பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர்

பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர் (James M.Buchanan Jr.) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் முர்ஃப்ரீஸ்பரோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1919) பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கினார். இளம் வயது முதலே பொருளாதாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கடற்படையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1948-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டென்னஸி, புளோரிடா, வர்ஜீனியா, ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஜெர்மன் பொருளாதார நிபுணர் நட் விக்செல் எழுதிய கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகளின் நூல்களைக் கற்றார். பொருளாதாரத்தின் பிரிவுகள், அமெரிக்கப் பொருளாதார நிலை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நண்பர்களுடன் இணைந்து 'பப்ளிக் சாய்ஸ்' என்ற பொருளாதார இதழைத் தொடங்கினார். மற்ற நிபுணர்களுடன் இணைந்து பல நூல்கள் எழுதினார்.

வர்ஜீனியாவில் அரசியல் பொருளாதாரம் பயிற்றுவிப்பதற்காக தாமஸ் ஜெஃபர்சன் என்ற பெயரில் கல்வி மையம் தொடங்கினார். பல மொழிகள் கற்றார். பல்வேறு இடங்களில் ஏராளமான விரிவுரைகள் ஆற்றினார்.

தனது ஆய்வுகள், கருத்துகளைப் பரப்ப 'கான்ஸ்டிடியூஷனல் எகனாமிக்ஸ்' என்ற இதழைத் தொடங்கினார். அவரது கருத்துகள், விரிவுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அரசியல் பொருளாதாரத் துறை புத்துயிர் பெற்றதில் இவரது பங்களிப்பு மகத்தானது என்று கூறப்படுகிறது.

இவரது பொருளாதாரக் கொள்கை தார்மிகம், அரசியல், சட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பப்ளிக் சாய்ஸ் கல்வி மையத்தின் முதல் இயக்குநராக 1969-ல் நியமிக்கப்பட்டார். பொது நிதி, பொதுக் கடன், ஓட்டுரிமை, அரசியலமைப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இவர் உருவாக்கிய பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாடு (Public Choice Theory), உலக பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, உலகப் புகழ்பெற்றது. இதற்காக இவருக்கு 1986-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்கோட்பாடு பொருளாதாரத்தையும் அரசியல் முடிவெடுத்தலையும் அலசி ஆராயும் தனித்துவம் மிக்க கோட்பாடாக கருதப்பட்டது.

பல தலைமுறை மக்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் அமைப்புச் சட்டமானது, அரசு, சமூகம் மற்றும் தனிப்பட்ட மக்களின் நலன்களை சமன்படுத்துவதாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

அரசியல் மற்றும் அரசியல் கொள்கைகள் இடையிலான வேறுபாட்டை வகுத்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் ஜேம்ஸ் எம்.புக்கானன்' என்ற பெயரில் 20 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தில் சமூக சிந்தனையை அறிமுகப்படுத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தின. பொருளாதாரக் களத்தில் திருப்புமுனையை உருவாக்கிய ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜுனியர் 94-வது வயதில் (2013) மறைந்தார்.

No comments:

Post a Comment