SCROL

Monday, October 10, 2016

றெக்க

றெக்க

கதாநாயகன்-கதாநாயகி: விஜய் சேதுபதி-லட்சுமி மேனன்.

டைரக்‌ஷன்: ரத்தின சிவா.

கதையின் கரு: காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் இளைஞர்.

விஜய் சேதுபதி, யதார்த்த நாயகன் என்ற அந்தஸ்தில் இருந்து அதிரடி நாயகனாக மாறியிருக்கும் முதல் படம். கதைப்படி, அவர் கும்பகோணத்தை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, கே.எஸ்.ரவிகுமார். அம்மா, ஸ்ரீரஞ்சனி. தங்கை, ஐஸ்வர்யா லட்சுமி. பெற்றோர்களாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத காதலர்களை சேர்த்து வைக்கிறார், விஜய் சேதுபதி.

ரவுடி கும்பலின் தலைவர் ஹரிஷ் உத்தமன் மணக்க வேண்டிய பெண்ணுக்கும் உதவப்போய்-அவருடைய பகையை சம்பாதிக்கிறார், விஜய் சேதுபதி. "சந்தர்ப்பம் வரும், அப்போது பார்த்து கொள்கிறேன்" என்ற வன்மத்துடன் திரும்பிப் போகிறார், ஹரிஷ் உத்தமன்.

அதற்கான சந்தர்ப்பமும் வருகிறது. விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள். இதை அறிந்த ஹரிஷ் உத்தமன் பழிவாங்க முயற்சிக்கிறார். அவரிடம் விஜய் சேதுபதி, "நீ என்ன சொன்னாலும் செய்கிறேன். என் குடும்பத்தை விட்டு விடு" என்கிறார். மதுரையை சேர்ந்த ஒரு பிரமுகரின் மகள் லட்சுமி மேனனை கடத்திக் கொண்டு வா, பார்க்கலாம்" என்கிறார், ஹரிஷ் உத்தமன்.

அவருடைய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு விஜய் சேதுபதி மதுரைக்கு புறப்படுகிறார். அவர், லட்சுமி மேனனை கடத்தினாரா, அவருடைய தங்கை திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடந்ததா? என்பது பின்பகுதி கதை.

நல்லவர்களுக்காக நல்லதையே செய்பவராக-அந்த நல்லவைகளுக்காக எதையும் சந்திக்க துணிந்தவராக-முதன்முதலாக 'அதிரடி' அவதாரம் எடுத்து இருக்கிறார், விஜய் சேதுபதி. வில்லனிடம் கூட அடங்கிப் போகிறவராக அவர் அறிமுகமாகும் முதல் காட்சியே அமர்க்களம். ஹரிஷ் உத்தமனின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அவர் மதுரைக்கு செல்வது, திருப்பம். அங்கே லட்சுமி மேனனை சந்திப்பதும், அவர் கவிதை வாசிக்க உதவுவதும், அவருடன் 'செல்பி' எடுத்துக் கொள்வதும், ரசனையான காட்சிகள். ஒரே அடியில் இரண்டு, மூன்று பேரை வீழ்த்தும் வழக்கமான ஹீரோ வேலையையும் சுறுசுறுப்பாக செய்திருக்கிறார், விஜய் சேதுபதி.

லட்சுமி மேனன் சில காட்சிகளில் லட்சுமிகரமாகவும், சில காட்சிகளில் முகம் வீங்கிப் போய் சோர்வாகவும் தெரிகிறார். அவர் விஜய் சேதுபதியை கண்டதும் காதலிப்பதும், கைகோர்த்துக் கொண்டு ஓட முன்வருவதும், மலிவான கற்பனையாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே-காதல் வந்ததற்கான காட்சிகளை காட்டி, சுவாரஸ்யம் கூட்டுகிறார், டைரக்டர் ரத்தின சிவா.

"டேய், எங்கடா இருக்கே?" என்ற ஒரே ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசுவதற்காகவே 'நண்பன்' கதாபாத்திரத்தில், சதிஷ். அப்பா வேடத்தில் கே.எஸ்.ரவிகுமார், வில்லன்களாக ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகிய மூவரும் பொருந்துகிறார்கள்.

பாடல் காட்சிகளில் வர்ண ஜாலம் காட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். டி.இமான் இசையில் 2 பாடல்கள், மென்மையான ராகங்கள். ஒரு வித்தியாசமான கதையை அதிரடிகள் கலந்து சொல்லியிருக்கிறார், டைரக்டர் ரத்தின சிவா. கிஷோர்-சிஜா ரோஸ் காதலும், அது தொடர்பான காட்சிகளும் கவிதை என்றாலும், சின்ன வயது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், கொஞ்சம் மிகையானவை. 'கிளைமாக்ஸ்' சண்டை, பதற்றமூட்டுகிறது.

No comments:

Post a Comment