KALVISOLAI TNPSC

Monday, 10 October 2016

தண்ணீர் சேர்த்தால் இயங்கும் தடுப்பூசி மருந்து!

தண்ணீர் சேர்த்தால் இயங்கும் தடுப்பூசி மருந்து!

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனும் பழ மொழியை கேட்டிருப்போம். உப்பு இல்லாமல் பெரும்பாலான உணவுகளை சாப்பிட முடியாது. உப்பு சேர்த்தால்தான் உணவு ருசிக்கும். ஆனால் அதே உப்பை சேர்ப்பதன் மூலம் பல உணவுகளை கெட்டுப்போகாமல் பல நாட்கள், மாதங்கள் வரை பாதுகாத்து, சேமித்து வைத்து உண்ண முடியும். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளை வலியுறுத்துகிறது இந்த பழமொழி.

அதுபோல, நம்மை பல்வேறு நோய்களிடம் இருந்து பாதுகாக்க பல்வேறு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த தடுப்பூசிகள் அனைத்தும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஒரு குளிர்பதனப்பெட்டி வேண்டும். ஏனென்றால் தடுப்பூசிகளை குளிர்ந்த நிலையில் பராமரித்தால் மட்டுமே அது செயலிழக்காமல் வீரியத்துடன் இருக்கும். ஆக, 'குளிர்ந்த நிலையில் வைத்து பராமரிக்கப்படாத தடுப்பூசிகள் குப்பையிலே' என்றுதான் கூற வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, தடுப்பூசிகளை குளிர்ந்த நிலையில் வைத்து பராமரிக்க மின்சார வசதி மற்றும் குளிர்பதனப்பெட்டிகள் இல்லாத காரணத்தாலேயே உலகின் பல ஏழை நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பல்வேறு உயிர்கொல்லி நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து போகின்றனர். இந்த நடைமுறைப் பிரச்சினையை தீர்க்க உலக விஞ்ஞானிகள் குளிர்ந்த நிலையில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகை தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய பல வருடங்களாக முயன்று வருகின்றனர்.

அத்தகைய ஒரு சீரிய முயற்சியில் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் காலின்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழு ஈடுபட்டு வந்தது. அவர்கள், குளிர்ந்த நிலையில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியமற்ற, ஆனால் அதேசமயம், தண்ணீர் மட்டுமே சேர்த்தால் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் உடனடியாக மாறிவிடக் கூடிய மருந்துகள் அல்லது மருந்துகளின் மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு மருந்துப்பெட்டியை (kit) உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள்.

'இடம்பெயரக்கூடிய உயிர்மூலக்கூறு உற்பத்தி' (portable biomolecular manufacturing) என்று அழைக்கப்படும் இந்த புதிய மருந்து உற்பத்தி தொழில்நுட்பமானது, பெரும்பாலான உயிர்காக்கும் மருந்துகளில் இருக்கக்கூடிய அடிப்படை ரசாயனங்கள் மற்றும் உயிர்மூலக்கூறுகளை உறைய வைப்பதன் மூலம் காய வைக்கப்பட்ட மாத்திரைகளின் (freeze dried pellets) அடிப்படையில் செயல்படுகிறது என்கிறார் விஞ்ஞானி ஜேம்ஸ்.

உலகின் எந்த மூலையிலும் இருந்துகொண்டு, தண்ணீரை மட்டும் பயன்படுத்தி உடனடியாக எந்த ஒரு மருந்தையும் உற்பத்தி செய்யக்கூடிய திறன்கொண்ட இந்த கையடக்க மற்றும் இடம்பெறக்கூடிய மருந்துப் பெட்டியின் மூலம் மருத்துவம் மற்றும் அறிவியலை உலகம் மொத்தத்துக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்கிறார் ஜேம்ஸ்.

