அரசு செயலாளர்கள் அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் நீதிபதிகள் எச்சரிக்கை!!

அரசு செயலாளர்கள் அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் நீதிபதிகள் எச்சரிக்கை!!

பொதுமக்கள் தரும் புகார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள் தினமும் காலையில் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், 'விழுப்புரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் உள்ள மொளச்சூர்-மரக்காணம் சாலையோர விவசாய நிலத்தை முகமது என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த பிப்ரவரி 10-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மனு அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.

நடவடிக்கை இல்லை

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார். எனவே, இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் குறித்து அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, அவர்களது கருத்துக்களை பெற்று, அதனடிப்படையில் விசாரணை நடத்தி, தகுந்த முடிவினை எடுத்து 3 மாதங்களுக்குள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு கூறி இந்த வழக்கை முடித்து வைக்க விரும்பவில்லை.பொதுவாக, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத விதிமீறல் கட்டிடம் குறித்து பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை.

அரசாணை

இதனால், புகார் கொடுப்பவர்கள் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். இதனால், ஐகோர்ட்டின் பணி கூடுகிறது. அதுமட்டுமல்ல இதுபோன்ற வழக்குகளை விசாரித்து, மனுதாரரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க, இந்த ஐகோர்ட்டு ஒன்றும் தபால் அலுவலகம் இல்லை.ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி பொதுமக்கள் தரும் புகார்களை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டை 3 நாட்களுக்குள் வழங்கவேண்டும். அந்த புகார் மீது ஒரு மாதத்துக்குள் தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமும் ஆஜராகவேண்டும்

எனவே, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தினமும் காலையில் ஒரு மணி நேரம் அனைத்து அரசு துறைகளின் முதன்மை செயலாளர்களும் இந்த ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதை தவிர வேறுவழி எங்களுக்கு தெரியவில்லை.இதன்மூலம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை அரசு அதிகாரிகள் மீறமுடியாது. ஐகோர்ட்டின் பணி சுமையும் குறையும்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment