KALVISOLAI TNPSC

Monday, 10 October 2016

மூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...

மூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...

கல்லாதது உடலளவு! டாக்டர் வி.ஹரிஹரன்

குழந்தைகள் அடம் செய்தால், மூக்கை அறுப்பேன் என சைகை காண்பிக்கிறோமே, அதன் வரலாறு என்ன? அந்தக் காலத்தில் மூக்கை அறுப்பது அவமானப்படுத்துவது போல. அது இன்று வயலென்ஸ் கம்மியாகி, எச்சில் துப்புவதோடு நின்று விட்டது. இப்படி மூக்கறுந்த பேஷன்டுகளுக்கு 2800 வருடங்களுக்கு முன்பே அதை ஒட்டி தையல் போட்டு உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் எனப் பெயர் எடுத்தவர் நமது சுஸ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரியில் பல பிரிவுகள் உண்டு. நம்மை அழகாக்கும் காஸ்மெடிக் சர்ஜரியை பற்றி இந்த எபிசோடில் அலசுவோம்.

'குணா'படத்தில், கமல், என் அப்பன் அவன் மூஞ்சிய எனக்கு ஒட்டிட்டு போயிட்டான், இது என் மூஞ்சி இல்ல, என் அப்பன் மூஞ்சி' என்பார். பலருக்கு தாய்தந்தை கொடுத்த முகம் பிடிப்பதில்லை. தனக்குத் தானே கடவுள் ஆகிவிடலாம் என தன் முகத்தை மற்றும் உடம்பை மாற்ற முடியும் என நவீன மருத்துவம் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது. 1895ம் வருடம், ஒரு ஆங்கில நாடக நடிகைக்கு மார்பகக் கட்டி வந்து ஆபரேஷன் செய்து கொண்டார். நாடக வாய்ப்புகள் பறிபோக, ஒரு திறமையான சர்ஜன் நடிகையின் இடுப்பில் உள்ள கொழுப்பு கட்டியை எடுத்து மார்பில் வைத்து, ரசிகர்களை மனம் குளிர வைத்தார்.

பட்டுத்துணி, தந்தம், தேனீயின் மெழுகு என எதை எதையோ வைத்து, பின்னர் சிலிக்கான் இம்ப்ளான்ட்டுகள் 1950களில் வந்தன. இன்று காஸ்மெடிக் சர்ஜரி என்பது இருபது பில்லியன் டாலர் பிசினஸ். அமெரிக்க பெற்றோர்கள், தங்கள் 18 வயது பெண், பரீட்சையில் பாசானால், மார்பக இம்ப்ளான்ட் கூப்பனை பரிசாக தரும் அளவிற்கு கலாச்சாரவாதி(வியாதி)கள் ஆகியுள்ளனர். பலருக்கு காஸ்மெடிக் சர்ஜரிகள், அவர்களின் நம்பிக்கை அளவுகளை கூட்ட ஒரு முக்கிய வழி. பெரிய காது இருக்கிறது என எல்லோரும் கிண்டல் செய்யும் போது, அதை ஆபரேஷன் மூலம் சிறியதாக்கினால், நாளை அவரை அவர் நண்பர்கள் பார்த்து  ஆச்சரியப்படுவர்.

இதனாலேயே அவரின் தன்னம்பிக்கை கூடி, தாழ்வு மனப்பான்மை குறையும். சிறிய மார்பகங்களை பெரிதாக்குதல், முகத்தின் அழகை கெடுக்கும் பெரிய மச்சத்தை அகற்றுதல் போன்றவையும் இதில் அடங்கும். ஆனால், சிலருக்கோ இந்த வகை சிகிச்சைகள், ஒரு அப்சஷன் ஆகி விடுகிறது. அழகாக இருந்த மைக்கேல் ஜாக்சன் பல முறை காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்து கடைசியில் எலி மூஞ்சி போல் ஆனார். இன்னொரு பெண்ணோ, தான் பார்பி பொம்மை போல் இருக்க வேண்டும் என பல ஆபரேஷன்கள் செய்து நடமாடும் பார்பி பொம்மையாகவே ஆனார். மிதவாதிகள் மிகுந்திருக்கும் ஊரில் இப்படி ஒரு சில தீவிரவாதிகளும் இருப்பர்.

