மதுமேகம் நீக்கும் வெந்தயம்

மதுமேகம் நீக்கும் வெந்தயம்

ஒளியை அறியில் உருவும் ஓளியும்

ஓளியும் அருவம் அறியில் அருவாம்

ஓளியின் உருவம் அறியில் ஓளியே

ஓளியும் உருக உடன் இருந்தானே

 

வெந்தயம் என்றவுடன் அது மூலிகையா? என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் சில செய்திகள் நாம் தீர்மானித்து வைப்பதைவிட மாறுபட்டு இருக்கும் அதுவே உலக இயற்கை. உணவு பொருளாகவும், கீரையாகவும் நாம் அறிந்திருக்கும் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். கொத்துகொத்தான மூன்று இலைகள் கொண்ட சிறுசெடி. பூக்கள் வெள்ளை நிறத்துடன் இருக்கும். விதைகள் மஞ்சள் நிறம் உடையது. கீரைக்காகவும், விதைக்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்செய்யப்படுகிறது. விதை இலை மருத்துவ குணமுடையது.

 

நீரிழிவுநோய் உள்ளவர்கள் இன்று வெந்தயக்கீரையை சாப்பிடுவதை வழக்கமா கொண்டுள்ளனர். உணவே மருந்து என்று வாழும் தமிழகத்தில் வெந்தயத்தை வடவம் செய்து குழம்பு தாளிப்பதற்கும், துவையல் செய்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதை சாப்பிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் சூட்டை சமன்செய்யும். நன்கு செரிமானம் ஆகும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும். இலைகள் மலத்தை இளக்கி உடலின் வெப்பத்தை குறைக்கும்.

 

யிற்று உப்பிசம், மாந்தம், வலிபெருக்கு, சுவையின்மை தீரும். வெந்தயக்கீரையை வேகவைத்து தேன்விட்டு கடைந்து சாப்பிட மார்பு வலி உடலின் உட்புண்கள் ஆறும். வெந்தயக்கீரையுடன் அத்திப்பழம், பன்னீர் திராட்சை, சமஅளவில் சேர்த்து குடிநீரிட்டு தேன் கலந்து சாப்பிட மார்புவலி மூச்சடைப்பு போகும். விதைகள் காமத்தை அதிகரிக்கும், திசுக்களை இறுகச்செய்தல், குடல்வாயு தணித்தல், சிறுநீர் பெருக்குதல், மாதவிலக்கை தூண்டுதல் நீரிழிவுநோயை குணப்படுத்துதல் உட்பட ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியது.

 

ஆறாத தீப்புண் உள்ளவர்கள் வெந்தய இலைகளை அரிந்து ஒரு இரும்பு கரண்டியில் போட்டு நெருப்பில் வதக்கி இளம் சூட்டில் வைத்து பற்றிட காயங்கள் ஆறும். சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் போதிய அளவு கிடைக்காமல் துன்பப்படுவார்கள். இவர்கள் 5கிராம் வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் வேகவைத்து அதில் சிறிது தேன் கலந்து கடைந்து குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.

 

வெந்தயக்கீரையை வேகவைத்து வெண்ணெயிட்டு வதக்கி சாப்பிட தீப்புண் ஏற்பட்டவர்களுக்கு மயக்கம் நீங்கி குணம் உண்டாகும். உடலில் ஏற்படும் கட்டிகள் பழுத்தடையாமல் வேதனை கொடுத்தால் கைப்பிடி வெந்தயம் அதே அளவு சீமையத்தி பழம் சேர்த்து மைய அரைத்து தண்ணீரில் குழப்பினால் பசைபோல் வரும். இதை இருப்பு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிளறி கட்டியில் வைத்து இரவு கட்டினால் காலையில் அது பழுத்து உடையும்.

 

வேகவைத்த வெந்தயக்கீரையுடன் வாதுமைப்பருப்பு, கசகசா, கோதுமைப்பால், நெய் நாட்டுசர்க்கரை சமஅளவு சேர்த்து கிளறி சாப்பிட உடல் வலுக்கும். இடுப்புவலி  நீங்கும். தீக்காயங்கள் உண்டானால் வெந்தயத்தை அரைத்து பற்றிட எரிச்சல் அடங்கி காயங்கள் ஆறும். கடுமையான வயிற்று போக்கு ஏற்படும் காலங்களில் 10கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து அதனுடன் உப்பு பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று போக்கு தீரும்.

 

உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக உள்ளவர்கள் வெந்தயம் 17 கிராம், 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட ரத்தம் உடலில் பெருகும். வெந்தயத்தை ஊறவைத்து தோசைமாவுடன் கலந்து உட்கொண்டு வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து வலிகளும் நீங்கும்.

 

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஊறல்போட்டு அந்த தண்ணீரை குடித்து வந்தால் வயிற்று பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல், நீங்கும். வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் மைய அரைத்து தலையில்  தேய்த்து ஒரு மணிநேரம் சென்ற பிறகு தலை முழுகிவர தரைமுடி உதிர்வு நின்று செழித்து வளரும். வெந்தயத்தை வறுத்து அதே அளவு சீரகத்தை வறுத்து சமன் அளவு பொடியை காலையில் வாயிலிட்டு தண்ணீர் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும் இதைத்தான்

 

பொருமல் மந்தம் வாயுகபம் போராடுகின்ற

இருமல் அருசியிவை ஏகுந் தரையில்

தீது லுயர்நமனைச் சீறும் வழியணங்கே

கோதில்வெந்த யக்கீரை கொள்

பிள்ளை கணக்காய்ச்சல் பேதசீ தக்கழிச்சல்

தொல்லை செய்யும் மேகம் தொலையுங்கான் - உள்ளபடி

வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம்

அச்சமில்லை வெந்தயத்திற் காய் என்கிறார் அகத்தியர்.

 

வெந்தயம் என்றவுடன் அதன் கசப்பு சுவையால் பெரும்பாலானவர்கள் அதை சாப்பிடாமல் ஒதுக்கிவைத்து விடுகின்றனர். கசக்கும் என்று அதை ஓதுக்கி விடாமல் வேண்டிய மட்டும் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து நமக்கு சொன்ன முன்னோர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நாளும் நலமுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment