நியூசிலாந்து தொடர் ரத்து மிரட்டல்:இந்திய கிரிக்கெட் வாரிய வங்கி கணக்கை முடக்கவில்லை லோதா கமிட்டி விளக்கம்

நியூசிலாந்து தொடர் ரத்து மிரட்டல்:இந்திய கிரிக்கெட் வாரிய வங்கி கணக்கை முடக்கவில்லை லோதா கமிட்டி விளக்கம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று லோதா கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

லோதா கமிட்டி விவகாரம்

ஐ.பி.எல். சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அறிக்கை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. கமிட்டியின் பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை தவிர அனைத்தையும் அப்படியே நிறைவேற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பரிந்துரைகளை அமல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பை லோதா கமிட்டிக்கு அளித்த கோர்ட்டு, நடைமுறைப்படுத்துவதற்கு காலக்கெடுவும் விதித்தது.லோதா கமிட்டி சிபாரிசுகளில் சிலவற்றை ஏற்ற இந்திய கிரிக்கெட் வாரியம், நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டுரிமை உள்பட பல பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்று கூறி பிடிவாதமாக உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லோதா கமிட்டி, கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பரிந்துரைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் கணக்கு வைத்து இருக்கும் வங்கிகளுக்கு, லோதா கமிட்டி அதிரடியாக ஒரு இ-மெயில் அனுப்பியது. அதில் 'மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வங்கிகள் மூலம் பெரிய அளவில் நிதியை பட்டுவாடா செய்ய இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. எனவே மாநில சங்கங்களுக்கு அதிக நிதி பட்டுவாடா செய்ய வேண்டாம்' என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த இ-மெயில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டது.மாநில சங்கங்களுக்கு அதிகமான நிதி வழங்கக்கூடாது என்று வங்கிகளுக்கு லோதா கமிட்டி இ-மெயில் அனுப்பியதால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'பணம் இல்லாமல் எப்படி போட்டியை நடத்த முடியும். மாநில சங்கங்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பணம் பெற்று தான் சர்வதேச போட்டி தொடரை நடத்தி வருகிறது. பணப் பிரச்சினை நீடித்தால் நடப்பு உள்ளூர் போட்டி தொடர்களை நடத்த முடியாது என்று பல மாநில சங்கங்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன. இதனால் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே நடந்து வரும் தொடரை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம்' என்று மிரட்டல் விடுத்தார்.

வங்கி கணக்கை முடக்கவில்லை

இந்த நிலையில் வங்கி கணக்கு விவகாரம் குறித்து லோதா கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கி கணக்கை முடக்கும் படி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. குறிப்பிட்ட சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பெரிய அளவில் நிதியை பட்டுவாடா செய்ய வேண்டாம் என்று தான் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், வங்கிக்கும் அறிவுறுத்தினோம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகள், வழக்கமான செலவினங்கள், போட்டிகளை நடத்துவதற்கு தேவையான பணங்களை தாராளமாக எடுத்து கொள்ளலாம். அவை எதற்கும் நாங்கள் எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. எங்களது அறிவுறுத்தலை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.இந்தியா- நியூசிலாந்து தொடரை நிறுத்த தேவையில்லை. அது திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், சர்வாதிகாரிகள் போல் நடந்து கொள்கிறார்கள். இவர்களை விட கிரிக்கெட் தான் பெரிய விஷயம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் இல்லாமல் நடத்த முடியாது

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூரிடம் கேட்ட போது கூறியதாவது:-

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் தொடருமா? இல்லையா? என்பது குறித்து நான் பேசவில்லை. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 'நம்பர் ஒன்' இடத்தில் உள்ளது. இருபது ஓவர் போட்டியில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 3-வது இடத்திலும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில், வீரர்கள் மற்றும் மாநில சங்கங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அது தீவிர பிரச்சினையாக உருவெடுக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் செல்வாக்கு மிக்கது. ஐ.பி.எல். போன்ற போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம்.பணம் இல்லாமல் எங்களால் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பணம் எதுவும் பெறாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. கணக்கில் இருந்து பணத்தை விடுவிக்க முடியாது என்று வங்கிகள் சொல்கின்றன. எதிர்பாராத இந்த நிலை நீடித்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் எதுவும் செய்ய முடியாது. இதற்கு விடை காணப்பட வேண்டியது அவசியமானதாகும். பெரும்பாலான மாநில சங்கங்களால் இந்த சீசனில் போட்டியை நடத்த முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த போட்டி தொடரை தங்களால் நடத்த முடியுமா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments