அறிவியல் சுரங்கம்

அறிவியல் சுரங்கம்

மீண்டும் பொதுத்துறை மோகம்!:

இந்தியாவின் சிறந்த அறிவியல், தொழில்நுட்ப மூளைகளான ஐ.ஐ.டி., பட்டதாரிகளை, வேலைக்கு ஈர்க்க நடக்கும் வளாக நேர்காணல்களுக்கு முதலில் செல்ல பல நிறுவனங்கள் முந்தியடிப்பதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் சிறிய, உயர்தொழில் நிறுவனங்களுக்கே ஐ.ஐ.டி.,க்கள் முன்னுரிமை தந்தன. ஆனால், அவை தரும் வேலைகள் நிரந்தரமில்லாதவையாக இருப்பதாக புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு, நிலையான வேலைவாய்ப்பை தரும் பொதுத் துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்றவற்றுக்கே முன்னுரிமை தரப்படும் என ஐ.ஐ.டி.,க்கள் அறிவித்துவிட்டன.

தமிழில் இலவச இணைய முகவரி! :

இனி, '.bharat' என்று முடியும் இணைய முகவரியை தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய ஆறு மொழிகளில் அந்தந்த எழுத்துருக்களிலேயே இலவசமாக பதிவு செய்யலாம். இதற்கு, 'டேட்டா குரூப்' நிறுவனத்தின், 'godil.in' என்ற தளத்தை அணுக வேண்டும். அது மட்டுமல்ல, தமிழ் போன்ற மொழிகளில் மின்னஞ்சல் கணக்கை துவங்கவும் இந்நிறுவனம் வசதி செய்து தருகிறது. ஆனால், இதற்கு மாதத்திற்கு, 100; ஆண்டிற்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாநில மொழி மின்னஞ்சல் சேவை, 'யுனிகோட்' எனப்படும் 'ஒருங்குறி' வசதி கொண்ட, 'ஜி - மெயில்' போன்ற சேவைகளுடன் இணைந்து சிக்கலின்றி இயங்கும்.

'ஹைப்பர்லுாப்' இந்தியா வருமா?:

அமெரிக்காவில் சோதிக்கப்பட்டுவரும் மணிக்கு, 1,200 கி.மீ., வேகம் செல்லும், 'ஹைப்பர்லுாப்' ரயில் சேவையை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்க அழைத்திருக்கிறார், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. தண்டவாளத்திற்கு மேல் மிதக்கும் காந்த ரயிலை, குறைந்த காற்றழுத்தமுள்ள நிலத்தடி சுரங்கப் பாதையில் செலுத்துவதே ஹைப்பர்லுாப்பின் சிறப்பு தொழில்நுட்பம். வெள்ளோட்டத்திற்கு, மும்பை - புனே நகரங்களை இணைக்கும் சேவையை முதலில் பயன்படுத்தலாம் என்றும், சுரங்கம் தோண்டும் அனுமதி, தொழிற்சாலைக்கான இடம் ஆகியவற்றை தர மத்திய அரசு தயார் என்றும் கட்கரி அறிவித்திருக்கிறார். ஹைப்பர்லுாப்பிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை.

லாபம் அள்ளித் தரும் இணையம்!:

இந்தியாவில் இணையப் பயன்பாடு தினசரி வாழ்வில் இரண்டர கலந்துவிட்டதற்கு உதாரணம், 'புக் மை ஷோ' இணையதளம். திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை விற்கும் இந்த தளத்தை நடத்தும், 'பிக் ட்ரீ என்டெர்டெய்ன்மென்ட்' கடந்த நிதியாண்டில், 236 கோடி ரூபாய் வருவாயும், 3.17 கோடி ரூபாய் லாபமும் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய இரு ஆண்டுகள் அது நஷ்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.

Comments