சனியின் துணை கோளில் பனி மேகம்!

சனியின் துணை கோளில் பனி மேகம்!

அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின், 'காசினி' விண்கலம், சனி கிரகத்தின் துணைக் கோளான, 'டைட்ட'னை விரிவாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படங்களில், டைட்டனின் வளி மண்டலத்தில் பனி மூட்டமுள்ள மேகங்கள் திடீரென்று உருவாகியிருப்பது பதிவாகி விஞ்ஞானிகளை ஆச்சரிமூட்டியுள்ளது. சனியின் சந்திரன் மீது பழுப்பு கலந்த ஆரஞ்சு நிறம் படர்ந்தது போல இருக்கும். இதற்கு, அதன் மீது போர்த்தியுள்ள மேகங்களில், 'டைசயானோ அசிட்டிலின்' என்ற கார்பனும், நைட்ரஜனும் கலந்த வேதிப்பொருள் இருப்பது காரணமாக இருக்கலாம் என, நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். டைட்டனில் பனி மேகங்கள் உருவாகுவதற்கு இந்த வேதியியல் அமைப்பு காரணமாக இருக்கக்கூடும். பத்து ஆண்டுகளுக்கு முன், நாசாவின், 'வாயேஜர் - 1' விண்கலம் கூட இதே போல டைட்டனில் அங்கும் இங்கும் பனி மேகத் திட்டுகள் உருவாகும் படங்களை அனுப்பி இருந்தது. ஆனால், அப்போது விஞ்ஞானிகளால் அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. 'ஐஸ் போன்ற பனி மேகங்கள் டைட்டனில் உருவாகி இருப்பது, இதுவரை வெளி கிரகங்களில் பனிக்கட்டி உருவாகும் விதம் பற்றி, நமக்கு இருந்த ஊகங்கள் அனைத்துக்கும் மாறானதாக இருக்கிறது' என்கிறார். காசினியில் அனுப்பிய தகவல்களை ஆராயும் குழுவின் தலைவரான கேரி ஆண்டர்சன். நீர் ஆவியாகி உயரே வளி மண்டலத்திற்கு சென்று, பிறகு குளிர்ச்சியடைந்து பனிக்கட்டிகளாக மாறுவது பூமியில் அடிக்கடி நடப்பது தான். சனியின் துணைக் கோளில் நீருக்கு பதிலாக திரவ மீத்தேன் ஆவியாக மேலே போய் பனிக் கட்டியாகிறது என்று, நாசாவின் ஆய்வுக்குழு ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், 'ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

Comments