முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், முகப்பரு பிரச்னையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். முகப்பரு முகத்தின் அழகை கெடுக்க கூடியது, வலியை  தரவல்லது. பருவ வயதின்போது ஆண், பெண் இருபாலருக்கும் முகப்பரு ஏற்படும். எண்ணெய் போன்ற திரவம் தோலில் தேங்குவதால் முகப்பரு வருகிறது.  சிறுதேள் கொடுக்கு செடி, அம்மான் பச்சரிசி, லவங்கப்பட்டை, எலுமிச்சை ஆகியவை முகப்பருவுக்கு மருந்தாகிறது. தேள்கொடுக்கு செடியை பயன்படுத்தி  முகப்பருக்கான மருத்துவத்தை பார்க்கலாம். தேள்கொடுக்கு செடியின் இலைகளை நீர்விடாமல் பசையாக அரைத்து, சாறு எடுக்கவும்.

இரவு படுக்கப்போகும் முன்பு வெந்நீரில் முகத்தை கழுவிய பின் முகப்பருக்கள் மீது தேள் கொடுக்கு இலையின் சாறை பூசிவர வெகு விரைவில் முகப்பரு  சரியாகும். அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி முகப்பருக்களை போக்கலாம். அம்மான் பச்சரிசி செடியின் தண்டுகளை உடைத்தால் வரும் பாலை முகப்பருவின்  மீது பூசிவர முகப்பரு சரியாகும். மருக்கள் குணமாக இந்த பாலை பயன்படுத்தலாம். அம்மான் பச்சரிசி புல்லோடு புல்லாக வளரக்கூடியது. பூ கொத்துக்களை  உடையது. பால் நிறைந்தது. ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. இதன் பாலை பூசுவதால் முகப்பரு சரியாவதுடன், வடுக்கள் இல்லாமல் போகும். தேன் மெழுகை  பயன்படுத்தி முகப்பருக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தேன் மெழுகு, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தேன் மெழுகு சிறிது எடுக்கவும்.  இதனுடன் சம அளவு பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து உருக்கவும். இதை ஆறவைத்து முகப்பருக்கள் மீது போட்டுவர முகப்பரு வடு இல்லாமல்  குணமாகும். தேன் கூட்டை பக்குவப்படுத்தி மெழுகாக அச்சில் இட்டு வார்ப்பதால், தேன் மெழுகு கிடைக்கிறது. லவங்கப்பட்டையை பயன்படுத்தி முகப்பருவை  போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: லவங்கப்பட்டை, எலுமிச்சை. லவங்கப்பட்டை பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக  கலக்கவும். இதை இரவில் முகப்பருவின் மீது பூசி காலையில் முகம் கழுவி வர முகப்பரு சரியாகும்.

கரும்புள்ளிகள் ஏற்படாமல் மறைந்து போகும். அம்மான் பச்சரிசி, லவங்கப்பட்டை, தேள் கொடுக்கு செடி ஆகியவை முகத்துக்கு ஊறு செய்யாமல் முகப்பருக்களை  போக்கும் தன்மை உடையவை. அஜீரணத்தினால் வரும் வாந்தியை கட்டுப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செரிமானம் இன்மையால் குமட்டல், வாந்தி  ஏற்படுகிறது. வெங்காயம் இதற்கு மருந்தாகிறது. வெங்காய சாறு 30 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சம அளவு வெந்நீர் சேர்த்து குடித்தால் குமட்டல்வாந்தி சரியாகும்.

Comments