முகச் சுருக்கத்தை நீக்க கொடுக்கப்படும் பொடாக்ஸ் ஊசிகள் போடுவதால் பிரச்னை ஆகலாம் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து ஊசி மூலம் செலுத்தினாலும் சுருக்கம் மறையும் என்கிறார்கள். இவற்றை விட நல்ல சிகிச்சைகள் வந்து விடும். இன்னும் இருபது ஆண்டுகளில் நம் செல்களை எடுத்து கல்ச்சர் செய்து அதை இஷ்டப்பட்ட வடிவமாக்கி பொருத்தும் டெக்னாலஜி வந்து விடும். நம் இளமைக்கால முகத்தை செய்து கூட ஒட்டிக் கொள்ளலாம். கண்களில் வைரம் பொருத்துதல் என்பது போல் பல அழகு சிகிச்சைகளை சர்வ சாதாரணமாக காலேஜ் பெண்கள் வருங்காலத்தில் செய்து கொள்ளலாம். அழிக்கவே முடியாத டாட்டூக்களை அழிக்கும் டெக்னாலஜி வந்துவிடும். இன்று 'சினேகா'எனப் பச்சைக் குத்தி, ஆளை மயக்கி விட்டு, நாளை அதை அழித்து விட்டு, 'ஸ்ருதி'என்று குத்தலாம்.

இன்று அதிகளவில் செய்யப்படும் லிபோசக்‌ஷன் எனும் கொழுப்பை உறிஞ்சி சருமத்தை இறுக வைக்கும் சிகிச்சை மிக எளிமையாக்கப்படலாம். ஒரு சிறிய மருந்தை இன்ஜெக்ட் செய்வதன் மூலம் அல்லது ஸ்கேன் செய்யப் பயன்படும் அல்ட்ராசவுண்ட் மூலம் உடலில் எந்த இடத்திலும் உள்ள கொழுப்பை கரைக்கலாம். அதே போல் வயதானால் முகத்தின் சருமம் சுருங்கி விடும். அந்த இடத்தில் அவரின் கொழுப்பை வைத்து சுருக்கத்தை இல்லாமல் ஆக்கி தாத்தாவை அங்கிள் ஆக்கலாம். முன்னெல்லாம் காஸ்மெடிக் சர்ஜரிகள் மிக காஸ்ட்லியானவை. இப்போது ரேட் மிகவும் குறைந்திருக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுபடியாகக் கூடிய கார் போன்ற அயிட்டங்களை, கம்பெனிகள் நம்மைப் போல் மிடில் கிளாஸ் ஆட்களை லோன் போட வைத்து வாங்கவைக்கவில்லை?

அதே போல் பின்னாட்களில் நாம் எல்லோரும் பிளாஸ்டிக் சர்ஜரியை சர்வ சாதாரணமாக செய்து கொள்வோம். சில எபிசோடுகளுக்கு முன்னால், இ.எம்.ஐ. மூலம் வைத்தியம் செய்ததற்கான செலவை மருத்துவமனைகள் வாங்குவார்கள் என விளையாட்டாக கூறியிருந்தேன். இன்றோ ஒரு  மருத்துவமனை, இ.எம்.ஐ. மூலம் எல்லா சிகிச்சைகளும் பெறலாம் என ரேடியோவில் விளம்பரம் செய்கிறார்கள். அந்த 'நாளை',நேற்றே வந்து விட்டது. 'தம்பிக்கு சிரிச்சா குழி விழ மாட்டேங்குதுன்னு ஸ்கூல்ல அழுவுறான். சமாளிக்க முடில. போய் சர்ஜரி பண்ணினப்புறம் ஸ்கூலுக்கு அனுப்புங்க' என டீச்சர்கள் கூறும் காலம் வந்து விடுமோ என்னவோ?

