பூமியில் விழவிருக்கும் சீன விண்வெளி நிலையம்!

பூமியில் விழவிருக்கும் சீன விண்வெளி நிலையம்!

விண்வெளியில் சீனா உருவாக்கிய முதல் விண்வெளி ஆய்வு நிலையமான, 'டியான்கோங்- 1' அடுத்த ஆண்டு பூமியில் வந்து விழும் என்று, அந்நாட்டு விண்வெளி துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த, 2011 செப்டம்பர் 29 அன்று சீனா அனுப்பிய டியான்கோங் நிலையத்திற்கு, அந்நாட்டின் விண்வெளி வீரர்கள் மூன்று முறை சென்று வந்துள்ளனர். நாசா உள்ளிட்ட சில நாடுகளின் கூட்டு முயற்சியான சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட டியான்கோங் மிகச் சிறியது. வெறும், 40 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட அந்த ஆய்வகத்தில், முக்கியமான பல அறிவியல் சோதனைகளை செய்ய பயன்பட்டது என்று சீனா அறிவித்துள்ளது. அந்த நிலையம் அதிவேகமாக பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது, அதன் பெரும்பாலான பாகங்கள் தீயில் பொசுங்கிவிடும் என, சீன விண்வெளி துணை இயக்குனர் வு பிங், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சீனா என்ன தான் சமாளித்தாலும், சில பழுதுகளால், டியான்கோங் நிலையத்தை சீனர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது தான் உண்மை. சீனா இதை முதலில் வெளிப்படையாக தெரிவிக்காததால், இணையத்தில் அது பூமியில் எந்த நாட்டின் பகுதியில் விழும் என்ற விவாதம் துவங்கியது. பிறகு தான், கட்டுப்பாட்டை இழந்த விஷயத்தை சீனா ஒப்புக்கொண்டது. தற்போது பூமியிலிருந்து, 340 கி.மீ., உயரத்தில் டியான்கோங் நிலையம் அனாதையாக மிதந்து கொண்டிருக்கிறது. அது, மெல்ல புவியீர்ப்பு விசையின் பகுதியை நோக்கி மிதந்து வந்து, ஈர்ப்புக்கு உள்ளானதும் வேகமாக வளி மண்டலத்திற்கு நுழையும். அனேகமாக இது, அடுத்த ஆண்டு நிகழலாம் என்று விண்வெளி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன் பெரும்பகுதி எரிந்துவிடும் என்பதாலும், பெரும்பாலும் மீதமுள்ள பாகங்களின் துண்டுகள் கடல் பகுதியிலேயே விழும் என்பதாலும், யாரும் பயப்பட வேண்டியதில்லை என, சீன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்களன்று சீனா ஏவிய, டியான்கோங் -2 விண்வெளி நிலையத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில், சீன விண்வெளி துறை இப்போது முழு கவனம் செலுத்தி வருகிறது.

Comments