மக்களாட்சியின் மாண்பு

மக்களாட்சியின் மாண்பு

பண்டைய தமிழகம் சிறப்பான தேர்தல் அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்களின் குடவோலை முறை இதற்கு அருமையானச் சான்றாகும். இது மக்களாட்சியின் அடிச்சுவடி என்றும் வர்ணிக்கப்படுகிறது.பண்டைய தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதிகளில் 9-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டுவரை குடவோலை முறை அமலில் இருந்ததை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதன்படி கிராமத்தில் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்களின் பெயர்களை ஓலைச் சுவடிகளில் எழுதுவார்கள். இவ்வாறு முன்னிறுத்தப்படுவோர் பொது வாழ்வில் ஒழுக்கமானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தால் மட்டுமே குடவோலை முறையில் போட்டியிட முன்மொழியப்படுவார்கள். இதற்கு பல நிபந்தனைகளும் உண்டு. கிராம நிர்வாக சபைக்கு போட்டியிட விரும்புவோரின் வயது 35 முதல் 70-க்குள் இருத்தல் வேண்டும். கால் நிலத்துக்கு மேல் நிலம் உடையவராகவும், காரியத்தில் நிபுணராகவும், மனம் சுத்தம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். செய்த செலவுகளுக்கு கணக்கு காட்டாது இருந்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது.மேலும், அவரது உறவினர்களும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவர். இதன்மூலம், ஒருவர் தீய வழியில் செல்வாரானால் அதற்கு அவரது சுற்றத்தாரையும் பொறுப்பேற்கச் செய்யும் நடைமுறையை அன்றைய தமிழ்ச் சமூகம் கடைப்பிடித்துள்ளதை அறிய முடிகிறது.மேலும் கையூட்டு பெற்றவர், பிறரது பொருள் பறித்தோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவராவர். இதுபோல் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்தவர்களையே மக்கள் முன்மொழிந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதி, ஒரு பானையில் போட்டு, ஒரு குழந்தையை ஓலையை எடுக்கச் செய்து உறுப்பினர்களை தேர்வு செய்வர்.டவோலை முறையில் தேர்வு செய்யப்படுவோர் தாங்கள் பதவியில் இருக்கும்போது ஏதேனும் தவறு செய்தது தெரியவந்தால் உடனே அவரை பதவியில் இருந்து விலக்கக் கூடிய நடைமுறையும் இருந்துள்ளது.தற்போது நமது நாட்டில் அமலில் உள்ள தேர்தல் நடைமுறையில் வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. குடவோலை முறை அமலில் இருந்த பழங்காலத்திலேயே இந்த நடைமுறை செயல்பாட்டில் இருந்தது வியப்பை அளிக்கிறது.ஆனால், இத்தகைய பெருமை பெற்ற, குடவோலை முறையை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் உத்திரமேரூரில், தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்தியூர் மேல்தூளி ஊராட்சித் தலைவர் பதவி சில லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை, தேர்தல் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.பண்டைய அரசியல் சூழலுடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டால் நமக்குள் குற்ற உணர்வே மிஞ்சும். தற்போதைய சூழலில் தேர்தல் களம் காண விரும்பும் அனைவரும், "மக்கள் சேவை' என்ற எண்ணத்துடன் மட்டுமே போட்டியிடுகின்றனரா என்றால் அது ஐயத்துக்குரியதே.இவர்களில் பலர் தேர்தலில் எப்படியும் வெற்றியை ருசித்துவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கின்றனர். இதற்காக பணத்தை தண்ணீராக இறைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.இந்த அவலத்துக்கு தனிநபர்களை குறைகூறிப் பயனில்லை. ஏனெனில் இன்றைய தமிழக அரசியல் சூழலில் பணம் இருப்போர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.தமிழகத்தில் தேர்தல் அரசியல் பணத்தை பிரதானமாகக் கொண்டதாக மாறியுள்ளது ஆரோக்கியமானதல்ல. இதனால் ஏழைகள் மக்கள் பிரதிநிதிகளாகும் வாய்ப்பு புறந்தள்ளப்பட்டு, பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் கோலோச்சும் நிலையை ஏற்படும்.தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முயன்றாலும் முற்றிலுமாக அதனை தடுக்க முடியவில்லை. சேவை மனப்பான்மையுடன், மனத்தூய்மையுடன் அரசியலில் ஈடுபடுவோர் ஒருபோதும் வாக்காளர்களுக்கு பணம் தர முன்வருவதில்லை.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெறும் வேட்பாளர், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. அவர் இழந்த பணத்தை பல மடங்காக சம்பாதிக்கும் நோக்கத்திலேயே செயல்படுவார். இதனை வாக்காளர்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.வாக்குக்குப் பணம் பெறுவது தன்னையே விற்பதற்குச் சமம். பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தால், பின்பு தொகுதி பிரச்னை தொடர்பாக தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை இழக்க நேரிடும் என்பதை உணர வேண்டும்.இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியப் பொறுப்பு உண்டு. கட்சி சார்பில் வேட்பாளர்களாக விரும்புவோர் பணம் படைத்தவர்களா என்பதை மட்டும் பார்க்காமல், கட்சிக்காக, மக்களுக்காக உழைக்கும் உண்மைத் தொண்டர்களா என்பதை ஆராய்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும்.

Comments