வேறு கிரகங்களில் 'உயிரினம்' உண்டா?

வேறு கிரகங்களில் 'உயிரினம்' உண்டா?

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் லீராய் சியாவோ, வேறு கிரகங்களில் உயிர்கள் இருக்கின்றன என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஸ்பேஸ்.காம் இணைய தளத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், 'இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளை கடந்ததும், எல்லையற்றதுமான இந்த பிரபஞ்சத்தில், பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இருக்காது என்று நினைப்பது, ஆணவத்தின் உச்சம்' என்று தெரிவித்திருக்கிறார். நாசாவுக்காக விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு, நான்கு முறை சென்று, மொத்தம், 230 நாட்களை விண்வெளியில் கழித்தவரான லீராய்க்கு தற்போது, 56 வயதாகிறது. இவர், விண்வெளி நிலையத்தின் பராமரிப்புக்காக, ஆறு முறை வெற்றிகரமாக, 'விண்வெளி நடை' மேற்கொண்டவர். மேலும், 'இயற்கையையும், தொழில்நுட்பத்தையும் வைத்து செழித்த மனித இனம், அதே இயற்கை விளைவிக்கும் பேரிடர் அல்லது தொழில்நுட்பம் இழைக்கும் தீங்குகளால் ஒரு காலத்தில் பூமியிலிருந்து பூண்டோடு அழிய நேரிடலாம்' என்றும் லீராய் தெரிவித்துள்ளார்.தவிர, 'செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு கீழே ஏதாவது உயிரினம் இருக்க வாய்ப்புள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரகம் முற்றிலும் வேறு ஒரு இடமாக இருந்தது' என்றும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது அவரது சொந்தக் கருத்து; நாசாவின் கருத்து அல்ல. என்றாலும், வேற்று கிரகவாசிகள் இருப்பதாக நம்புவோர், லீராயின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு, 'பார்த்தீர்களா, நாசா ஏற்கனவே வேற்றுகிரகவாசிகளிடம் தொடர்பில் இருக்கிறது. அதை, இப்போது தான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது' என்கிற ரீதியில் வாதிட ஆரம்பித்துள்ளனர். இத்தனைக்கும், அவர் உயிரினம் என்று தான் சொன்னாரே தவிர, மனிதனைப் போலவே புத்திசாலி வேற்று கிரகவாசிகள் இருப்பதாக சொல்லவில்லை.

Comments