பிற்காலத்தில் நடக்கும் ஒரு சுவையான உரையாடலை பார்ப்போம்: ரவியும் மணியும் நண்பர்கள். காலேஜ் முடிந்து அவரவர் வேலைக்கு போகிறார்கள். ரவி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறான். மணி குமாஸ்தா வேலை. ஒரு வருடம் கழித்து

மணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே. உங்களுக்கு தர்மபுரியா?

ரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால சான்ஸ் கேக்கப் போனேனா, விளம்பர கம்பெனி அழைப்பு வந்துச்சி. "மூக்கு தடிமனா இருக்கு, கொஞ்சம் கூரா இருந்தா நல்லாருக்கும்னாங்க, அதான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி கூராக்கிக்கிட்டேன். இரண்டு வருடம் கழித்து

மணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே.உங்களுக்கு தர்மபுரியா?

ரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால வில்லன் வேஷம் கிடைச்சுது. இயற்கையாகவே முறைக்கிற மாதிரி தோற்றம் வேணும்னாங்க. அதான் புருவத்தை ஏத்தி, நெருக்கி, காதை விறைப்பாக்கி ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். (முறைத்துப் பார்த்து சிரிக்கிறார்) 'ஹாஹாஹா' எப்படி, டெரரா இருக்குல்ல...

மணி: (பயந்து) ஆமாண்டா... நான் கெளம்புறேன். ஐந்து வருடம் கழித்து

மணி: ஆன்ட்டி, உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே... உங்களுக்கு தர்மபுரியா?

ரவி: (கீச்சுக் குரலில்) டேய் மச்சி, நான் தாண்டா ரவி. ஷங்கர் படத்துல ஹீரோ வாய்ப்பு மச்சி. அந்த ஹீரோ இருப்பத்தஞ்சு வயசு வரை ஆணாம். அதுக்கப்புறம் வில்லனுங்க அவனை பழிவாங்க பெண்ணா மாத்திடுறாங்களாம்.

மணி: அதுக்கு????

ரவி: புல் சேஞ்ச் மச்சி. நேச்சுரலா இருக்கணும்ல. ஃபுல் ஆபரேஷன் பண்ணி பொண்ணாவே மாறிட்டேன். எப்படி இருக்கேன்?

மணி: கூர் மூக்கு, நெருங்கிய புருவம், விறைப்பான காது, வில்லன் மூஞ்சியோட ஆன்ட்டியா? மச்சி உன்னை வச்சி ஹாரர் படம் எடுக்குறார்டா அவர். குடும்பம்லாம் எப்படி இருக்கு?

ரவி:  மூக்கு மாத்தினப்புறம், 'மூஞ்சுறு, புள்ளையார் வாகனம், வீட்ல வளக்கக் கூடாது'ன்னு வீட்டை விட்டு தொரத்தி விட்டுட்டாங்க. ஒரு பொண்ணு என் வில்லன் கெட்டப்பை பார்த்து மயங்கி கட்டிக்கிச்சு. நான் லேடியா மாறினப்புறம் 'ஒரு வூட்ல அப்பா இருக்கலாம், அப்பமா இருந்தா குழந்தை குழம்பிடும்'னு டிவோர்ஸ் குடுத்துட்டு குழந்தையோட இன்னொரு பயங்கர வில்லனை கட்டிக்கிட்டாங்க. நீதான் பாத்துருப்பியே, ரத்தக்கண்ணீர் பார்ட் டூ படத்துக்கு எம்.ஆர். ராதா உருவம் வேணும்னு அதே மாதிரி சர்ஜரி பண்ணி மாத்திக்கிட்டானே, அவனைக் கட்டிக்கிட்டாங்க.

No comments:

Post a comment