இந்த மருந்துபெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று, குறிப்பிட்ட மருந்தை தயாரிக்கத் தேவையான ரசாயனங்களைக் கொண்ட மாத்திரைகள் உள்ள ஒரு பகுதி. மற்றொன்று, அந்த ரசாயனங்களை குறிப்பிட்ட ஒரு மூலக்கூறை உற்பத்தி செய்யச் சொல்லி கட்டளையிடும் டி.என்.ஏ தகவல்களை உள்ளடக்கிய மாத்திரைகள் கொண்ட மற்றொரு பகுதி. இந்த இரண்டு பகுதிகளையும் குறிப்பிட்ட ஒரு சேர்க்கையின் அடிப்படையில் கலந்து, பின்னர் அதனுடன் தண்ணீரைச் சேர்த்துவிட்டால் போதும். குறிப்பிட்ட ஒரு நோய்க்கான தடுப்பூசி அல்லது ஒரு சிகிச்சைக்கான மருந்து தயார்.

இந்த அதிசய மருந்துப்பெட்டியைப் பயன்படுத்தி எல்லா வகையான மருந்துகளையும் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் விஞ்ஞானி ஜேம்ஸ். உதாரணமாக, டெட்டானஸ் மற்றும் ப்ளூ தடுப்பூசி மருந்துகள், புதிதாக தோன்றிவரும் பல்வேறு வகையான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், தசைக் காயங்களை குணப்படுத்தக்கூடிய ஆண்டி மைக்ரோபியல் பெப்டைட்ஸ் (antimicrobial peptides) மற்றும் இதர பல மருந்துகளையும் இந்த மருந்துப்பெட்டி மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் ஜேம்ஸ்.

இந்த ஆய்வில் டிப்தீரியா நோய்க்கு எதிரான தடுப்பூசியானது மருந்துப்பெட்டி மூலம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மருந்தை வாங்கக்கூடிய வசதி மட்டுமல்லாமல், அதனை செயல்படும் நிலையில் புத்தம் புதிதாகவே வைத்து பாதுகாக்க முடியாத, மின்சார வசதிகள் மற்றும் மருத்துவமனைகளை எட்ட முடியாத நெடுந்தூரத்தில் இருக்கும்போது (உதாரணமாக சுனாமி அல்லது பூகம்பம் போன்ற இயற்கை சீற்றத்தில் மாட்டிக்கொண்டபோது) இந்த மருந்துப்பெட்டி கையில் இருந்தால் அது எவ்வளவு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தால் இதன் மதிப்பை புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தடுப்பூசி போன்ற மருந்துகள் சேமிப்பு மற்றும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்லப்படும் போது என அனைத்து நேரங்களிலும், தடையில்லாத குளிர்நிலை பராமரிப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அதிசய மருந்துப்பெட்டி கையில் இருந்தால், உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கூட, மருத்துவர்களால் வைத்தியம் செய்து பல உயிர்களை காக்க முடியும் என்கிறார் விஞ்ஞானி ஜேம்சின் ஆய்வுக்குழுவில் ஒருவரான ஆய்வாளர் கீத் பார்டீ!

இந்த மருந்துப்பெட்டியில் உள்ள மாத்திரைகள் மிகவும் மலிவான விலையில் தயாரிக்கக் கூடியவை மற்றும் மிகவும் திடமானவை என்பதோடு, அறை வெப்பநிலையில் சுமார் ஒரு வருட காலம் வரை வீரியமுள்ள நிலையில் தாக்குப்பிடிக்கக் கூடியவை என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் திடீரென்று ஒரு நோய் பரவகூடிய வாய்ப்பு அல்லது ஆபத்து இருக்கிறது எனும் சூழலில் உடனடியாக அந்தப் பகுதிக்குத் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடிய குறிப்பிட்ட மருந்துப்பெட்டியை அங்கு விநியோகம் செய்ய முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, பூமியில் உள்ள பாதி மக்கள் வசதிகள் குறைந்த கிராமப்புறங்களில் இருப்பதால் இந்த மருந்துப்பெட்டி பெரிதும் பயன்படும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதே மருந்துப்பெட்டி விண்வெளியில் கூட பயன்படக்கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். உண்மைதான்!

No comments:

Post a comment