கு என் வாழ்க்கையே சிறந்த உதாரணம்' என்பார். ஏராளமான பயிலரங்குகள் நடத்தி பிரபலமானார்.

மகரிஷி மகேஷ் யோகியிடம் தியானம் கற்றுக்கொண்டார். 1977-ல் இவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் வந்தபோது, குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்தனர். அதன் பிறகு, தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் முறை மூலம் அதை குணப்படுத்திக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

'ஹீல் யுவர் பாடி' என்ற கையேட்டை 1976-ல் வெளியிட்டார். இதை மேலும் விரிவாக்கி 1984-ல் 'யு கேன் ஹீல் யுவர் லைஃப்' என்ற நூலாக வெளியிட்டார். இது பரபரப்பாக விற்பனையானது. 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் 'அதிகம் விற்பனையாகும் நூல்கள்' பட்டியலில் இது பல ஆண்டுகாலம் இடம்பெற்றது. இந்நூல் 35-க்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் உட்பட 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உடல், மனப் பிரச்சினைகளுக்கு ஆலோசனை நாடி ஏராளமானோர் இவரிடம் குவிந்தனர். சிறப்பு அழைப்பின்பேரில் பல இடங்களில் உரையாற்றினார். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளார். எய்ட்ஸால் பாதித்த வர்கள் நிவாரணம் பெற ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்கி னார். 'ஹே ஹவுஸ் பப்ளிஷிங்' என்ற பதிப்பகம் தொடங்கினார்.

'ஹே ஃபவுண்டேஷன்' அறக்கட்டளையை 1985-ல் ஆரம்பித்தார். 70 வயதுக்குப் பிறகு தோட்டக்கலையில் ஆர்வம் பிறந்தது. வீட்டிலேயே தோட்டம் போட்டார். நடனம் கற்கவேண்டும் என்ற குழந்தைப் பருவ ஆசையை 76-வது வயதில் நிறைவேற்றிக் கொண்டார். முறையாக ஓவியக்கலை பயின்று, பல ஓவியங்களை வரைந்தார்.

ஆதரவின்றி தெருவில் கிடக்கும் விலங்குகளை பராமரித்தார். சுய உதவி இயக்கம் மூலம் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். பல்வேறு அறப்பணிகளை தொடர்ந்து செய்துவரும் லூயிஸ் லின் ஹே இன்று 91-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

No comments:

Post a Comment